

இன்றைய பரபரப்பான நகர வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்பதே ஃபேஸ்புக் பார்ப்பதும், தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்பதும் என்றாகிவிட்டது. இதனைத் தவிர்த்துத் தன் படைப்பாற்றலை வளர்க்க வழிவகுக்கும் கைவினைக் கலைகளைப் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்ப்பவர்கள் வெகு சிலரே.
இஞ்ஜினீயரிங் படித்து, இசையில் ஈடுபட நினைத்து, தன் மனதை ஈர்த்த உணவுப் பண்டங்களைக் களிமண்ணில் தத்ரூபமாக வடிவமைத்து அதனையே தன் தொழிலாகக் கொண்டு வெற்றி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த ஷில்பா மித்தா வித்தியாசமானவர்.
கலை என்பது மனித மனதின் ரசனை சார்ந்தது. மிகச் சிறிய அளவில் நுணுக்கமாக, ஃப்ரிட்ஜில் மேக்னெட்டாக ஒட்டிவைக்கும் வகையில் பலகார வகைகளையும், பற்பல உணவு வகைகளையும் வடிவமைத்திருக்கிறார் இவர். சமையலறையில் தன்னைச் சுற்றியுள்ள காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், இவற்றின் நிறங்களும், வடிவங்களும் தான், இந்தக் கலையில் ஈடுபடத் தூண்டுகோலாக இருந்தன என்கிறார் ஷில்பா.
இதில் குறிப்பிடத்தகுந்த சிறப்பு, இவர் களிமண்ணில் உருவாக்கிய தின்பண்டங்கள் அனைத்தும் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்குள் ளேயே உள்ளன. களிமண்ணில் சிலைகள், கீ செயின்கள், காதணிகள் போன்றவற்றை வடிவமைக்கும் இவர், நண்பர்களின் ஊக்குவிப்பால் தன் பொழுதுபோக்கையே தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
மறக்க முடியாத தருணம்
“எனக்கு இசைமேல் இருந்த ஈர்ப்பின் காரணத்தினால் நான் உலகப் புகழ்பெற்ற பியானோ இசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளரான, யானி அவர்களை வடிவமைத்தேன். அதனால் அவரைச் சந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்து, அதுவே என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” என்கிறார் ஷில்பா.
வித்தியாசமான முறையில் உணவு வகைகளை உருவகப்படுத்தும் இவருக்கு வாழை இலையில் பரிமாறப்பட்ட பாரம்பரியப் பண்டங்களை வடிவமைப்பதற்குத்தான் அதிக நேரம் தேவைப்பட்டுள்ளது.
சராசரி மனிதர்களுடைய கவனத்தை ஈர்த்து, மனதில் பதியக்கூடிய விஷயங்களையே தன்னுடைய அடுத்தடுத்த படைப்புகளுக்கு அடித்தளமாகத் தேர்ந்தெடுக்கிறார்.
இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றுள்ள இவருடைய வேலைப்பாடுகள் ரூ.200முதல் ரூ.750வரை பரிசுப் பொருட்களாக விரும்பி வாங்கப்படுவதாகத் தெரிவிக்கிறார். இவர் தயாரிக்கும் மனித வடிவங்கள் ரூ.3000 முதல் ரூ.7000 வரை விற்கப்படுகின்றன என்கிறார்.
சென்னை ஸ்பெஷல்
ஐந்து தலைமுறைகளாகச் சென்னையில் வசித்து வரும் இவருடைய பரம்பரையின் நினைவாக, சென்னையின் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில், பிரத்யேகமான ‘சென்னை ஸ்பெஷல்’ என்ற தலைப்பில் தான் ரசித்த தோசை, இட்லி, காபி, கார் போன்றவற்றின் பிம்பங்களை உருவாக்கியுள்ளார்.
தன் எதிர்கால லட்சியமாகக் களிமண் வடிவங்களைக் கொண்ட ஸ்டூடியோ அமைக்க வேண்டும் என்று விரும்பும் இவர், இந்தக் கலையின் மூலம் தானும் பயனுற்று மற்றவர்களும் பயன்பெற பெங்களூர் மற்றும் சென்னையில் தொடர்ச்சியாகப் பயிற்சியும் அளித்துவருகிறார்.