Last Updated : 05 Oct, 2018 11:40 AM

 

Published : 05 Oct 2018 11:40 AM
Last Updated : 05 Oct 2018 11:40 AM

வெல்லுவதோ இளமை 24: நினைத்து நினைத்துப் பார்த்தால்..!

புவியியல் ரீதியாக இந்தியா ஒரே நாடுதான். ஆனால், சமூகவியல்ரீதியாக அது பல பகுதிகளாகப் பிரிந்திருக்கிறது.

உதாரணமாக, பெரிய நகரைச் சேர்ந்த ஒரு குழந்தையும் சிற்றூரைச் சேர்ந்த இன்னொரு குழந்தையும் ஒரே மாதிரியாக வளர்வதில்லை. இருவருக்கும் ஒரேமாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஒரேமாதிரியான ஆதரவு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் ஒரேமாதிரியான வெற்றியைப் பெறுவதில்லை.

ஆனால், அதற்காகப் பெருநகரங்களில் வளர்கிற எல்லாரும் வெற்றி பெறுவார்கள் என்றும் சொல்ல இயலாது. வாய்ப்புகள் அதிகமுள்ள அதே நேரத்தில் அங்கு கவனச்சிதறல்களும் அதிகம். ஆகவே, இருக்கும் வாய்ப்புகளை அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள இயலுவதில்லை.

ஒருவேளை, இந்த இரண்டும் ஒன்றாகக் கிடைத்தால்? ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்பதுபோல, முதலில் கவனச்சிதறல் இல்லாமல் நன்கு பயின்று, அருமையான அடித்தளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, நல்ல வாய்ப்புகளைப் பெற்று முன்னேற வேண்டும். இரட்டை நன்மைகளை வழங்கும் இதுபோன்ற சூழல் ஒருவருக்கு அமைந்தால், அவர் பெரிய அளவில் வெற்றியடைவார்.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, பாடகி ஷ்ரேயா கோஷலின் கதை.

ஷ்ரேயாவின் தந்தை பிஷ்வஜித், இந்திய அரசின் அணுமின்சாரத் துறையைச் சேர்ந்த பொறியாளர்; ராஜஸ்தானிலுள்ள ராவத்பாடாவில் பணியாற்றிவந்தார். அவரைப் போலவே இந்தத் துறையில் பணியாற்றும் பிற பொறியாளர்கள், அறிவியலாளர்களுக்காக ஒரு தனிக் குடியிருப்பை அமைத்திருந்தது அரசாங்கம். அங்குதான் ஷ்ரேயா வளர்ந்தார்.

இதனால், சிறுவயதில் ஷ்ரேயாவுக்கு மிக அபூர்வமான ஒரு சூழல் அமைந்தது. திரையரங்குகள், உணவகங்கள், மற்ற பொழுதுபோக்கு எவையும் இல்லாத ஓரிடத்தில் வளர்ந்தார் அவர்.

அதேநேரம், அங்கிருந்தவர்களுக்கு அது ஒரு குறையாகத் தெரியவில்லை. பெரிய நகரங்களிலிருந்து விலகியிருந்த அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் எல்லாரும், தங்களுக்குள் ஒரு நல்ல சமூகப்பின்னலை உருவாக்கிக்கொண்டார்கள். குழுவாகச் சேர்ந்து பாடுவது, நாடகங்களை நடத்துவது, விழாக்களைக் கொண்டாடுவது என்று கலக்கினார்கள்.

குறிப்பாக, பிஷ்வஜித்தின் வீட்டில் எந்நேரமும் பாட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். கலைத்துறையில் அவருக்குப் பெரிய ஆர்வம் இருந்தது. அந்தப் பகுதியில் எந்த விழா என்றாலும் கலைஞர்கள் அவருடைய வீட்டில்தான் ஒன்றுகூடிப் பேசுவார்கள், பயிற்சியெடுப்பார்கள்.

ஷ்ரேயா அப்போது சிறு குழந்தை. ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாலும், எந்நேரமும் நல்ல இசையை, அது பற்றிய உரையாடல்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததாலும் அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதைப் புரிந்துகொண்ட பிஷ்வஜித், மகளை ஊக்கப்படுத்தத் தொடங்கினார்.

அதேபோல், ஷ்ரேயாவின் தாய் சர்மிஷ்டா நன்கு பாடுவார். அவரிட மிருந்தும் பல இசை நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் ஷ்ரேயா.

அப்போது ஷ்ரேயாவின் பள்ளியிலிருந்த ஓர் இசை ஆசிரியர் அவருக்கு ராஜஸ்தானி நாட்டுப்புற இசையைக் கற்றுத் தந்தார். பின்னர், ராவத்பாடாவிலிருந்து 60 கி.மீ. தள்ளியிருந்த கோட்டா என்ற நகருக்குச் சென்று இன்னோர் ஆசிரியரிடம் இசை பயின்றார் ஷ்ரேயா.

கொஞ்சம் கொஞ்சமாக, ஷ்ரேயாவின் இசைத் திறமை நன்கு வெளிப்படத் தொடங்கியது. அவருடைய குரலை, ஒவ்வொரு வரியையும் பாடும்போது அவர் வெளிப்படுத்தும் நுணுக்கங்களைப் பலர் பாராட்டினார்கள். ‘இந்த வயதில் இத்தனை திறமையா!’ என்று வியந்தார்கள்.

“சின்னவயதில் நான் ஒரு சிற்றூர்ச் சூழலில் வளர்ந்தேன். அது எனக்குப் பெரிய வரமாக அமைந்தது” என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஷ்ரேயா. “இன்றைக்கு இசை கற்றுக்கொள்கிற ஒருவர், சந்திக்கிற கவனச்சிதறல்கள் எவையும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் முழுக்க முழுக்க என்னுடைய இசைப் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த இயன்றது!”

அதேநேரம், அந்தச் சிற்றூர்ச்சூழல் இன்னொருவிதத்தில் ஷ்ரேயாவுக்குத் தடையாகவும் இருந்தது. இத்தனை திறமைகொண்ட ஒரு பெண்ணுக்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் அங்கு இல்லை. அவை பெருநகரங்களில்தான் கிடைக்கும்.

ஷ்ரேயா அப்போது சின்னஞ்சிறுமி. இதையெல்லாம் புரிந்துகொள்கிற வயது இல்லை. அவர் பாடுவதில் மட்டும் கவனம்செலுத்திக்கொண்டிருந்தார். அவருக்கேற்ற நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக அவருடைய தந்தை உழைத்துக்கொண்டிருந்தார்.

அடுத்த சில ஆண்டுகளில், ஷ்ரேயா பல வெளியூர்களுக்குச் சென்று விதவிதமான போட்டிகளில் பங்கேற்றார். வெற்றிகளைக் குவித்தார். ஆனாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய வாய்ப்பு அமையவில்லை.

இந்த நேரத்தில்தான், ஜீ தொலைக்காட்சியில் வரும் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார் ஷ்ரேயா. புகழ்பெற்ற இசையமைப்பாளரான கல்யாண்ஜி அவருடைய குரலைக் கேட்டார். “இந்தப் பெண்ணுக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது” என்று பாராட்டினார். “ஷ்ரேயாவின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் மும்பையில் குடியேற வேண்டும்” என்று பிஷ்வஜித்திடம் சொன்னார்.

பிஷ்வஜித் ஏற்கெனவே இதை ஓரளவு உணர்ந்திருக்க வேண்டும். இப்போது கல்யாண்ஜி போன்ற ஒரு பெரிய இசையமைப்பாளரும் இதையே சொல்கிறார் என்றதும், அவருக்கு ஒரு புதிய ஊக்கம் பிறந்தது. மகளுடைய எதிர்காலத்துக்காக மும்பையில் குடியேறத் தீர்மானித்தார்.

அந்த மாற்றம், ஷ்ரேயாவுக்குப் பல கதவுகளைத் திறந்தது. கல்யாண்ஜி உள்படப் பல இசை வல்லுநர்களிடம் இன்னும் நுணுக்கமாகப் பாடம் கற்றுக்கொண்டார். இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், தனிப்பட்ட பாடல் தொகுப்புகள், விளம்பரங்கள் என்று பலவற்றில் பாடினார். பிரபல இயக்குநர் ஒருவர் அவருடைய பாடலைத் தொலைக்காட்சியில் கேட்டுவிட்டுத் திரைப்படத்தில் பாட அழைத்தார். அதன்பிறகு, தன்னுடைய அபாரமான குரல் திறமையாலும் கடின உழைப்பாலும் புதிய மொழிகளைக் கற்றுக்கொண்டு சிறப்பாகப் பாடும் ஆர்வத்தாலும் அதிவேகத்தில் வெற்றிபெற்றார். விருதுகள், கௌரவங்கள், ரசிகர் கூட்டம் ஆகியவற்றைச் சம்பாதித்துக்கொண்டார்.

படிப்பிலோ கலையிலோ விளை யாட்டிலோ மற்ற எதிலுமோ முன்னேற விரும்பும் ஒருவர், அந்தத் துறையில் வலுவான, ஆழமான ஓர் அடித்தளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவரால் வெற்றிபெற இயலும். இளம் வயதில் அந்த அடித்தளத்தை அமைப்பதற்குக் கவனச்சிதறலில்லாத சூழல் அவசியம் தேவை.

கவனச்சிதறலில்லாத பயிற்சிச்சூழல் ஷ்ரேயாவுக்கு இயற்கையாக அமைந்தது. ஆனால், இன்றைக்கு எந்தவொரு துறையிலும் முன்னேற நினைப்பவர்களுக்கு அது எளிதில் கிடைப்பதில்லை. தொலைக்காட்சி, இணையம், திரைப்படங்கள், விளையாட்டு எனப் பொழுதுபோக்கின் அளவும் ஆழமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் எதையும் கண்டுகொள்ளாமல் படிப்பில், பயிற்சியில் கவனம்செலுத்துவது சிரமம்தான்.

அதற்காக, எல்லாரும் ஷ்ரேயாபோல் ராஜஸ்தானிலிருக்கும் சிற்றூரொன்றில் குடியேற இயலாது. தேவைக்கேற்ப நமக்குள் அப்படியொரு சிற்றூரை அமைத்துக்கொள்ள வேண்டியதுதான்!

இப்போதெல்லாம் நகரில் நவீனச் சூழலில் வேலைசெய்கிற சிலர், பக்கத்திலிருக்கும் சிற்றூரில் வீடுகட்டிக் குடியேறுகிறார்கள். தினமும் சில மணிநேரம் வேலைசெய்வதற்கு மட்டுமே நகருக்கு வருகிறார்கள். மீதமுள்ள நேரத்தில் தூய்மையான காற்று, இனிமையான இயற்கைச்சூழல் என்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

அதையே நம் மனத்தில் செய்ய இயன்றால் எப்படியிருக்கும்? பொழுது போக்கை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் அனுபவிக்கலாம். நாம் முன்னேற விரும்பும் துறைசார்ந்த பயிற்சியில் ஈடுபடும்போது மட்டும் சட்டென்று அந்த ‘மனச்சிற்றூருக்கு’ச் சென்றுவிடலாம். அங்கு எந்தக் கவனச்சிதறல்களும் இல்லாமல் நம்முடைய பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

இது நிச்சயம் எளிதில்லை. விரும்பும்போது கவனச்சிதறல்களை நிறுத்திவைக்கிற பயிற்சியை நாம்தான் முனைந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், இதை நன்கு பழகிக்கொண்டுவிட்டால், நினைக்கும் நேரத்தில் நகரத்துக்கும் சிற்றூருக்கும் மாறிமாறிச் சென்றுதிரும்பலாம். திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம். வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம், மகிழ்ச்சியோடும் வாழலாம்!

(அடுத்த இதழில் நிறைவடையும்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x