

இந்தியாவில் தமிழகத்திலிருந்து செஸ் சாம்பியன்கள் உருவாவது புதிது அல்ல. ஆனால், சிலருடைய வெற்றி அர்த்தமுள்ள வெற்றியாகக் கருதப்படுவது உண்டு. அந்த வகையில் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ் வென்று, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மாண்டெனெக்ரோவில் அண்மையில் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 67 நாடுகளைச் சேர்ந்த 260 பேர் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தனர். இத்தொடரில்தான் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.