அனுபவம் புதுமை 18: வலையோடு உறவாடு!

அனுபவம் புதுமை 18: வலையோடு உறவாடு!

Published on

இன்று இளைஞர்களின் டிரெண்ட் வித்தியாசமாக இருக்கிறது. வகுப்பறையைத் தாண்டி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரையும் நட்பு வட்டத்தில் இணைத்துகொள்கிற மனோபாவம் பரவலாக இருக்கிறது. சென்ற தலைமுறைவரை நண்பர்கள் என்றாலே வசிக்கிற தெருவில் பழகுபவர்களும் கல்லூரி நண்பர்களும் நட்பு வட்டத்தில் இருந்தார்கள். ஆனால், தற்போது அதன் எல்லை சர்வதேச அளவுக்கு விரிவடைந்துவிட்டது.

காரணம், இணையம் பாதிக்காத மனிதர்களே இல்லை. அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துகொண்டே செல்கிறது. கூடவே சமூக வலைதளங்களின் பயன்பாடும் செல்போனும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளைப்போலவே கருதுகிற மனப்பான்மையும் எல்லோரிடமும் பரவியிருக்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தினர் மத்தியில் இதன் தாக்கம் சற்று அதிகம்தான்.

மின்னஞ்சல் அவசியமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் உறுப்பினராக இல்லை என்றால், கலாய்த்துத் தள்ளிவிட எப்போதும் நம்மை சுற்றி ஒரு கூட்டம் தயராகவே இருக்கும். சமூக வலைதளங்களில் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ சொல்வதில் தொடங்கி, மீம்ஸ்கள், நகைச்சுவை செய்திகள், திரைப்படக் காட்சிகள் எனப் பலவும் இளைஞர்களை ஆக்கிரமித்துவிடுகின்றன. அரட்டை பதிவுக்கு ஆதரவு கருத்தோ எதிர்க் கருத்தோ சொல்லி நட்பு வட்டம் நேரத்தை வீணடிக்கிறது. அண்மைக் காலமாக பெரும்பான்மையான பதின்பருவத்தினர் மீது வைக்கப்படுகிற முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.

தேச எல்லையை கடந்து உறவுகளையும் நட்புகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் சமூக வலைதளங்களை கொண்டாடுகிற நாம், நம்முடைய ‘கரியர்’க்காக அதை எத்தனை பேர் பயன்படுத்திக்கொள்கிறோம்? இதைப் புரிந்துகொள்ள, என் மாணவனின் அனுபவம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

அவன் பெயர் கணேஷ். படித்து முடித்துவிட்டு சரியான வேலை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தான். கிடைத்த வேலைக்கு சென்றுகொண்டிருந்தான். எங்கே யாவது வேலை கிடைக்கும் என  துழாவிக் கொண்டிருப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தான். அந்த வேளையில் அவன் ஒரு நல்ல வேலையில் சேர உதவியது சமூக வலைதளம்தான். சமூக வலைதளத்தின் மூலமாக பழக்கமான டெல்லியைச் சேர்ந்த விஜயை கணேஷ் தொடர்புகொண்ட பிறகுதான் தொலைபேசியில் பேசியது தன் கல்லூரி சீனியர் என்று தெரிந்தது.

அந்த வலைத்தளத்தில் கணேஷின் ‘பையோ டேட்டா’வை பார்த்த விஜய் உடனே கணேஷை அழைத்திருக்கிறான்.

“நான் வேலை பார்க்கிற நிறுவனத்தில் இப்போதைக்கு வேலை  இல்ல. ஆனா, இன்னொரு நிறுவனத்தில் இருக்கு. ஆனா, அங்கே எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் ரொம்ப கஷ்டமா இருக்கும். இங்கே வந்து சில நாட்கள் தங்கி முயற்சி பண்ணினா வேலை கிடைக்கலாம். உன்னால் டெல்லிக்கு வர முடியுமா” என்ற கேள்வியில் சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் டெல்லிக்குப் புறப்பட்டான் கணேஷ்.

கணேஷ் டெல்லிக்கு வந்த பிறகு விஜயின் முதல் அறிவுரையே, சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்துவது பற்றியதுதான்.  சமூக வலைதளத்தில் வெறுமனே வெட்டியாக நேரத்தைச் செலவிடாமல், வேறோரு வழியைப் பின்பற்ற விஜய் கணேஷூக்குக் கற்றுகொடுத்தான். துறை சார்ந்த முன்னாள் மாணவர்கள், நண்பர்களை வாட்ஸ்அப் குழு, ஃபேஸ்புக் மூலம் கணேஷ் இணைத்தான்.

அதில் தான் விரும்புகிற நிறுவனங்கள் பற்றிய தொடர் செய்திகள், வியாபார உத்திகள், புது உற்பத்தி பொருட்கள் பற்றிய குறிப்புகள், பங்கு மதிப்பு, நிறுவனத்தின் லாபம் போன்ற ‘கரியர்’ தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொண்டான். அந்தக் குழுவில் இருப்பவர்களும் இதேபோன்ற தகவல்களைப் பரிமாறிக் கொள்ள அவற்றை ஆராய்ந்து தன்னை இன்னும் செம்மைப்படுத்திக்கொண்டான். இதன் விளைவு, இரண்டே மாதங்களில் தெரிந்தது. ஒரு பெரிய நிறுவனத்தில் நடந்த  எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று விருப்பட்ட வேலையை அடைந்தான்.

சமூக வலைதளங்களின் பரிணாம வளர்ச்சிக்கு முன்பு நம் அனைவருக்கும் திறமையை வெளிப்படுத்த எங்கேணும் மேடை கிடைக்காதா என்ற ஓர் ஏக்கம் இருந்தது. ஆனால், இன்று நம்முடைய பேச்சு, எழுத்து, தொழில்நுட்ப அறிவு என நாம் எவற்றையெல்லாம் நம்முடைய பலமாகக் கருதுகிறோமோ அவற்றையெல்லாம் வலைதளங்களின் உதவியோட தேசம் தாண்டி வெளிப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.நம்முடைய மின்னஞ்சல் முகவரியைப் போலவே, ஃபேஸ்புக் முகவரியையும் நிறுவனங்கள் இப்போது கேட்கின்றன. சமூக ஊடகங்களின் வளர்ச்சி அசூர வளர்ச்சி பெற்றிருக்கிற இந்தக் காலத்தில், அதில் உங்களுடைய பங்கு என்னவாக இருக்கிறது எனச் சோதிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெறுமனே வெட்டியாகப் பொழுது கழிப்பது உங்களுடைய பலவீனமாகக் கருதவும் செய்யலாம்.

சமூக வலைதளங்கள் காலத்தின் தேவை. நேரத்தை அதில் தொலைத்துவிடாமல் இருப்பதும் தன்னோட வளர்ச்சிக்கு அதையே உறுதுணையாக மாற்றிக் கொள்வதும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in