

இளமை புதுமை இணைப்பில் வெளியான ‘யாரு வச்ச பேரு’ கட்டுரையைப் படித்ததும் என் கைகள் பரபரத்தன. மாணவர்கள் எல்லாம் அசத்தலாகப் பெயர் வைக்கும்போது, அவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் பேராசிரியர்களான நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? அடுத்தவர்களுக்குப் பெயர் வைப்பதால் கிடைக்கிற ‘பேர்’ ஆனந்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
எங்கள் கல்லூரியில் காற்றடித்தால் பறந்துவிடக்கூடிய உடல்வாகுடன் ஒரு பேராசிரியர் இருப்பார். அவர் வரும்போது நாங்கள் பாடும் பாட்டு, ‘குச்சி குச்சி ராக்கம்மா’. ஆங்கிலத் துறை பேராசிரியர் ஆங்கிலத்தைப் பிய்த்து உதறினாலும் தமிழைப் பிய்த்துப் பிய்த்துதான் பேசுவார்.
அந்தக் கொஞ்சு தமிழுக்காகவே அவர் எங்களுக்கு ‘மழலைச் செல்வி’ ஆகிவிட்டார். முதுகலைப் பேராசிரியர் ஒருவர் எப்போதும் தன்னைப் புகழ்ந்துகொண்டே இருப்பார். அதுவும் தன் அடர்நிறம் குறித்த கர்வம் அவருக்குச் சற்று அதிகம். அந்தக் கர்வத்துக்காகவே ‘பிளாக் பியூட்டி’ என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தோம்.
கைக்குழந்தை வைத்திருக்கும் பேராசிரியர்கள் மதியம் 12 மணிக்கு வீட்டுக்குச் சென்றுவர அனுமதி உண்டு. தன் குழந்தை வளர்ந்து, பள்ளிக்குச் சென்ற பிறகும் தினமும் 12 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பிவிடுகிற பேராசிரியருக்குப், ‘பாலூட்டி வளர்த்த கிளி’ என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்திப்போனது.
தங்கள் வீட்டு நாயைப் பற்றிப் புகழும் பேராசிரியருக்கு ‘நாயாலஜி’, கொண்டை போடாமல் வருகிற பேராசிரியருக்குக் ‘குதிரைவால்’, அதிகமாக மேக் - அப் போடுகிறவருக்கு பவுடர் தின்னி, மேஜை மேல் அமர்ந்து பாடம் நடத்துகிறவருக்கு ‘டேபிள் டாப்’, அதிகமாகப் பேசினால் ‘காகாச்சி’ என்று எங்கள் காரணப் பெயர்களின் பட்டியல் கணக்கிலடங்காமல் நீளும்.
- குட்டி மிஸ் என்கிற கன்னுக்குட்டி.