

இமோஜிக்கள் இல்லாத வாழ்க்கையை இன்று யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையினர் தங்கள் உணர்வு களை வார்த்தைகளில் தெரிவிப்பதைவிட இமோஜிக்களில் தெரிவிக்கவே விரும்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகங்களில் எந்தச் செய்தியும் இமோஜிக்கள் இல்லாமல் பகிரப்படுவதில்லை. இந்த இமோஜி கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் விதமாக ‘உலக இமோஜி நாள்’ ஜூலை 17 அன்று கொண்டாடப்பட்டது.
‘இமோஜிபீடியா’ நிறுவனர் ஜெரெமி புர்ஜ், இந்த உலக இமோஜி நாளை 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இமோஜிக்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நமக்கு அருகில் இருப்பவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாகத் தெரிவிக்கிறது ‘இமோஜிபீடியா’ நிறுவனம்.
70 புதிய இமோஜிக்கள்
இந்த ஆண்டு ‘உலக இமோஜி நாளி’ல் ஆப்பிள் நிறுவனம் எழுபது புதிய இமோஜிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிள் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் போன்றவற்றில் இந்த இமோஜிக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் மனிதர்களின் தலைமுடியில் இருக்கும் வேறுபாட்டை விளக்கும்விதமாக சிவப்பு நிற முடி, சாம்பல் நிற முடி, சுருட்டை முடி, வழுக்கைத் தலை போன்ற இமோஜிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்துடன், புதிய சுவாரசியமான ஸ்மைலி முகங்களும் இந்த அறிமுகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. விலங்குகளில் புதிதாக கங்காரு, மயில், கிளி, இறால் போன்றவையும் உணவில் மாம்பழம், கப் கேக், மூன் கேக் போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளையாட்டுப் பொருட்கள், சூப்பர் ஹீரோ, முடிவுறா சின்னம் போன்றவை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாக உள்ளன.
இதயத்தால் இயங்கும் உலகம்
இதய இமோஜிதான் ஃபேஸ்புக்கிலும் மெசஞ்சரிலும் அதிகமாகப் பகிரப்பட்ட இமோஜி என்று ஃபேஸ்புக் நிறுவனம் உலக இமோஜி நாள் அன்று அறிவித்திருக்கிறது. “2,800-க்கும் மேற்பட்ட இமோஜிக்கள் இருக்கின்றன. அவற்றில் 2,300 இமோஜிக்கள் ஃபேஸ்புக்கில் தினமும் பயன்படுத்தப்படுகின்றன. மெசஞ்சரில், ஒரே நாளில் 90 கோடி இமோஜிக்கள் எந்தச் செய்தியும் இல்லாமல் பகிரப்படுகின்றன. ஃபேஸ்புக் பதிவுகளில் தினசரி 70 கோடி இமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்ற தகவலை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உலக இமோஜி நாளை முன்னிட்டு, ட்விட்டர் நிறுவனமும் சிறந்த பத்து இமோஜிக்களைப் பட்டியிலிட்டிருக்கிறது. இதில், ‘ஹார்ட் ஐஸ்’ ஸ்மைலி, இதயம், நெருப்பு, தம்ப்ஸ் அப் போன்றவற்றை சிறந்த ஸ்மைலிகளாக ட்விட்டர் தேர்ந்தெடுத்திருக்கிறது.