

ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால், எல்லாருக்கும் ஒரே மாதிரியான நாள் அமைவதில்லை. என்னிடமும் உங்களிடமும் ஐநூறு ரூபாய் இருந்தாலும், அதை நீங்கள் பயன்படுத்தும் விதமும் நான் பயன்படுத்தும் விதமும் ஒரே மாதிரி இருக்காது. ஆனால், நாம் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை மட்டும் வாழ வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்? உலகம் பிரம்மாண்டமானது. பிரபஞ்சம் அதைவிடப் பெரிது. இவை அனைத்தையும் அறிந்து
கொள்வது கடினமாக இருக்கும் என்பதால், அதன் சிறிய பகுதிகளைக் கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறோம். ‘உலகம்’, ‘பிரபஞ்சம்’ என்று சிறிய வார்த்தைக்குள் அவற்றை அடக்கி, புரிந்து கொண்டதாக நமக்கு நாமே திருப்தி அடைந்து கொள்கிறோம். அறியாத பெரிய விஷயத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளப் பயன்படுத்துவதே வார்த்தைகள், கதைகள்.