

பிரம்மாண்ட குரலுக்கான தேடலை நடத்தும் இசைப் போட்டிகளில் பங்கேற்பதற்காகச் சாதகம் செய்பவர்களைப் பார்த்திருப்போம். இசைச் செயலிகளில் பாடி அதை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பதிவேற்றி ‘பிரபலம்’ அடைய பாட்டுப் பயிற்சி செய்பவர்களையும் பார்த்திருப்போம். ஆனால், டாக்ஸியில் சவாரி செய்யப் படாதபாடுபட்டுப் பாடல்களைப் பாடிப் பயிற்சி எடுத்துக்கொள்பவர்களைப் பார்த்ததுண்டா?
பின்லாந்து நாட்டு மக்கள் அப்படித்தான் கன்னாபின்னாவென்று கானங்களை அண்மையில் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த அட்டகாசத்துக்குக் காரணம், ‘Fortum singalong shuttle’ என்ற டாக்ஸி சேவை. ‘பாட்டுப் பாடினால் எங்களுடைய டாக்ஸியில் மூன்று நாட்களுக்குச் சவாரி இலவசம்’ என்ற அறிவிப்பை ஃபோர்ட்டம் நிறுவனம் அறிவித்தது. பின்லாந்தின் டர்க்யூ நகரில் நடைபெற்ற ‘ரூயிஸ் ராக் 2018’ இசைத் திருவிழாவில் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி அண்மையில் இந்த இசைத் திருவிழா நடைபெற்ற பகுதியிலிருந்து அரோஜோக்கி நதிக்கரைவரை இந்தச் சேவையைச் செயல்படுத்தியது.
இதில் சுவாரசியமே, இதில் முன்வைக்கப்பட்ட சில விதிகள்தாம். ‘சிங்அலாங்க் ஷட்டில்’ டாக்ஸி ஓட்டுநர்கள் பணமோ அல்லது கடன் அட்டையோ பெற்றுக்கொள்ள மாட்டார்கள். வண்டியில் பயணிப்பவர்கள் பாடினால் மட்டுமே அவர்கள் டாக்ஸியை ஓட்டுவார்கள். பாடுவதை நடுவில் நிறுத்திவிட்டால் டாக்ஸியும் உடனடியாக நிறுத்தப்படும். டாக்ஸியிலேயே கரோக்கி வசதியுடன் கூடிய பாடல்கள் இசைக்கப்படும் அதனால் ஜாலியாகப் பாடலாம், ஆடலாம், கொண்டாடலாம் என அறிவித்தது.
வெறுமனே கவன ஈர்ப்புக்காக இப்படியோரு சலுகையை இந்த நிறுவனம் முன்வைக்கவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதகம் விளைவிக்காத எரிபொருளைத் தயாரிக்கிறது ஃபோர்ட்டம் நிறுவனம். இவர்களுடைய ‘சிங்அலாங்க் ஷட்டில்’ டாக்ஸி மின்சாரத்தில் இயங்கும் பி.எம்.ட்பிள்யூ. ஐ3 (BMW i3) வகையறா கார். உலகின் ஆடம்பரமான காரில் சொகுசாகவும் அதே நேரம் சூழலியல் நண்பராகவும் சவாரி செய்யலாம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே ‘சிங் இன் தி ரெயின்’ போல ‘சிங் இன் தி கார்!’ என்கிறார்கள் இவர்கள்.
- சுசி