

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘குதந்திரம்..’ எனும் பாடல் கேரளத்தைத் தாண்டி உலகெங்கும் வைரலானது. இந்தப் பாடல் வரிகளை எழுதிப் பாடியவர் ராப் பாடகர், வேடன். சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு எதிராகவும் சமூக நீதி கருத்துகளையும் தன் பாடல் வரிகளில் குறிப்பிட்டுப் பாடிவரும் வேடன், அண்மைக் காலமாகச் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளார்.
‘வேடன்’ ஏன்? - வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி, கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்தவர். ஈழத் தாய்க்கும் கேரளத் தந்தைக்கும் பிறந்த இவர், திருச்சூரில் ‘ஸ்வர்ணபூமி’ எனும் பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக வாழும் பகுதியில் வளர்ந்தார். ராப் இசைக் கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கும்போது ‘வேடன்’ எனும் புனைப்பெயரை சூட்டிக்கொண்டார்.
கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சமூகம் ஒன்றின் பெயர் ‘வேடன்’. அதைத் தொடர்ந்து 2020இல் ‘வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்’ எனும் தனது முதல் சுயாதீனப் பாடலை இயற்றி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலித்த அந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சுயாதீன இசையைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.
கடந்த ஏப்ரலில் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பாடிய பாடலில் சாதியக் கருத்துகளையும் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளையும் முன்வைத்ததாகச் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் மீது ஓர் அரசியல் கட்சி பல புகார்களை முன்வைத்தது. வலதுசாரிகள் அவரைத் தீவிரமாக விமர்சிக்க, இடதுசாரிகள் அரவணைத்துக் கொண்டனர்.
கலை எனும் ஆயுதம்: ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் உணர்ச்சியையும் கலந்து பாடல்களை எழுதுவது வேடனின் பாணி. இவை ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாகவும் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. 1970, 80களில் பிரபலமான ராப் கலையில் புரட்சிகரமான வரிகள் பதிவாகின. அதையே வேடனும் பின்பற்றுகிறார். என்றாலும் அவருடைய பாடல்கள் விமர்சனத்துக்குள்ளாவது வழக்கமாகிவிட்டது.
வேடனுக்கு ஆதரவாகப் பலரும் சமூக ஊடகங்களில் ஹாஷ்டேக் வழியாக ஆதரவுத் தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல் கட்சியினரும், தலித் சமூகச் செயற்பாட்டாளர்களும் அடக்கம்.
அதேநேரத்தில் 2021இல் இந்தியாவில் வலுப்பெற்ற ‘மீடூ’ இயக்கத்தின்போது, வேடன் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்து சமூக ஊடகத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை எழுதினார் வேடன். இன்றுவரை பாதிக்கப்பட்ட பெண்களிடம் தனிப்பட்ட முறையில் அவர் ஏன் மன்னிப்பு கேட்காமல் தவிர்க்கிறார் என்பதும் கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.
முற்போக்கு, சமூக நீதி பேசும் ஒரு கலைஞர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் அவர் மீதான தாக்குதல் எந்த அளவுக்குத் தீவிரமாகப் பார்க்கப்படுகிறதோ, அதைப் போலவே ‘மீடு’ புகார்களும் பார்க்கப்பட வேண்டும். பாலினச் சமத்துவம் இல்லாமல் சமூக நீதி சாத்தியமாகிவிடாதே!