சின்ன மாற்றம் பெரிய தீர்வு 03: கொஞ்சம் மாத்தி யோசி!

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 03: கொஞ்சம் மாத்தி யோசி!
Updated on
2 min read

எனக்குத் தெரிந்த ஒருவர் சிறிய அளவில் ஒரு கடையை நடத்திவந்தார்.  லாபம் குறைந்து கொண்டேவந்து, ஒரு கட்டத்தில் அது நஷ்டத்தில் வந்துநின்றது.

“போட்டி ரொம்ப அதிகமாயி டுச்சு”’ என்றார். 

எனக்கும் வருத்தமாக இருந்தது.  அந்த வருத்தத்தோடு அவருக்கு ஓர் ஆலோசனையைக் கூறினேன். 

“பிறருடைய கஷ்டங்களைக் கவனிக்கத் தொடங்குங்கள்” என்றேன். 

அதை ஏதோ ‘இரு கோடுகள்’ தத்துவம்போல நினைத்துக் கொண்டுவிட்டார் அவர்.  அதாவது, நம்மைவிட மோசமான நிலையில் இருப்பவர்கள் பலர் இருக்கும்போது, நமக்கு அமைந்த வாழ்க்கைக்காக வருந்தவோ புலம்பவோ கூடாது என்று நான் கூறியதாக எண்ணிவிட்டார். 

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி.  நினைத் துப் பார்த்து நிம்மதி நாடு...’ என்ற திரைப் படப் பாடல் வரிகள் அற்புதமானவை தான். ஆனால், நான் கூற வந்தது அந்தக் கோணம் அல்ல. 

சில நாட்களுக்கு முன் வேளச்சேரி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அடுத்தடுத்து இருந்த இரு கடைகள் என் ஆர்வத்தைத் தூண்டின. ‘இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்’ என்ற அறிவிப்புப் பலகைகள் அந்தக் கடைகளில் காணப் பட்டன.  அந்த இடத்தையொட்டி ரயில் நிலைய மும் இல்லை. பின் எதற்காக? பைக்கும் ஸ்கூட்டருமாக அந்த இரு இடங்களில் நிரம்பி வழிந்தன.

பிறகு விவரம் புரிந்தது.  அவற்றுக்கு எதிரே ஒரு பிரம்மாண்டமான ‘மால்’ இருக்கிறது.  அங்கே வண்டியை நிறுத்தினால் மணிக்கு தொகையை வசூலிப்பார்கள்.  ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாலுக்குள் சென்று வேண்டிய பொருட்களை வாங்கிவருவது கடினம்தான். தவிர வண்டி நிறுத்தக் கட்டணமும் அதிகம்.  இந்நிலையில் சற்றே குறைந்த கட்டணத்தில், நான்கு மணி நேரம் நிறுத்தலாம் என்ற வசதியுடன் புதிதாகத் தொழிலைத் தொடங்கி லாபம் பார்க்கிறார்கள்.  இடத்தைத் தவிர வேறு எந்த முதலீடும் கிடையாது. 

கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு’ என்று ஒன்று உண்டு.  இங்கே மாணவர்கள் தங்கள் பத்கங்களைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு அமைதியான, ஏ.சி. சூழலில் படிக்கிறார்கள்.  இந்த மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. சில சமயம் இந்தப் பகுதியில் அமரவே இடம் இருக்காது. சமீபத்தில் அந்தப்  பகுதி சுவர்களில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஒரு தனியார் நிறுவனம் சொந்த நூல்களைக் கொண்டுவந்து படிப்பதற்கென ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறது.  தினசரி இவ்வளவு, மாதத்துக்கு இவ்வளவு என்று கட்டணம் வசூலிக்கிறார்களாம். ‘வை-ஃபை வசதி உண்டு, நிரந்தர இருக்கை ஒதுக்கப்படும்’ என்றெல்லாம் தூண்டில்கள். ஆக, பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து அந்தக் கஷ்டங்களை எப்படித் தீர்க்கலாம் என்று யோசிப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல; வணிக நோக்கிலும் புத்திசாலித்தனமானது.

தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த நண்பர் அந்தப் பகுதியின் பிற கடைகளில் எது கிடைக்கவில்லை என்பதை ஆராய்ச்சி செய்து அவற்றைத் தன் கடையில் இடம் பெறச் செய்திருக்கிறார்.  பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறதாம்.

(மாற்றம் வரும்) | தொடர்புக்கு: aruncharanya@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in