

அம்ரித் ராவின் மெட்ராஸ்கல்ஸின் இசை, க்ரியா சக்தியின் அரங்கக் கலைஞர்கள், ப்ரீத்தி பரத்வாஜின் நடனக் குழுவினர் என பல தரப்பட்ட கலை வடிவங்களை நம் கண் முன்னே கொண்டுவந்தது, மியூசியம் அரங்கத்தில் சமீபத்தில் அரங்கேறிய
'பேமானி' என்ற (உண்மையில்லாதவர்கள்) இசை நிகழ்ச்சி.
ஆண்டாண்டு காலமாக மக்களை ஏய்க்கும் பொய்யான அரசியல் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டிய துடிப்பான இசையுடன் கூடிய பாடல்களுக்கு அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் ஆரவாரமான வரவேற்பு, நிகழ்ச்சியோடு ரசிகர்களை ஒன்றவைத்தது.
‘பூமி யாருக்கு சொந்தம்?’, ‘ஆறு யாருக்கு சொந்தம்?’ பாடலில் சட்ட விரோதமான மணல் கொள்ளை, நீர்நிலைகளில் கட்டிடங்களை எழுப்புதல் போன்ற சமகால பிரச்சினைகள் அனைத்தும் ஊர்வலமாக வந்தன. உண்மையை மறைப்பவனும் அதை ஆதரிப்பவனும்கூட உண்மையில்லாதவர்கள்தான் என்பதை பளிச்சென்று உணர்த்தின பாடலின் வரிகள்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளத்திலிருந்து வந்திருந்தவர்கள் தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள பக்கத்திலிருந்த ரசிகர்களின் காதைக் கடித்துக் கொண்டிருந்தனர்!