Last Updated : 12 Oct, 2018 11:27 AM

 

Published : 12 Oct 2018 11:27 AM
Last Updated : 12 Oct 2018 11:27 AM

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 04: மின்னஞ்சல் கோணங்கள்!

“எனக்கு மின்னஞ்சல் அனுப்பத் தெரியவில்லை”’.

எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படிக் கூறியது வியப்பாக இருந்தது. உயர் பதவியில் இருப்பவர், ஆங்கில ஆளுமை உள்ளவர், கணினி தொடர்பான விஷயங்களிலும் வல்லவர்.  பிறகு எதற்காக இப்படியொரு எதிர்மறையான சுயமதிப்பீடு?

ஒருமுறை அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது அருகிலிருந்து பார்க்க நேர்ந்தது.  அது ஓர் ஐந்து வரிக் கடிதம்.  அந்தக் கடிதம் முழுவதும் அவர் ‘capital letters’ எழுத்துகளைப் பயன்படுத்தினார்.  காரணம் கேட்டபோது, அவர் செய்யத் தவறிய ஒரு விஷயத்தை நான் நினைவுபடுத்தினேன். “இது ஒரு முக்கியமான விஷயம் என்பது அவர் மனத்தில் ஏற்றுவதற்காக ‘capital letter’ எழுத்துகளைப் பயன்படுத்துகிறேன்” என்றார்.

“கூடாது.  இது போன்ற மின்னஞ்சல் எனக்கு வந்தால்,  எரிச்சல்தான் தோன்றும். அனுப்பியவர் என்னைப் பார்த்து உரத்துக் கத்துவதாகத் தோன்றும். ஒருவர் இரண்டு விதமாக நடந்துகொள்ளலாம்” என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

‘நீ அறிவுகெட்டதனமாக நடந்து கொள்கிறாய்’ என்று ஒருவர் கூறினால், ‘நீதான் அறிவுகெட்டவன்’ என்று உடனே கூறுவது ஒருவகை.  மாறாக, நாம் எதை முட்டாள்தனமாகச் செய்துவிட்​டோம் என்று யோசித்து, அது தெரியவில்லை என்றால் எதிராளியிடம் கேட்பது. அவர் வேண்டுமென்றே உசுப்பேத்தக் கூறுகிறார் என்றால், அதை  அலட்சியம்  செய்வது அல்லது தகுந்த பதில் அளிப்பது. இப்படிப் பலவிதக் கோணங்களில் எது சரியானது என்பதை உணர்ந்து செயல்படுவது மற்றொரு வகை.

நான் கூறியவற்றைப் புரிந்துகொண்டார் அவர். கூடவே தனது மற்றொரு முக்கியப் பிரச்சினையைக் குறிப்பிட்டார்.

“மின்னஞ்சலில் கடிதம் எழுதி முடித்த உடனேயே ‘send’ பகுதியை ‘​கிளிக்’ செய்துவிடுகிறேன்.  இது தன்னிச்சையாக நடந்துவிடுகிறது.  அதன் பிறகுதான் கடிதத்தைக் கொஞ்சம் வேறு மாதிரி எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது’’ என்றார் அவர்.

எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் ஒரு சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களில் கட்டுரைத் தொடர்களை எழுதியபோது ஒரு பகுதியை ஒரு பத்திரிகைக்குப் பதிலாக மற்றொன்றுக்கு அனுப்பி, அதனால் உண்டான பிரச்சினைகளும் மனக் கசப்பும் நினை​வுக்கு வந்தது.

“மின்னஞ்சலில் நம்மில் பலரும் முதலில் நிரப்புவது பெறுநரின் மின்னஞ்சல் முகவரியாகத்தான் இருக்கும். ஆனால், என் ஆலோசனை இதுதான். மின்னஞ்சலை யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களது மின் முகவரியை முதலில் டைப் செய்யாதீர்கள்” என்றேன். அதாவது, கடிதத்தை எழுதி முடித்தவுடன் தன்னிச்சையாக ‘send’ பகுதியை ‘​கிளிக்’ செய்தாலும் உங்கள் திரையில் ஓர் அறிவிப்பு இப்படித் தெரியும்.  ‘கடிதம் போய்ச் சேர்பவரின் ​மின்னஞ்சல் முகவரியை நீங்கள் குறிப்பிட மறந்து விட்டீர்கள்’ என்று. 

இந்த இடைப்பட்ட சில நொடிகளுக்குள் சுதாரித்துக் கொண்டு மின்னஞ்சலை மீண்டும் சரிபார்த்து, நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்துவிடலாம்.

(மாற்றம் வரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
ஓவியம்: பாலசுப்பிரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x