

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள்தாம். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் பிரபலமான செயலிகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் செயலிகள் தவிர, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தனிப்பட்ட செயலிகளும் அநேகம் இருக்கின்றன. செயலிகளைத் தேடி கண்டறியவும் நிறைய வழிகள் இருக்கின்றன.
ஆனால், புதிய செயலிகளைப் பயன்படுத்த முயலும்போது, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில், செயலிகளும் போலிகள் நூற்றுக்கணக்கில் உண்டு. அண்மையில்கூட, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, முன்னணி வங்கிகளின் செயலிபோன்ற தோற்றத்தைத் தந்த மூன்று செயலிகள் நீக்கப்பட்டன. போலியான செயலிகள், அந்தரங்கத் தகவல்களைச் சேகரிப்பதில் தொடங்கி பலவிதமான வில்லங்கத்தை ஏற்படுத்தலாம். நிதி சார்ந்த செயலிகள் எனில், பொருளாதார இழப்பும் ஏற்படலாம்.
எனவே, புதிய செயலியைத் தர விறக்கம் செய்யும்போது, அது போலி அல்ல என்பதை உறுதி செய்வது அவசியம். அதற்கு என்ன வழி?
அதிகாரபூர்வத் தரவிறக்கம்
செயலிகளைத் தரவிறக்கம் செய்யும்போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விதி, அதிகாரப்பூர்வ ஸ்டோரிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஐபோன் எனில் ஆப்ஸ்டோர், ஆண்ட்ராய்டு எனில் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பிலிருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப்பில் வரும் இணைப்புகளைப் பின்தொடர்ந்து சென்று செயலிகளைத் தரவிறக்கம் செய்யக் கூடாது.
செயலி விமர்சனங்கள்
அதிகாரபூர்வ இடங்களிலிருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்வது முதல் கட்டப் பாதுகாப்பு. ஆனால், இதனால் மட்டுமே செயலிகள் எல்லாமே பாதுகாப்பானவை என்று சொல்லிவிட முடியாது. பிளேஸ்டோர்/ ஆப்ஸ்டோரிலும் போலி செயலிகள் இருக்கலாம். இவற்றைக் கண்டறிய தரவிறக்கம் செய்யும் முன், முதலில் அவற்றுக்கான சக பயனாளிகளின் விமர்சனக் கருத்துகளைப் படித்துப் பார்க்க வேண்டும். விமர்சனங்களின் அடிப்படையிலான மதிப்பீட்டையும் கவனிக்க வேண்டும். விமர்சனக் கருத்துகளைப் படிக்கும்போதே செயலியின் நம்பகத்தன்மை பற்றிய விடை கிடைக்கும்.
செயலி விளக்கம்
செயலிக்கான விமர்சனங்களும் ஒரு வழிகாட்டிதான். போலியான செயலியை உருவாக்குபவர்களே போலியான விமர்சனங்களையும் எழுத ஏற்பாடு செய்கின்றனர். எனவே, விமர்சனங்களைப் படித்த பிறகு, செயலியின் விளக்கத்தைப் படித்துப் பார்க்க வேண்டும். செயலிக்கான விளக்கம் தொழில்முறையாக அமையாமல், இலக்கணப் பிழை, எழுத்துப் பிழைகளோடு இருந்தால் அவை வில்லங்கச் செயலியாக இருக்கலாம். அதேபோல, செயலிக்கான அறிமுகம் சுருக்கமாக இருந்தாலும் சந்தேகம் கொள்ள வேண்டும்.
பின்னணியில் யார்?
செயலிகளுக்கான அறிமுகப் பக்கத்தில் பலவிதமான தகவல்களை இருப்பதைக் காணலாம். அவற்றில் செயலியை உருவாக்கிய நிறுவனம், டெவலப்பர் பற்றிய விவரமும் இடம்பெற்றிருக்கும். டெவலப்பரின் மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த இணைப்புகளை ‘கிளிக்’ செய்தால் அவர்களுடைய அதிகாரபூர்வ தளம் அல்லது வலைப்பதிவுக்குச் சென்று மேலும் விவரங்களை அறியலாம். போலிச் செயலி எனில் இந்த விவரங்கள் எல்லாம் மிகச் சுருக்கமாகவே இருக்கும். அந்தச் செயலியின் உருவாக்கம், சிறப்பம்சங்கள் பற்றி அதிகத் தகவல்களை அறிந்து கொள்ள முடியாது.
ஸ்கிரீன்ஷாட்
குறிப்பிட்ட செயலிக்கான தேடலில் ஈடுபடும்போது வரும் படங்களைக் கவனியுங்கள். போலிச் செயலி உருவாக்குபவர்கள், அவற்றுக்கான விளக்கப் படங்களைக்கூட எங்கிருந்தாவது எடுத்துப் பயன்படுத்தியிருக்கலாம்.
எண்ணிக்கை
ஒரு செயலி எந்த அளவு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனும் எண்ணிக்கையைக் கவனியுங்கள். லட்சக்கணக்கில் இந்த எண்ணிகை இருந்தால் பரவலாக அந்தச் செயலி பயன்படுத்தப்படுவதாகப் பொருள். சில நூறு பேர் மட்டுமே பயன்படுத்தும் செயலி என்றால் போலியாக இருக்க வாய்ப்பு அதிகம். அதேபோல செயலி அறிமுகமான காலத்தையும் கவனிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகியும் அநேகரால் பயன்படுத்தப்படவில்லை எனில், அந்தச் செயலி குறித்து எச்சரிக்கை தேவை.
இவை தவிர, ஒரு செயலி கவனத்தை ஈர்த்ததும் அது தொடர்பான தகவலை இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும். தொழில்நுட்ப விமர்சனத் தளங்களில் அந்தச் செயலி பற்றிய விமர்சனங்கள், அறிமுக செய்திகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். அதிகாரபூர்வச் செயலி என்றால் அவை தொடர்பான செய்திகளை ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் பார்க்க வேண்டும்.