

“அங்க வர்றது யாரு? மீனாவா?” என்றார் வெண்சேலை உடுத்தியிருந்த பாட்டி. “என்னாது?” என்று வினவினார் காவிச்சேலை உடுத்திய பாட்டி. “அட! அங்க யாரோ வர மாதிரி இருக்கே, மீனாவான்னு கேட்டேன்!” “வாந்தி வர மாதிரி இருந்தா, இங்கேயே மரத்தோரமா நில்லு. நம்ம மீனா இல்ல? இதோ கடைசிலதான் நிக்கா. அவளையும் கூட்டிட்டு வாரேன்” என்று காவிச்சேலை பாட்டி மெதுவாக மீனாவை நோக்கி நடந்தார்.
பாம்பு காது கொண்ட வெண்சேலை உடுத்திய பாட்டிக்குப் பார்வை தெரியாது. இன்னொரு பாட்டிக்குக் காது கேட்காது. ஆனால், இந்த இரண்டு பாட்டிகளும் பிரமாதமான ஜோடிகள். நான் சிறுமியாக இருந்தபோது இவர்களுடைய தினசரி மாலை நடைப்பயணத்தைப் பார்க்கவே அழகாக இருக்கும். ஒருவர் உலகத்தில் ஒளி இல்லை. இன்னொருவர் உலகத்தில் ஒலி இல்லை. ஆனால், இருவரும் பகிர்ந்துகொள்ளும் உலகத்தில் எதற்கும் குறையே இல்லை!