

ஒ
ரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் எல்லா அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளன. அந்த அம்சங்களைத் திருக்குறள் நாட்டிய நாடகமாக அண்மையில் சென்னையில் அரங்கேற்றினார்கள்.
பாரத் பண்பாட்டு மையம் சார்பில், அதன் தலைவரும் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செயலருமான மூ.இராசாராம் உருவாக்கிய ‘குறள் அமுது- ஆயிரத்தில் ஒருவன்’ என்ற தலைப்பில் இந்த இசை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சியில் திருக்குறளில் கூறப்பட்டுள்ள மனிதனின் வாழ்வியல் அம்சங்கள் 12 காட்சிகளாக விரிந்தன. திருக்குறளின் ஒவ்வொரு விஷயத்தையும் நாட்டிய நாடகமாக வடிமைத்திருந்தது புதுமையாக இருந்தது. திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது.
இந்த நிகழ்ச்சியில் மூ.இராசாராம் எழுதிய ‘பகவத் கீதையில் வெற்றியின் ரகசியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.