

பயமின்றித் துணிந்து செயல்படுவதுதான் வீரம் என்று யார் சொல்லிப் போனார்களோ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, நடிப்புப் பயிலரங்கம் ஒன்றில் எங்கள் பயிற்சியாளர் ஒரு கேள்வி கேட்டார். ‘வீரமானவரைப் போன்று நடிக்க வேண்டுமென்றால், யாரை மனதில் கொள்வீர்கள்’ என்பதுதான் அந்தக் கேள்வி.
அர்ஜுனர், பீஷ்மர் என்று கதைகளில் படித்த வீரர்களின் பெயர்களைப் பள்ளி வருகைப் பதிவேடு போல வரிசையாகச் சொன்னோம். அதுவும் நெஞ்சை நிமிர்த்திகொண்டு, ‘இதுதானே வீரம்’ என்று கூறினோம். ஆனால், ‘அது வீரம் இல்லை’ என்று அவர் மறுத்தார்.