

கோடைகாலம் முடிந்த பிறகும்கூட நம்மூரின் கொளுத்தும் வெயிலிலிருந்து கண்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், உடைக்கு ஏற்ற வகையில் வண்ண வண்ண மாடல் கண்ணாடிகளை அணிந்து செல்வதும் இப்போதைய பேஷன். அந்த வரிசையில், ஆன்லைன் மார்கெட்டில் இப்போதைய டிரண்டாக இருப்பது விதவிதமான கூலிங் கிளாஸ்கள்தான்.
வெறும் அழகுப்பொருளாக மட்டுமின்றி பைக் ஓட்டும்போது அணிவது, வெஸ்டர்ன் ஆடையுடன் அணிவது எனப் பயன்பாட்டின் பெயரிலும் வகைப்படுத்தப்படும் இந்த கூலிங் கிளாஸ்கள் 300 ரூபாய் முதல் 27,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
என்னதான் பல வித்தியாசமான வடிவங்களில் வெவ்வேறு பிராண்டுகளில் விற்கப்பட்டாலும், அனைத்து மாடல்களுக்கும் தனித்துவமான சிறப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என பிரத்யேக டிசைன்களில் விற்கப்படும் கூலிங் கிளாஸ்களின் இப்போதைய டிரெண்டு…
ரே-பான் ஏவியேட்டர் (Ray-Ban Aviator)
இந்த ரே-பான் ஏவியேட்டர்களை கூலிங் கிளாஸ்களின் முன்னோடி என்று சொல்லாம். முன்பு வான்படை வீரர்கள் தங்கள் கண்களைப் பாதுகாப்பதற்காக அணிந்ததாலேதான் இவை ‘ஏவியேட்டர் கிளாசஸ்’எனப் பெயர் பெற்றது. நீர் துளி போன்ற வடிவம் கொண்ட லென்ஸ், மெல்லிய மெட்டல் ஃபெரேம் (metal frame) ஆகியவை இதன் தனிச்சிறப்புகள். இந்த வகை ஏவியேட்டர் கண்ணாடிகளை அதிகம் உற்பத்தி செய்வது ரே-பான் (Ray-Ban) நிறுவனம் தான்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி ரகங்களாக விற்கப்படும் இவை மேற்கத்திய உடைகளோடு அணியப்படும்போது, ரெட்ரோ உணர்வை அளிக்கிறது. ஹாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் இந்த ஏவியேட்டர் கிளாஸ்கள் லென்ஸிற்கும், நிறங்களுக்கும் ஏற்றாற்போல் ரூ.4000 முதல் ரூ.8000 வரையில் விற்கப்படுகிறது.
போலீஸ் கூலிங் கிளாஸ் (Police Sunglasses)
ஆண்களின் முக அமைப்புக்கென பிரத்யேக வடிவங்களைக் கொண்ட கூலிங் கிளாஸ்கள் இவை. அனைவரின் கவனத்தையும் கவரும் வண்ணம் அமைந்துள்ள இந்த வகைக் கண்ணாடிகளின் விலை ரூ.8000 முதல் ரூ.10,000 வரை. கிளாஸ்களின் திடமான அமைப்பும், பிளாஸ்டிக் ஃப்ரேமும் தான் இதன் சிறப்பு. இத்தாலிய பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூலிங் கிளாஸ், 20 வருட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக உள்ளது.
போலராய்ட் கண்ணாடிகள் (Poloroid sunglasses)
யூ.வி. கதிர்களிலிருந்து கண்களை முழுமையாகப் பாதுகாக்கும் அரிய வகை கண்ணாடிகளைத் தயாரிக்கிறது ‘போலராய்ட்’ நிறுவனம். இந்தக் கண்ணாடிகளில் இருக்கும் போலரைஸ்டு லென்ஸ்களை ‘பிரஸ் பாலிஷிங்’ (Press Polishing) என்ற முறையின் மூலம் தயாரிக்கின்றனர். கூலிங் கிளாஸின் நடுப்பகுதி மிதமான அளவிலும், வளைவுகள் மெல்லியதாகவும் இருப்பதே இதன் மற்றொரு சிறப்பாகும். இதன் விலை ரூ.5000 முதல் ரூ.8000 வரை.
ரே-பான் வேஃபாரர் (Ray-Ban Wayfarer Sunglasses)
பிளாஸ்டிக் மாடலிங் வந்த பிறகு ரே-பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண்ணாடி டிரெண்டே வேஃபேரர் ரகம். எளிதாக அணிய முடிவதும், ஸ்டைலான வடிவமைப்பும் தான் இதன் சிறப்பு. வட்டமான லென்ஸ், தடிமனான ஓரங்கள் உள்ள கண்ணாடிகள் இவை. வித்தியாசமான ஃப்ரேமின் வடிவங்களால் இவை இளைஞர்களிடத்தில் பிரபலமாக உள்ளன. கூலிங் கிளாஸ் என்றாலே கறுப்பு வண்ணத்தில் தான் இருக்கும் என்பதை மாற்றி நியான், நீலம், சிகப்பு போன்ற பல வண்ணங்களில் உள்ளன இந்த வேஃபேரர் வகைக் கண்ணாடிகள். இதன் விலை ரூ.5,500 - ரூ.8,000.
ஃபாஸ்டிராக் (Fastrack Sunglasses)
பிராண்டட் கூலிங் கிளாஸ்களில் விலை குறைவாகவுகம், தரமும் உள்ள ஒரு பிராண்ட் ஃபாஸ்டிராக். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருபாலருக்கும் ஏற்ற டிசைனர் கண்ணாடிகளை வடிவமைக்கிறது ஃபாஸ்டிராக். இவற்றின் விலை ரூ.500 முதல் ரூ.5000 வரை உள்ளன.
முக அமைப்பிற்கு ஏற்றவாறு ஆன்லைனிலேயே வாங்க லென்ஸ்கார்ட், ரே-பான் போன்ற தளங்களில் ‘வர்சுவல் மிரர்’ (virtual mirror) என்ற வசதி உள்ளது.
கண்களைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல் உடைக்கு ஏற்றாற்போல் லேட்டஸ்ட் டிரெண்டுகளையும் அணிந்து கலக்குவோம்.