

ஆலியா பட் ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தால் பாலிவுட்டிற்கு அறிமுகமானவர். அவரை அறிமுகம் செய்து வைத்தவர் கரண் ஜோஹர். இதே கரண் ஜோஹர்தான் ஆலியாவை ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் அழைத்து ஜி.கே. ரவுண்டில், “இந்தியாவின் ஜனாதிபதி யார்?” என்ற ‘கடினமான’ கேள்வியைக் கேட்டு வம்பில் மாட்டிவிட்டார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. நாட்டின் ஜனாதிபதியைச் சரியாக ஆலியா சொல்லவில்லை என்றால் சும்மா விடுவார்களா நெட்டிஸன்ஸ்? சோஷியல் மீடியாவே அதிரும்படி ரகளை செய்துவிட்டார்கள். இதற்கு ஆலியா கொடுத்த பதிலடி பாலிவுட்டில் மட்டுமல்ல நாடு முழுக்க அப்ளாசை அள்ளியிருக்கிறது.
ஆலியா தன்னைத் தானே படுசீரியஸாகக் கலாய்த்து ‘ஆலியா-தி ஜீனியஸ் ஆஃப் தி இயர்’ என்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ‘காபி வித் கரண்’ சங்கடத்திற்குப் பிறகு ஆலியா எப்படி அறிவாளியாக ஆகிறார் என்பதைப் படு நகைச்சுவையாக எடுத்திருக்கிறது ஏஐபி. இந்த வீடியோவில் அர்ஜூன் கபூர், பரினீதி சோப்ரா, கரண் ஜோஹர், ஆலியாவின் அப்பா மகேஷ் பட் எனப் பலர் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருக்கின்றனர்.
ஜாலியாகப் பத்து நிமிடம் சிரிக்க வேண்டுமென்றால் இந்த வீடியோவைப் பார்க்கலாம். தன்னைத்தானே ‘கலாய்த்து’க் கொள்கிற இந்தச் சின்னப் பெண்ணின் பக்குவம் இங்கே எத்தனை பெரிய மனிதர்களுக்கு வரும்?