

இந்தியாவின் பெரு நகரங்களில் இதுதான் தற்போது ‘ஹாட் டாக்'. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ‘போலித் திருமணம்’ எனும் வித்தியாசமான பார்ட்டி கொண்டாடுவது, இன்று வேகம் பிடித்திருக்கிறது. இது உண்மையான திருமணம் கிடையாது. ஆனால், ஒரு திருமணத்துக்கு நிகரான அனைத்து நிகழ்வுகளும் இந்தப் போலி திருமணங்களில் அரங்கேற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
பெரிய திருமண மண்டபங்கள், ஆடம்பரமான மேளதாளங்கள், பிரம்மாண்டமான விளக்கொளி, மேடை அலங்காரம், டிஜே இசை, உணவு, நடனம் என நிஜத் திருமணங்களை விஞ்சும் அளவுக்குப் போலித் திருமணங்கள் நடைபெறுகின்றன. இவ்வளவு செய்யப்படும் இந்த விழாக்களில் மணமகன், மணமகள், சடங்குகள் மட்டும் கிடையாது. இதுதான் போலித் திருமணங்களில் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது.