Published : 01 Aug 2014 03:01 PM
Last Updated : 01 Aug 2014 03:01 PM

22 வயதில் நடன இயக்குநர் - அனுஷா சுவாமி

இந்தியாவின் இளைய நடன இயக்குநர் எனக் கலையுலகில் கொண்டாடப்படும் அனுஷா சுவாமிக்கு வயது வெறும் 22.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்னவா கல்லூரியில் உணவு அறிவியல் மற்றும் நிர்வாகவியல் படித்திருக்கும் இவர்தான் கோச்சடையான் படத்தின் தீபிகா படுகோன்! ஆமாம் கோச்சடையன் படத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்த வதனா தேவியின் கதாபாத்திரம் ஆடும் நவரச நாட்டியத்தைத் தீபிகாவுக்குப் பதிலாக ‘பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்’ முறையில் ஆடிக் கொடுத்தவை அனுஷாவின் பாதங்கள்தான்.

தற்போது பால்ரூம் நடனத்திற்காக கனடாவில் நடத்தப்பட்ட (UK championship of Latin American) சர்வதேச அளவிலான மேற்கத்திய நடனப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சென்னை திரும்பியிருக்கிறார். இத்தனை சிறிய வயதில் எந்த இந்தியப் பெண்ணும் நிகழ்த்தாத சாதனை இது.

சென்னையில் பிறந்து வளர்ந்த அனுஷா சுவாமி, ஆறு வயது முதல் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். வேம்பட்டி சின்ன சத்யம், எம்.வி.என். மூர்த்தி போன்றோரிடம் பரதக் கலையை முறையே கற்றுக்கொண்ட அனுஷா, சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜெஃப்ரி வார்டனிடம் 16 வயது முதல் லத்தீன் அமெரிக்க நடனங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

இன்று அனுஷாவுக்குப் பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, மணிப்பூரி, கதக் போன்ற பாரம்பரிய நடனங்களும், சல்சா, ஹிப்-ஹாப், சம்பா, டாங்கோ போன்ற மேற்கத்திய நடனங்களும் அத்துப்படி. அவரது வயதில் ஒரு ரியாலிட்டி ஷோவில் ஆடியிருக்கிறார். அங்கே நடுவராக வந்திருந்த பிரபலத் திரைப்பட நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், தென்னிந்திய திரைப்பட நடனக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னபடியே உறுப்பினர் ஆகிவிட்டாலும், “எனக்கு சினிமாவில் யாரிடம் சென்று பணியாற்றுவது என்று தெரியவில்லை. வலியச் சென்று வாய்ப்பு கேட்கவும் பிடிக்கவில்லை. இதனால் நடன நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தேன்” என்கிறார் அனுஷா.

அதிலேயே ஆண்டு முழுவதும் பிஸியாக இருந்த நேரத்தில்தான், ஒரு நடன நிகழ்ச்சியில் அவரது பெர்ஃபார்மென்ஸைக் கவனித்துவிட்டு ஸ்ரீதர் மாஸ்டர் தன்னிடம் உதவியாளராகச் சேரும்படி அழைத்துள்ளார். அவரிடம் பணிபுரிந்ததால் அனுஷாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தர் மாஸ்டரே பிறகு அனுஷாவை ராஜு சுந்தரம் மாஸ்டரிடம் பரிந்துரைத்துள்ளார்.

அவரிடம் பணியாற்றியபோது, “லாரன்ஸ் மாஸ்டர், பிறகு பிரபுதேவா மாஸ்டர் என்று அசிஸ்டெண்ட் கோரியோகிராஃபராக சுமார் 50 படங்களில் பணியாற்றிவிட்டேன்” என்று சொல்கிறார் அனுஷா.

ரஜினி , விஜய், ஜெயம்ரவி தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் நாகார்ஜுனா, மகேஷ் பாபு, பிரபாஸ், பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஷாஹித் கபூர், ஹாலிவுட்டில் அகான் என்று தன்னைவிட வயதில் மூத்த முன்னணிப் பிரபலங்களுக்கு நடன அசைவுகளைச் சொல்லிக்கொடுத்து அசத்தியிருக்கிறார் அனுஷா.

நடன இயக்குநராகப் பணியாற்ற அழைப்புகள் வரிசை கட்டினாலும் மனசுக்குப் பிடித்த படங்களை மட்டுமே ஒப்புக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார் அனுஷா. “அப்பா, அம்மா இருவருமே பெல் நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள். அம்மா இப்போது என்னைப் பார்த்துக் கொள்வதற்காகவே வேலையிலிருந்து விலகியிருக்கிறார். என் அப்பா பாட்டி ஒரு வயலினிஸ்ட்.

அம்மாவின் அப்பாவோ வீணை வாத்தியார். எங்கள் குடும்பத்தோடு இசைக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் என் கால்கள் நடனத்தை விரும்பியிருக்க வேண்டும்” என்று இயல்பாகச் சொல்கிறார் அனுஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x