Last Updated : 10 Aug, 2018 10:15 AM

 

Published : 10 Aug 2018 10:15 AM
Last Updated : 10 Aug 2018 10:15 AM

வெல்லுவதோ இளமை 17: அவர்களுக்கென ஒரு மனம்!

‘நாம படிப்பை முடிச்சுட்டு என்ன செய்யலாம்?'

இன்றைக்கு இரண்டு இளைஞர்கள் இப்படிப் பேசிக்கொண்டால், பதில்கள் தெள்ளத்தெளிவாக இருக்கும். பெரிய நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர வேண்டும், நிறையச் சம்பாதிக்க வேண்டும், சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும், வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும்...

இவர்கள் இப்படித் தெளிவாகச் சிந்திக்கக் காரணம், இவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினர் இப்படி நன்கு படித்திருக்கிறார்கள், நல்ல வேலைக்குச் சென்றிருக்கிறார்கள், சம்பாதித்திருக்கிறார்கள், சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள், அவர்களையெல்லாம் பார்த்துப் பார்த்து இவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கு புலப்பட்டிருக்கிறது.

இத்துடன், இணையம் உலகைச் சுருக்கிவிட்டது; வெவ்வேறு நாடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் என்னென்ன செய்கிறார்கள் என்பதை இந்திய இளைஞர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்; அவற்றில் தங்களுக்குப் பிடித்தவற்றை ஏற்றுக்கொண்டு தெளிவாகத் திட்டமிடுகிறார்கள்.

ஆனால், சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னால், இதுபோன்ற வாய்ப்புகள் எவையும் இல்லாத ஒரு மிகப் பழைய தலைமுறையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கே பால் என்ற ஓர் இந்திய இளைஞர், அகர்கர் என்ற இன்னோர் இளைஞரைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறார், ‘நாம படிப்பை முடிச்சுட்டு என்ன செய்யலாம்?’

இந்தக் கேள்விக்கு அகர்கரால் சட்டென்று பதில் சொல்ல இயலவில்லை. ‘யோசிப்போம்!’ என்கிறார்.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, அவர்கள் பல நாட்களுக்கு யோசிக்கிறார்கள். பலவிதமாகச் சிந்திக்கிறார்கள், எது சரி என்று குழம்புகிறார்கள்.

காரணம், அவர்களுக்கு முன்னுதாரணங்கள் அதிகமில்லை. அன்றைய இந்தியாவில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் குறைவு, யாரைப் பார்த்து இவர்கள் கனவுகளை வளர்த்துக்கொள்வார்கள்?

ஆனாலும், இளமைப் பருவத்தில் கனவுகள் வருமல்லவா? பாலும் அகர்கரும் விதவிதமாகச் சிந்தித்தார்கள், வெவ்வேறு வாய்ப்புகளைக் கண்டறிந்தார்கள், அவற்றை எடைபோட்டார்கள், வாதிட்டார்கள், தங்களுக்கு நல்லது எது என்பதோடு நிறுத்திவிடாமல், சமூகத்துக்கு நல்லது எது என்றும் சிந்தித்தார்கள்.

1879-ம் ஆண்டின் பிற்பகுதியில் சட்டம் படித்துக்கொண்டிருந்த பால் ஒரு தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போதும் அவர் அகர்கருடன் விவாதங்களைத் தொடர்ந்தார். ‘இன்னும் சில நாள்ல நாம கல்லூரிப் படிப்பை முடிச்சுடுவோம்; அடுத்து என்ன செய்யறது?’

‘நாம ஒரு பள்ளி தொடங்கினா என்ன?’

அந்த யோசனை இருவருக்குமே பிடித்திருந்தது. ஏனெனில், அன்றைய இந்தியாவுக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் தேவை என்று அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே, தொடர்ந்து சிந்தித்தார்கள். ‘என்ன மாதிரி பள்ளியைத் தொடங்கலாம்? எந்தப் பாடத்திட்டத்தைப் பின்பற்றலாம்? மற்ற பள்ளிகளுக்கும் அந்தப் பள்ளிக்கும் என்னென்ன வேறுபாடுகள் இருக்கும்? எந்தவிதத்துல மற்றவங்களைவிட மேம்பட்ட கல்வியை நாம தரப்போறோம்?'

கொஞ்சம்கொஞ்சமாக அவர்கள் தங்களுடைய சிந்தனைக்கு வடிவம் தந்தார்கள். ‘இத்தனை நாளாக நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இதுதான் விடை’ என்று தீர்மானித்தார்கள். ‘இனிக் குழப்பமில்லை; கல்லூரிப் படிப்பை முடித்ததும் நாம் ஒரு சிறந்த தனியார் பள்ளியைத் தொடங்கப்போகிறோம்!’

கனவு சரி. அதை நனவாக்குவது எப்படி?

ஒரு பள்ளியைத் தொடங்குவதென்றால் சாதாரண விஷயமா? ஏகப்பட்ட செலவுகள் இருக்கும், பலவிதமான பணிகள் இருக்கும். நமக்கு எதிலும் அனுபவமில்லையே, பணத்துக்கு எங்கே போவது? நம்மை நம்பி மக்கள் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்களா? அந்த நம்பிக்கையை நம்மால் காப்பாற்ற இயலுமா?

அவர்களுக்குத் தங்கள் மீது முழு நம்பிக்கை இருந்தது. அதேநேரம், யதார்த்தத்தில் இதைச் செய்து முடிக்கப் பெரும் உழைப்பு தேவை என்பதையும் புரிந்துகொண்டிருந்தார்கள்.

‘அகர்கர், இது நமக்குச் சாத்தியப்படாத விஷயமல்ல’ என்றார் பால்,  ‘உறுதியோட செயல்பட்டா எதையும் சாதிக்கலாம். ஆனா, நாம தனிப்பட்ட முறையில் பெரிய தியாகத்துக்குத் தயாரா இருக்கணும்.’

அதாவது, பள்ளியை நடத்திப் பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது; இதனால் நமக்கு என்ன லாபம் என்று நினைக்கக் கூடாது; சம்பளமே வராவிட்டாலும் பரவாயில்லை என்று உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்; இதனால் சமூகத்தில் நிகழும் முன்னேற்றங்கள்தான் நமக்குச் சம்பளம் என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் பால் சொல்லாமலே அகர்கருக்குப் புரிந்தது. ‘நான் தயார்’ என்று தலையாட்டிவிட்டார்.

அப்போது பால், அகர்கர் இருவருடைய வயது, 23தான். தியாகத்தைச் சிந்திக்கிற வயதே இல்லை. நன்கு சம்பாதிக்கலாம், வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று எண்ணுகிற வயதுதான். அவர்களைச் சுற்றியிருந்த மற்றவர்கள், அதாவது, அவர்களுடைய வயது இளைஞர்களெல்லாம் அப்படித்தான் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

agarkarjpgகோபால் கணேஷ் அகர்கர்

அவர்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் உயர்ந்த வேலைகள் நிச்சயம் கிடைக்கும். தான் உண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று மளமளவென்று முன்னேறிவிடலாம்.

ஆனால், அவர்கள் இருவரும் அதைப் பற்றிச் சிறிதும் எண்ணவில்லை. தங்களுடைய கனவை நனவாக்க முயன்றார்கள்.

இதைப் பார்த்த மற்ற எல்லாரும் அவர்களை நன்கு கேலிசெய்திருப்பார்கள். ‘பிழைக்கத் தெரியாத பசங்க' என்று கிண்டலடித்திருப்பார்கள். ‘சமூகம் என்ன ஆனா உங்களுக்கென்ன? தனக்கு மிஞ்சினாத்தானே தருமம்?’ என்று அறிவுரை சொல்லியிருப்பார்கள்.

பாலோ அகர்கரோ இதைப் பொருட்படுத்தவில்லை. தாங்கள் நினைத்த தியாகத்தில் இதுதான் முதல் படி என்று புரிந்துகொண்டார்கள். பள்ளியைத் தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

1880-ம் ஆண்டு, பூனாவில் 'New English School' தொடங்கப்பட்டது. தெளிவான இலக்குகளுடன் இந்த இளைஞர்கள் தொடங்கிய பள்ளிக்குப் பெற்றோர் நல்ல ஆதரவு தந்தார்கள், இவர்களைப் போல் தியாகத்துக்குத் தயாராக இருந்த பல அறிஞர்கள் இப்பணியில் கைகோத்தார்கள், இந்தியாவில் தனியார் கல்வியைத் தொடங்கிவைத்த முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக அப்பள்ளி அமைந்தது.

பள்ளியைத் தொடங்கிய பிறகும், அவர்களுடைய சிரமங்கள் முடிவடையவில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளியை நடத்துவது பெரிய போராட்டமாக இருந்தது. ஆனாலும், கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள். வருவாய், தனிப்பட்ட வளர்ச்சி போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டார்கள்.

அதனால், பள்ளி சிறப்பாக வளர்ந்தது; அந்தப் பகுதியில் நல்ல பெயர் வாங்கியது; நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. ‘சில புத்திசாலி இளைஞர்கள் எந்த அரசு உதவியும் இல்லாமல் நடத்திவரும் இந்தப் பள்ளி, வெளிநாட்டுப் பள்ளிகளையெல்லாம்விடச் சிறப்பாக இயங்கிவருகிறது’ என்று அப்போதைய கல்வித்துறைத் தலைவர் டாக்டர் W. W. ஹன்டரிடம் பாராட்டுப்பெற்றது.

இளமைத்துடிப்போடு சமூக ஆர்வமும் சேவை மனப்பான்மையும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்த அந்த இளைஞர்களில் ஒருவரை நீங்கள் நன்கறிவீர்கள். ‘சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை நான் பெற்றே தீருவேன்’ என்று முழங்கிய பால கங்காதர திலகர். அவரோடு இணைந்து பள்ளியைத் தொடங்கிய இன்னொருவர், கோபால் கணேஷ் அகர்கர்.

தன்னலத்தோடு சிந்தித்தால்தான் பெரிய அளவில் முன்னேற முடியும் என்று இளைஞர்களுக்குச் சொல்லித்தருகிற நவீன காலம் இது. கூடவே பொதுநலத்தோடும் சிந்தித்தால் வரலாற்றில் இடம்பெறலாம் என்று நிரூபிக்கும் ‘மீசைக்கார நண்பர்’ திலகரின் பேச்சையும் கேளுங்கள்.

(இளமை பாயும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x