சமூக ஊடகங்களில் நண்பர்கள் அதிகமா?

சமூக ஊடகங்களில் நண்பர்கள் அதிகமா?
Updated on
1 min read

உலகில் எந்த வயதினர் அதிகத் தனிமையை விரும்புகிறார்கள்? பலரும் முதுமைப் பருவத்தைக் குறிப்பிடலாம். ஆனால், உண்மை அதுவல்ல. மற்ற எல்லா வயதினரையும்விட இளைஞர்கள்தாம் தனிமையை அதிகமாக உணர்கிறார்களாம். பிபிசி சமீபத்தில் நடத்திய  ஆய்வு முடிவு இதைத் தெரிவித்திருக்கிறது.

‘பிபிசி தனிமைச் சோதனை’ (BBC Loneliness Experiment) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 55,000 பேர் பங்கேற்றனர். இதில் 16 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட 40 சதவீதம் பேர் தனிமையை அதிகமாக உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக, வயதானவர்கள்தாம் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து நிலவும் நிலையில், இந்த ஆய்வு இளைய தலைமுறையினர் தனிமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது. அனுசரணையான பெற்றோர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் எனப் பல தரப்பினர் சூழ்ந்திருந்தாலும் தனிமையை உணர்வதாக இளைஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் பழக முடியாத காரணத்தாலேயே இளைஞர்கள் தனித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்ல, சமூக ஊடகங்களும் இளைஞர்களின் தனிமை உணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றன. வைஃபை காலத்து  இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தைச் சமூக ஊடகங்களில்தான் கழிக்கிறார்கள். இந்தப் பழக்கம் அவர்கள் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இணையத்தில் இப்படி அதிக நேரத்தைச் செலவிடுவதால் தனிமை, சமூகம் சார்ந்த பயம், மன அழுத்தம் போன்றவற்றால் இளைஞர்கள் பாதிப்படைவதாகவும் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதிகமான நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள்தாம் தனிமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தனிமை உணர்வால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நபர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதைத் தவிர்ப்பதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்  நேர்மறை அம்சங்கள் இருந்தாலும், ஏற்கெனவே தனிமை உணர்வில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களால் அவற்றை நேர்மறையாகப் பயன்படுத்த முடியவில்லை. மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசும் வழக்கத்தை இந்தத் தலைமுறை வளர்த்துகொள்ள வேண்டும் என்று  கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் ஆய்வு நிபுணர்கள்.

சமூக ஊடகப் பயன்பாட்டைச் சரியாக வரைமுறைப்படுத்துவதன் மூலமே இளைஞர்களால் தனிமை உணர்விலிருந்து வெளியேற முடியும் என்று ஆய்வு முடிவு தெரிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in