

இணையத்தின் கதை 1969-ம் ஆண்டில் தொடங்கியது என்பதும் ‘அர்பாநெட்’ எனும் ஆய்வுத் திட்டமே அதன் தொடக்கப் புள்ளி என்பதும் பரவலாகத் தெரிந்த விஷயம்தான். மேலும், இணையம் ராணுவ ஆய்வுத் திட்டமாக உருவானதே. அதற்கு அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையிலான பனிப்போர் முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுவதும் அறிந்ததே.
அணு ஆயுத போர் மூண்டு, எந்தப் பகுதி தாக்கப்பட்டாலும் மற்ற பகுதி பாதிக்கப்படாமல் இயங்கக்கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது இணையத்துக்கான முக்கிய ஊக்கமாக அமைந்தது. இதில் மாறுபடுபவர்களும் இருக்கின்றனர்.
ஆனால், இணையத்துக் கான கருத்தாக்கம் இவற்றுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கும் இங்கும் கீற்றுகளாக உதயமாக தொடங்கி விட்டது. இணையம் என்பதற்கான தெளிவான ஸ்தூல வடிவம் யார் மனத்திலும் இல்லை என்றாலும், அதை நோக்கிய பாதைக்கான வழிகாட்டுதலைக் கொண்டிருக்கும் முக்கியச் சிந்தனைகளை கணினி மேதைகள் பலர் முன் வைத்திருக்கின்றனர்.
இந்தச் சிந்தனைகள் அவை முன்வைக்கப்பட்ட காலத்தில், இவை எல்லாம் எப்படிச் சாத்தியம் என வியக்கக்கூடியதாகவும் அறிவியல் புனைகதைச் சங்கதிகளோ மயங்க வைப்பதாகவும் இருந்திருக்கின்றன. மேதைகளின் தீர்க்கதரிசனமும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இணையம் படிப்படியாக உருவாக வழிசெய்தது.
இணையம் உருவான கதையைச் சுருக்கமாகப் பார்ப்பதற்குமுன், இணையத்தின் பூர்வ கதையை, அதன் கருத்தாக்க அடித்தளத்தைப் பார்க்கலாம்.
இணையம் என்பதை அடிப்படையில் கணினிகளின் வலைப் பின்னல் எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு கணினி, வலைப் பின்னலில் உள்ள இன்னொரு கணினியுடன் பேசிக்கொள்வதன் மூலம் தகவல் பரிமாற்றமும் இணையம் சார்ந்த இன்ன பிற சேவைகளும் சாத்தியமாகின்றன. ஆனால், இணையத்தை உருவாக்கலாம் என்று எந்த ஒரு தனிநபரும் திட்டமிட்டு இதற்கான பணியில் ஈடுபடவில்லை.
வெவ்வேறு காலகட்டத்தில் தொழில்நுட்பத் தொலைநோக்குடன் பலரும் தங்கள் துறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்படிப் பல்வேறு புள்ளிகளில் ஒன்றிணைந்த கருத்தாக்கங்களும் சிந்தனை வடிவங்களுமே இணையம் எனும் வலைப்பின்னலாகப் பரிணமித்தது.
சொல்லப்போனால், இணையத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் உருவாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, பல விஞ்ஞானிகள் உலகளாவிய வலைப்பின்னலை எதிர்பார்த்தனர். மின்சாரக் கண்டுபிடிப்பில் எடிசனின் போட்டியாளராகத் திகழ்ந்த நிக்கோலா டெஸ்லா, உலகளாவிய வயர்லெஸ் அமைப்பைக் கற்பனை செய்தார்.
அறிவியல் புனைவுக் கதை எழுத்தாளரான எச்.ஜி.வெல்ஸ், ‘உலக மூளை’ என்பதைக் கற்பனைசெய்து எழுதினார். ‘மொத்த மனித நினைவுத் திறனும், ஒவ்வொரு மனிதரும் அணுகும் வகையில் உருவாக்கப்படலாம். குறுகிய காலத்தில் இது உருவாக்கப்படவும் செய்யும்” என 1936-ல் அவர் எழுதினார்.
அதற்கு முன்னர், 1910-ம் ஆண்டில் பெல்ஜியத்தைச் சேர்ந்த பால் ஆட்லெட் (Paul Otlet) என்பவர், ஹென்றி லா பாண்டென் (Henri La Fontaine) என்பவருடன் இணைந்து உலக அறிவுக்கான மையக் களஞ்சியம் போன்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தார். இதற்காக இவர்கள் ‘முண்டேனியம்’ (Mundaneum) எனும் கருத்தாக்கத்தை உருவாக்கினர். தகவல்களை வகைப்படுத்துவதற்கான உலகளாவிய முறையாக இது அமைந்தது.
(வலை வீசுவோம்)
தொடர்புக்கு: enarasimhan@gmail.com