

உடம்பை அழகுபடுத்தி தன்னைத் தனித்துக் காட்டும் ஆர்வம் இளமையின் துடிப்பின்போது சாதாரணம். கண்ணாடி முன்பு நிற்கும்போது, சபாஷ் சொல்லவைக்கும்படியான மேக்கப்புடன் காட்சியளித்தால் ஒரு ப்ரெஷ்னெஸும் பியூட்டியும் வரத்தான் செய்யும். இதனாலேயே, எல்லோருக்கும் மற்றவரிடமிருந்து தன்னைத் தனிப்படுத்திக் காண்பிப்பதில் கட்டுக்கடங்காத ஆர்வம் உண்டு.
பெண்களுக்கு அதுவும் இளமை துள்ளிவிளையாடும் பருவத்தில் அப்படியான இண்டிரெஸ்ட் இல்லாமலா இருக்கும். இந்த இண்ட்ரெஸ்ட்டால் ஏற்படும் அழகுணர்ச்சியின் விளைவு, ஏராளமான பியூட்டி பார்லர்கள் முக்குக்கு முக்கு முளைத்துள்ளன. வெரைட்டியான ஹேர் ஸ்டைல், ஃபேஸ் மேக்கப், மெகந்தி எனப் பல்வேறு வகைகளில் புதிது புதிதாக, அழகான பெண்கள் மேலும் மேலும் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் அலங்கரிக்கும்போது பளிச்சென்ற லுக் கிடைக்கும். அதனால்தான் அந்த மேக்கப் கலைஞருக்கு உதட்டில் புதுவகை கலையை உருவாக்கும் ஆசை வந்திருக்கிறது.
25 வயதான, லண்டன் மேக்கப் கலை நிபுணர் லாரா ஜென்கின்சனுக்கு மேக்கப்பில் விஷயத்தில் இன்னோவேடிவாக எதையாவது செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆசை. அவருக்கு மேக்கப்பில் எவ்வளவு ஆர்வமோ அவ்வளவு ஆர்வம் கார்ட்டூன் கேரக்டர்கள்மீதும். இந்த இரண்டையும் ஒன்றாக்கி புதுமையான லிப் ஆர்ட்டை உருவாக்கிவிட்டார். கடந்த வருடம் முழுவதும் இந்த ஆர்ட்டை விதவிதமாக இம்ப்ரூவ் பண்ணிக்கொண்டார். உதடுகளில் கலர்கலரான லிப்ஸ்டிக்கைப் பூசும் பெண்கள் மத்தியில் அவரது லிப் ஆர்ட் சும்மா டாப் கியரில் முன்னேறுகிறது. டிஸ்னி கார்டூன் கேரக்டர் மிக்கி மவுஸ், அலாடின், ப்ளூடோ போன்ற பல்வேறு படங்களை உதடு, நாடி ஆகிய பகுதிகளில் வரைவதுதான் அவரது லேட்டஸ்ட் ஸ்டைல். அந்த ஸ்டைல் ஒரு டிரண்டாக மாறி இளம் பெண்கள் மத்தியில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. அவர் வாயில் வரைந்த ஓவியங்களைப் பற்றி ஊர் உலகமெல்லாம் பேசுகிறது.
அவர் தனக்குப் பிடித்த படத்தை எடுத்து அதைத் தனது முகத்தில் பொருத்திக் கண்ணாடியில் பார்ப்பார். அது அவரை வசீகரித்துவிட்டால் போதும்; அதை அப்படியே உதடுகளை மையமாகக் கொண்டு உதடுகளைச் சுற்றி வரைந்துகொள்வார். அவரது ஒவ்வொரு படத்திற்கும் இன்ஸ்டாகிராமில் குறைந்தது 1,500 லைக்குகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு ரிச்சாக இருக்கும் பாலீஷான லிப்ஸ் மீதே நமது பார்வை டக்கென்று பாயும், கார்ட்டூன் கேரக்டர்கள் வரையப்பட்ட உதடுகள் எனும்போது உற்சாகம் கரைபுரளாதா என்ன!