

சென்ற ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை யார் தெரியுமா? ஜமைக்காவைச் சேர்ந்த 21 வயதான கதிஜா ஷா. பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ இந்த விருதை இவருக்கு வழங்கியது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த விருதை மூன்றாவது முறையாக அவர் பெற்று ஆச்சரியமூட்டியிருக்கிறார்.
இந்த ஆண்டு பிரான்ஸில் மகளிர் உலகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்க ஜமைக்கா மகளிர் அணியும் தேர்வாகியுள்ளது. ஜமைக்கா மகளிர் அணியின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணகர்த்தா கதிஜா ஷா.
ஜமைக்காவில் நடந்த உள்ளூர்ப் போட்டிகளில் கதிஜாவின் ஆட்டம் அனைவரவது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அமெரிக்காவில் டென்னசி பல்கலைக்கழகத்தில் படித்துவரும் கதிஜா தன்னுடைய குடும்பத்தின் முதல் பட்டதாரி. ஜமைக்காவில் உள்ள ஸ்பானிஷ் நகரம்தான் கதிஜாவின் சொந்த ஊர். இன்று உலக அளவில் சிறந்த வீராங்கனையாக உருவெடுத்துள்ள கதிஜாவின் தந்தை காலணி தயாரிக்கும் தொழிலாளி. தாய் கோழிகளை வளர்த்து விற்பனை செய்பவர். அவரோடு சேர்ந்து ஏழு சகோதர்கள், ஐந்து சகோதரிகள் உள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கதிஜா, ஜமைக்காவில் நடைபெற்ற இனக்குழு மோதலால் தன்னுடைய இளமைக் காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர். ஆண் நண்பர்கள் கால்பந்தாட்டம் விளையாடுவதை வேடிக்கை பார்த்துவந்த கதிஜாவுக்கு ஒரு கட்டத்தில் தானும் விளையாட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆரம்பத்தில் கதிஜாவின் கால்பந்தாட்டம் விளையாட அவருடைய அம்மா மறுத்தாலும், பிறகு அவரின் திறமையைக் கண்டு அவரைச் சுதந்திரமாக விளையாடவிட்டார்.
கதிஜா ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே அவருக்கு 15 வயதுக்கு உட்பட்டோரான தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொண்டார் கதிஜா, இன்று பல்வேறு தடைகளைக் கடந்து, இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் ஜமைக்காவில் இளம் வீராங்கனைகளுக்கு ரோல் மாடலாக மாறியிருக்கிறார். அந்தக் காரணத்தாலேயே விருதுகள் அவரைத் தேடிவருகின்றன.