

மென்பொருள் வல்லுனர் ஒருவர் 'விண்டோஸ் 95’ இயங்குதளத்தைச் செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும் ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவம். வயதானவர்களுக்கு மலரும் நினைவுகள்.
‘விண்டோஸ் 95’ ஒரு காலத்தில் கணினி உலகில் பிரபலமாக இருந்த மென்பொருள். மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குக் கோடிகளை அள்ளிக்கொடுத்த மென்பொருள்.
ஏன் ஆர்வம்?
ஒரு பழைய மென்பொருளைச் செயலி வடிவில் மறு உருவாக்கம் செய்வதென்பது தொழில்நுட்ப சாகசம் என்றே சொல்லலாம். அதைத் தான் பெலிக்ஸ் ரைசன்பர்க் (felixrieseberg.com) செய்திருக்கிறார். அவர்தான் இந்தச் செயலியை உருவாக்கியவர்.
ரைசன்பர்க்கைத் தொழில்நுட்ப கில்லாடியாக அறிய முடிகிறது. தொழில்முறை மெசேஜிங் சேவையான ஸ்லேக் நிறுவனத்தில் பணியாற்றும் ரைசன்பர்க், மென்பொருள் கட்டமைப்பான எலக்ட்ரான் உள்ளிட்ட வற்றிலும் முக்கியப் பங்காற்றிவருகிறார்.
இவற்றின் பயன்பாட்டை விளக்குவதற்காகவும் தனது ‘கோடிங்’ வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்தச் செயலியை அவர் உருவாக்கியிருப்பதாகக் கருதலாம். அல்லது உண்மையாக ‘விண்டோஸ் 95’ இயங்குதளம் மீது காதல் இருக்கலாம். எனவே, அந்த இயங்குதளத்தை மறு உருவாக்கம் செய்திருக்கலாம்.
ஆனால், அவரது நோக்கத்தை மீறி இந்தச் செய்தி இணைய உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘விண்டோஸ் 95’ தொடர்பான நினைவலை சார்ந்த விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், ‘விண்டோஸ் 95’, கம்ப்யூட்டர் உலகின் மைல்கற்களில் ஒன்றாக இருப்பதே. இந்த இயங்குதளம் அறிமுகமான காலமும் சரி, அறிமுகமானபோது இதனால் செய்ய முடிந்த விஷயங்களும் சரி புறக்கணிக்க முடியாதவை.
1995 என்பது இணைய காலவரிசையில் முக்கியமான ஆண்டு. பின்னாளில் மின் வணிக ஜாம்பவானாக உருவான அமேசான்.காம் மற்றும் கூகுளுக்கு முன்னர் கோலோச்சிய தேடியந்திரங்களில் ஒன்றான ‘அல்டாவிஸ்டா’ அறிமுகமானது இந்த ஆண்டில்தான்.
இணையத்தின் வலை வாசலாக கோலோச்சிய ‘யாஹு.காம்’ மற்றும் இணைய ஏலத்தை தொடங்கிவைத்த ‘இபே.காம்’ அறிமுகமானதும் இதே ஆண்டில்தான். ஆக, இணையம் வெகுஜனமயமாகத் தொடங்கிய இதே காலத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தை அறிமுகம் செய்தது.
அன்றைய மென்பொருள் ராஜா
ஒரு விதத்தில் கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி, பரவலாக்கியதில் விண்டோஸ் இயங்குதளத்தின் பங்கு கணிசமானது. இதில் இடம்பெற்றிருந்த, மென்பொருள் அம்சங்களை எளிதாக அணுகுவதற்கான ‘ஸ்டார்ட் மெனு’ உள்ளிட்ட அம்சங்கள், அந்தக் கால இணையவாசிகளை கம்ப்யூட்டர் உலகுக்குள் கைபிடித்து அழைத்துச்சென்றன.
இதிலிருந்த டாஸ்க் பார் வசதி, டெஸ்க்டாப் அம்சம், இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசர் ஆகியவற்றை இன்று நாம் சாதாரணமாகக் கருதலாம். அந்தக் காலகட்டத்தில் இவை டெக்ஸ்டாப் கம்ப்யூட்டருக்கான முக்கியக் கருவிகள்.
இந்த மென்பொருள் சிடி வடிவில் அறிமுகமானதோடு, அப்போதே காலாவதியாகத் தொடங்கிவிட்டிருந்த ’பிளாப்பி டிஸ்க்’ வடிவிலும் வெளியானது. இந்த இயங்குதளத்தை அடக்க 13 ’பிளாப்பி டிஸ்க்’ தேவைப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் மீறி அறிமுகமான சில வாரங்களில் இந்த மென்பொருள் லட்சக்கணக்கில் விற்பனையானது. தொடர்ந்து விற்பனையில் சக்கை போடுபோட்டது. 1990-களில் கணினி, இணையம் பழகியவர்கள் எல்லோருக்கும், நல்லதொரு டிஜிட்டல் நண்பன் ‘விண்டோஸ் 95’.
இதெல்லாம் பழைய புராணம்தான். ஆனால் டிஜிட்டல் உலகின் மறக்க முடியாத பக்கங்கள். நிச்சயமாக, ‘விண்டோஸ் 95’ இல்லாமல், விண்டோஸ் என்.டி.க்கும் ஸ்மார்ட்போன் உலகுக்கும் தாவி வந்திருக்க முடியாது. இவை டிஜிட்டல் பாரம்பரியத்தின் அங்கம் என்பதால் இவற்றைப் பேணி காப்பது நம் கடமை.
அது மட்டுமல்ல, புதுப்புது மென்பொருட்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பழைய மென்பொருட்களை எல்லாம் மறப்பது வரலாற்றுச் சுவடுகளை அழித்துவிடும். அந்தக் கால மென்பொருட்கள் சார்ந்த தகவல்கள், பயன்பாடுகளைத் தொடர முடியாமல் போய்விடும். எனவேதான், டிஜிட்டல் மைல்கற்களைத் தகுந்த முறையில் பாதுகாத்தாக வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான், ரைசன்பர்க், ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தைச் செயலி வடிவில் உருவாக்கி அளித்திருக்கிறார். இந்தச் செயலியை இயக்குவதன் மூலம், ‘விண்டோஸ் 95’ இயங்குதளத்தில் செயல்பட்ட பெரும்பாலான சேவைகளை அதே பாணியில் பயன்படுத்திப் பார்க்கலாம். ஒரு விதத்தில் இது காப்புரிமையை மீறிய செயல்தான். ஆனாலும், நோக்கம் வில்லங்கமில்லாதது.