

இணையம் உருவான கதையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா? தொடக்க காலத்தில் தகவல்களை வகைப்படுத்துவதற்காக ‘முண்டேனியம்’ (Mundaneum) எனும் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்தாக்கத்தை, பெல்ஜியத்தைச் சேர்ந்த பால் ஆட்லெட் (Paul Otlet), ஹென்றி லா பாண்டென் (Henri La Fontaine) ஆகியோர் ஏற்படுத்தினார்கள். இது உலக அறிவுக்கான மையக் களஞ்சியம் போன்ற ஒரு கருத்தாக்கமாக அமைந்தது.
இது 15 மில்லியன் இண்டெக்ஸ் கார்டுகள், ஒரு லட்சம் கோப்புகள், லட்சக்கணக்கான ஒளிப்படங்களைக் கொண்டிருந்தது. 1934-ல் ஆட்லெட், இதை மேலும் மேம்படுத்தி, ‘கதிராக்க நூலகம்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். உலகம் முழுவதும் உள்ள மக்கள், மைய இயந்திரக் கூட்டு மூளையிடம் தொலைபேசி மூலம் தகவல் கேட்டு, அதைத் தொலைக்காட்சி சிக்னல் வடிவில் பெறும் வகையில் இது அமைந்தது.
இதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே, 1728-ல் எப்ரியம் சேம்பர்ஸ் (Ephraim Chambers) எனும் லண்டன் வரைபட வல்லுநர், ‘சைக்ளோபீடியா’ எனும் யோசனையைக் குறிப்பிட்டிருந்தார். கலைக்களஞ்சியத்தில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை.
இணைய வடிவம் அல்லது செயல்பாட்டின் அடிப்படைக் கீற்றுகளை இந்த எண்ணங்களில் பார்க்கலாம். எனினும், இவற்றிலிருந்துதான் இணையம் உருவானது எனக் கூற முடியாது. அந்தப் பெருமை அமெரிக்கரான வான்னெவர் புஷ் (Vannevar Bush) உருவாக்க விரும்பிய ‘மெமிக்ஸ்’ எனும் இயந்திரத்துக்கே உரியது.
1945-ல் ‘தி அட்லாண்டிக்’ இதழில், வான்னெவர் புஷ் எழுதிய ‘ஆஸ் வி மே திங்க்’ எனும் நீளமான கட்டுரையில்தான் இந்த இயந்திரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இணையத்துக்கான முன் சிந்தனை இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கட்டுரை வெளியான 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான், இணையம் உருவாக்கப்பட்டது. என்றாலும், இணையத்துக்கான கருத்தாக்கத் தொடக்கப் புள்ளியாக இந்தக் கட்டுரையே பெரும்பாலும் கருதப்படுகிறது. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இணைய முன்னோடிகள்
பலருக்கும் ஊக்கம் அளித்த வழிகாட்டி ஆவணமாக இது போற்றப்படுகிறது.
இணையத்தின் ஆரம்ப விதையான ‘அர்பாநெட்’ எனும் வலைப்பின்னல் உருவாகக் காரணமாக இருந்த அமெரிக்க ராணுவம்- பல்கலைக்கழகங்கள் இடையே கூட்டு ஏற்படக் காரணமாக இருந்தவரும் இவரே.
மெமிக்ஸை ஒரு நினைவு நீட்டிப்பு சாதனமாக அவர் கற்பனை செய்திருந்தார். அதில் அனைத்து தனிநபர்களும் தங்கள் புத்தகங்கள், ஆவணங்கள், தகவல் தொடர்புகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவையானபோது அணுகக்கூடிய வகையில் அசாதாரண வேகமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டிருக்கும் வகையில் இது இயந்திரமயமாக்கப்பட்டிருக்கும் என்றும் மெமிக்ஸ் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.
அது ஒரு மேஜை, தொலைவில் இருந்து இயக்கலாம், அதில் தகவல்கள் தோன்றும் திரைகள் இருக்கும், கீபோர்டு, பட்டன்கள், விசைகளும் இருக்கும் என்று அவர் மெமிக்சை வர்ணிக்கிறார். புஷ் உருவகம் செய்த வகையிலான விஷயங்கள், இணையம் உருவான பின், வலை அறிமுகமான பிறகே சாத்தியமானது.
(வலை வீசுவோம்)
தொடர்புக்கு: enarasimhan@gmail.com