Last Updated : 12 Feb, 2019 10:30 AM

 

Published : 12 Feb 2019 10:30 AM
Last Updated : 12 Feb 2019 10:30 AM

ஓவியங்களுக்கு உயிரூட்டியவர்!

ஓவியக் கலை வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ‘போர்ட்ரெய்ட்’ ஓவியங்கள் வரைவது சுலபம். ஆனால், 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு பென்சிலைக் கொண்டு ‘போர்ட்ரெய்ட்’ ஓவியங்களை வரைந்து சர்வதேசத் தலைவர்களின்  பாராட்டைப் பெற்றிருக்கிறார் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் கிளமென்ட் சகாயராஜ் லூர்து.

பேராசிரியர் பணி அவருக்கு முதன்மையாக இருந்தாலும், ஓவியர் என்ற அடையாளத்தை அவர் இழக்கவில்லை. முறையாக ஓவியப் பயிற்சி பெறாத கிளமென்ட், தன்னுடைய சிறுவயதிலிருந்து  சுயமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்டவர். ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, பாரதிதாசன், ஆபிரகாம் லிங்கன், காஞ்சி பெரியவர், ஸ்ரீ ரமண மகரிஷி, பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், சுதா ரகுநாதன்,  வீணை காயத்ரி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கமலா தாஸ் ஆகியோரின் ‘போர்ட்ரெய்ட்’ ஓவியங்களைத் தத்ரூபமாக வரைந்து பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இந்த ஓவியங் களை பென்சில், வாட்டர் கலர் பயன்படுத்தியும் வரைந்துள்ளார் கிளமென்ட்.  இவர் வரைந்த நாட்டின் முதல் போர் விமானத்தின் பென்சில்  ஓவியம் குவாலியர் விமானப்படை அருங்காட்சியகத்தில் தற்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

oviyangalukku-3jpgright

தான் வரைந்த ஓவியங்களைச் சம்பந்தப்பட்டவர்களிடமே நேரில் சென்று வழங்குவது இவரது வாடிக்கை.

நேருவின் பென்சில் ஓவியத்தை அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்திக்கு அனுப்பினார். அந்த ஓவியத்தைப் பாராட்டி தன் கைப்பட வாழ்த்து மடலை எழுதி அனுப்பினார் ராஜிவ் காந்தி.

இதேபோல அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் புஷ், முன்னாள் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர், அன்னை தெரசா  ஆகியோருக்குத் தான் வரைந்த ஓவியங்களை அனுப்பி அவர்களது வாழ்த்து மடல்களைப் பெற்றிருக்கிறார்.

தேசிய, சர்வதேசத் தலைவர்களிடமிருந்து பெற்ற வாழ்த்து மடல்களையும் ஓவியங்களையும் தனிப் புத்தமாகவே இவர்  தயாரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x