

அழகான குழந்தைகளையும், பெண்களையும் பொம்மையுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். உக்ரைனில் பொம்மைக்கே சவால் விடும் ஒரு இளம் பெண் உள்ளார். அவர் நடந்து வருவதைப் பார்த்தால் பொம்மைதான் நடந்து வருகிறது என்று பலரும் ஏமாந்துவிடுவார்கள்.
குழந்தைகள், பெண்களைக் கொள்ளை கொண்ட பார்பி பொம்மை போலவே இருக்கும் அவரது பெயர் வேலரியா லுக்யனோவா. ஜொலிக்கும் கூந்தல், அழகான சிமிட்டும் கண்கள், செதுக்கியது போன்ற மூக்கு என அச்சு அசலாகப் பார்பி பொம்மையைப் பிரதிபலிக்கும் அவரை ‘மனித பார்பி’ என்றே செல்லமாக அழைக்கிறார்கள் உக்ரைனில்.
28 வயதாகும் அவரது தொழில் மாடலிங். ஆனால், தற்போது ஆன்மிக போதகராகவும் இருக்கிறார். அதனால்தான் என்னவோ தற்போது புதிய புதிய கருத்துக்களைக் கூறிவருகிறார் அவர். “எனக்கும் உணவும் தண்ணீரும் தேவையில்லை.
கடந்த பல வாரங்களாக எனக்குப் பசியே எடுப்பதில்லை. நான் உயிர் வாழக் காற்றும் ஒளியும் போதும்” என்று கூறி உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியிக்கிறார் வேலரியா.
அது ஒரு பக்கம் இருக்க, உக்ரைன், ரஷ்யா மட்டுமின்றி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமானோர் இந்தப் பதுமையின் அழகைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். இவரது அழகிற்காகவும் பொம்மை போன்ற உருவத்திற்காகவும் சமூக இணையதளங்களில் வேலரியாவுக்கு ரசிகர்களும் கூடியிருக்கிறார்கள்.