இளமை .நெட்: படிக்க வழிகாட்டும் இணையதளங்கள்!

இளமை .நெட்: படிக்க வழிகாட்டும் இணையதளங்கள்!
Updated on
2 min read

இணையம் மூலமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் காலம் இது. ஆர்வம் காரணமாக அறிந்துகொள்ள விரும்பும் விஷயங்களில் தொடங்கி, தொழில்முறையாகக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்திட்டங்கள்வரை நிறைய விஷயங்களை இணையம் மூலமே கற்றுக்கொள்ள முடியும். இணையம் வழியே கற்றுக்கொள்வதற்கான விஷயத்தைத் தேர்வுசெய்வதில் உங்களுக்குக் குழப்பம் இருந்தாலோ வழிகாட்டல் தேவை என்றாலோ, ‘லேர்ன் எனிதிங்’ (https://learn-anything.xyz/) என்ற இணையம் வழிகாட்டுகிறது.

எதையும் கற்றுக்கொள்ள இந்தத் தளம் வழிகாட்டுகிறது என்பதுதான் இதன் சிறப்பு. ஆனால், அதற்காக இணையத்தில் எண்ணற்ற தலைப்புகளில் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்திட்டங்களை எல்லாம் பட்டியலிடவில்லை. அதற்கான பாதையை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில் இந்தத் தளத்தை இணையக் கற்றலுக்கான கூகுள் எனலாம். இந்தத் தளத்தின் முகப்பில் உள்ள தேடல் கட்டத்தில், கற்றுக்கொள்ள விரும்பும் தலைப்பை ‘டைப்’ செய்து, அதற்கான வழிகாட்டுதலைப் பெறலாம்.

கற்க விரும்பும் தலைப்பைத் தேடல் கட்டத்தில் ‘டைப்’ செய்தவுடன், அந்தத் தலைப்பு தொடர்பாக இணையத்தில் உள்ள கற்றல் தளங்களையும் இதர தகவல்களையும் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, போட்டோஷாப் கற்றுக்கொள்ள விருப்பம் எனத் தேடினால், போட்டோஷாப் தொடர்பான அடிப்படை விவரங்களை அளிக்கும் விக்கிபீடியா பக்கமும் போட்டோஷாப் அடிப்படையைக் கற்றுக்கொள்ள உதவும் வீடியோக்களும் பட்டியலிடப்படுகின்றன. சுட்டிக்காட்டப்படும் இணைப்புகளை ‘கிளிக்’ செய்து மூல தளங்களைப் பார்க்கலாம்.

இதேபோல ஒளிப்படக் கலை தொடர்பாகத் தேடினால், ஒளிப்படக்கலை தொடர்பான ‘ரெட்டிட்’ பக்கம் உள்ளிட்ட தகவல்கள், அடிப்படைத் தகவல்கள் தொடர்பான இணையதளங்கள், ஒளிப்படக் கலை வழிகாட்டுதல் தளங்கள், ஒளிப்படக் கலை எடிட்டிங் கருவிகள், அடோப் லைட்ரூம் வழிகாட்டி ஆகிய இணைப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நிச்சயம் இது முழுமையான பட்டியல் அல்ல. கூகுளில் தேடினால் இதைவிட அதிகத் தளங்களையும் பக்கங்களையும் பார்க்கலாம். ஆனால், குறைவாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், இந்தத் தளத்தின் பரிந்துரைகள் குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்கின்றன. மேலும், அடிப்படையில் இது வழிகாட்டுதல் தளம்தான். அதாவது, ஒரு தலைப்பை எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கான இணைய இருப்பிடங்களைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இணையக் கற்றலுக்கான தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக இந்தத் தளத்தை வைத்துக்கொள்ளலாம்.

‘கண்டறிதல் தளம்’ என்றழைக்கப்படும் இந்தத் தளத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. இதில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் சக இணையவாசிகளால் பரிந்துரைக்கப்பட்டவை. இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்தால் நீங்களும் தரவுகளைப் பரிந்துரைக்கலாம்.

பயனாளிகள் பங்கேற்பால் உருவாகிவருவதால் இந்தத் தளம் வருங்காலத்தில் இன்னும் மேம்படலாம். இதே போலவே, ‘கோர்ஸ்ரூட்’ (https://courseroot.com) இணையதளத்தை முயன்று பார்க்கலாம். இந்தத் தளம் இணையப் பாடத்திட்டங்களுக்கான தேடு இயந்திரம். கற்றுக்கொள்ள விரும்பும் தலைப்பை ‘டைப்’ செய்தால் அந்தத் தலைப்புக்கான இணையப் பாடத்திட்டங்களை இது பட்டியலிடுகிறது. தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே பல்வேறு தலைப்புகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் விரும்பியதைப் பார்க்கலாம்.

மென்பொருள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் லேர்னி (https://www.learney.io) இணையதளத்தை முயன்று பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in