

‘அது ஒரு சில்ர மெட்டர். விட்டுடு’ எனச் சின்ன விஷயங்களைப் பற்றிப் பேசும்போது சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே சில்லரை என்பது சின்ன விஷயமே இல்லை. பெட்டிக் கடை, மளிகைக் கடை, பஸ் எங்க போனாலும் சில்லரை இன்றைக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான். சில்லரைகளுக்கு கமிஷன் கொடுக்கும் கடைக்காரர்களும் உண்டு.
சில்லரைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக இன்றைக்குப் பல கடைகளில் மிச்சக்காசுக்குப் பதிலாக சாக்லேட் கொடுத்துவிடுகிறார்கள். வெளியூர்களில் சில தனியார் பேருந்துகளில்கூட 50 காசு சில்லரைக்குப் பதிலாக சாக்லேட் கொடுக்கும்
வழக்கம் இருக்கிறது. சாக்லேட் என்றாலே அது மிச்சக்காசு கொடுப்பதற்காக என்றாகிவிட்டது. பல கடைக்காரர்கள் சில்லரை இருந்தாலும் சாக்லேட் கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டனர். இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ஒரு முறையாகிவிட்டது. இந்தப் பின்ணனியை வைத்து இலங்கையைச் சேர்ந்த மதி. சுதா ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.
ஒரு சிறுவனின் தாய் வீட்டு மளிகைச் சமான்கள் வாங்கச் சொல்லித் தினமும் அவனைக் கடைக்கு அனுப்புவார். அவனும் அலட்டிக்கொள்ளாமல் கடைக்கு சைக்கிளில் சென்று, அவன் அம்மா சொன்ன பொருட்களை வாங்குவான். அப்போது கடைக்காரர் மீதிப் பணத்திற்குப் பதிலாக சாக்லேட், தீப்பெட்டி போன்ற பொருட்களைக் கொடுப்பார். ஒவ்வொரு முறையும் கடைக்கு வரும்போது இது தொடர்கிறது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவன் கடைக்காரரின் வியாபாரத் தந்திரத்திற்குச் சரியான பதில் கொடுப்பான். சின்னச் சின்னக் காட்சிகள் மூலமும் படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார் மதி.சுதா. நுகர்வோருக்கு விழிப்புணர்வை அளிக்கும் இந்தப் படம் குறும்படப் போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இப்படம் முழுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டது என்பதுதான். இயற்கை வெளிச்சத்தில் சாம்சங் எஸ்3 போனில் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பின்னணி இசைக்கும் சாம்சங் கேலக்ஸி டேப்லட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கருத்தாழமிக்கக் கதையை, மிகக் குறைந்த காட்சிகள் மூலம் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.