

திரைப் பிரபலங்களைத் திரையிலும் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு மகிழ்ந்த ரசிகர்களுக்கு, அவர்களை மேசையில் வைத்துப் பார்க்க வழி செய்திருக்கிறது ‘கிக்ஸ் மை 3டி’ என்ற நிறுவனம். மேலைநாடுகளில் பிரபலமாக உள்ள 3டி சிலைகளைப் போல் இங்கேயும் பிரபலங்களை வைத்து சிலைகளை வடிவமைத்து ரசிகர்களை ஈர்த்துவருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்நிறுவனத்துக்குச் சென்றால், ‘பேட்ட’ ரஜினி, ‘விஸ்வாசம்’ அஜித் தொடங்கி ஏராளமான திரைப்பிரபலங்கள் மினியேச்சர் பொம்மைகளாக வரவேற்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், முதன் முதலில் ‘2.0’ திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டி கதாபாத்திரத்தை பொம்மையாக உருவாக்கியது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அடுத்தடுத்த பிரபலங்களின் சிலைகளைச் செய்யத் தொடங்கியிருக் கிறார்கள் இந்நிறு வனத்தை நடத்திவரும் பிரவின் டேனியலும் பூஜாவும்.
கட்டிடக் கலை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவர்கள், அதில் கிடைத்த அனுபவத்தை வைத்துதான் இதைத் தொடங்கியிருக்கிறார்கள். மனித உருவத்தைப் பொம்மையாகச் செய்ய மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்களிடம் பயிற்சி எடுத்த பிறகே 3டி தொழில்நுட்பத்தில் மினியேச்சர் பொம்மைகள் செய்வது இவர்களுக்கு சாத்தியமானது.
திரைப்பிரபலங்களின் பொம்மையைச் செய்ய ‘சாண்ட் ஸ்டோன்’ எனும் மண்ணை இவர்கள் பயன் படுத்துகின்றனர்.
மினியேச்சர் பொம்மைகளுக்கு வரவேற்பு உள்ளதா என்று டேனியலிடம் கேட்டோம். “நடிகர் கமலை மினியேச்சராக வடிவமைத்த பிறகு, அதைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தோம். அப்போதுதான் இதைப் பற்றிப் பலருக்கும் தெரியவந்தது. இதைப் பார்த்த ஒருவர், தான் வளர்க்கும் காங்கேயம் காளை பொம்மையைச் செய்து கொடுக்குமாறு கேட்டார்.
இதன்பிறகு பலரும் எங்களை நாடத் தொடங்கினார்கள்” என்கிறார் டேனியல். திரைப்பிரபலங்கள், விலங்குகள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் உருவத்தையும் மினியேச்சர் பொம்மையாக இவர்கள் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள்.