

சொந்தமாக வீடு ஒன்று வாங்கப் போவதாகப் அப்பா-அம்மாவிடமிருந்து செய்தி வந்ததும், வருத்தமாக இருந்தது. ஒவ்வோர் ஊருக்குச் செல்லும்போதும் அல்லது இருக்கிற ஊருக்குள்ளே வலம் வரும்போதும் தெருவோரமாக இருக்கும் வீடுகளைப் பார்த்து, ஒவ்வொரு வீட்டிலும் நாம் குடும்பத்தோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனைக் குதிரையை ஓடவிடுவது வழக்கம். 7ஆம் வகுப்பு படிக்கும்வரை பல வாடகை வீடுகளில் வசித்திருக்கிறோம். வீட்டுக்கு ஏற்றாற்போல் வீட்டில் இருக்கும் அனைவருடைய தினசரி பழக்கவழக்கங்களும் மாறுபடும்.
திருநெல்வேலியில் பெரியப்பா வீட்டில், பல் துலக்கப் பின்வாசல் வழியாகச் செல்வோம். மதுரையில் அத்தை வீட்டில் கிணற்றடிக்குச் செல்வது வழக்கம். நான்காம் வகுப்பிலிருந்தபோது நாங்கள் வசித்த வீட்டின் பால்கனியில் நின்று தினமும் காலையில் பூஸ்ட் குடிப்பது என் வழக்கம். பின்னாளில் ஓர் ஓட்டு வீட்டில் குடியிருந்தபோது, வாசல் மிகப்பெரியதாக இருந்ததால், பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், தினமும் மாலையில் வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடுவது என அங்கொரு வழக்கம் இருந்தது.