

‘ஜெனரேட்டிவ் ஏஐ’ கொண்டு கட்டுரைகள் எழுதி சமர்பிப்பதில் பலவித பிரச்சினைகள் மட்டுமல்ல, பேராபத்துகளும் இருக்கின்றன. அதற்கு முன்பாக, இந்தச் சேவைகள் எப்படிச் செயல்படுகின்றன எனத் தெரிந்துகொள்வோமா? சாட்ஜிபிடி போன்ற ஜென் ஏஐ சேவைகளிடம் பிராம்ப்ட் கொடுத்தால், பண்டைக் கால கிரேக்க நாகரிகம் தொடங்கி, குவாண்டம் கணினியின் எதிர்காலம்வரை நொடியில் கட்டுரையை எழுதியே கொடுத்துவிடும். கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்றும் பிராம்ப்டில் குறிப்பிடலாம்.
இவ்வளவு ஏன்? கட்டுரையின் நடையில் மாற்றம் தேவையென்றால், உடனே மாற்றித் தந்துவிடும். இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? இந்த மாயத்தின் பின்னே இருப்பது ‘லாங்குவேஜ் மாடல்’ என்கிற நுட்பம். தமிழில், ‘மொழி மாதிரி’ என்று இதைச் சொல்லலாம்.