

இளைஞர்கள் வாழ்வில் சினிமாப் பாடல்களுக்கெனத் தனி இடம் இருக்கிறது. அவர்களுடைய உணர்வோடும் உயிரோடும் ஒட்டி உறவாடுபவையாக அப்பாடல்கள் உள்ளன. காலங்கள் கடந்தாலும், நம் பால்யத்தை நினைவுபடுத்தும் மகத்தான சக்தி பாடல்களுக்கு உண்டு. அதுவும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த யுகத்தில் இளைஞர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதில் அல்லது தனிமை எண்ணங்களை அகற்றுவதில் பாடல்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
தொழில்நுட்பப் பாய்ச்சல்: இன்றைய 2கே கிட்ஸ் அப்பாவின் தலைமுறை காலத்தில் எல்.பி. ரெக்கார்டுகள், அதைத் தொடர்ந்து ஆடியோ கேசட்டுகள், சிடிகள் எனப் பாடல்கள் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வரிசைகட்டின. எம்பி 3யின் வருகையால் இந்த வளர்ச்சி அதிவேகம் எடுத்தது. ஒரு சிறிய தகட்டில் நூற்றைம்பது பாடல்கள் என்கிற தொழில்நுட்பம் எல்லாருடைய காதிலும் தேனைக் கொண்டுவந்து பாய்ச்சியது. பெரிய பாடல்களுக்கு எல்.பி. ரெக்கார்டைத் திருப்பிப்போட வேண்டும் என்கிற செய்தியெல்லாம் இந்தத் தலை முறையினருக்குப் புதிராகவும் விந்தையாகவும் இருக்கும். ஆனால், அப்படி ஒரு தலைமுறை பாடல்களை ஆராதித்த காலமும் உண்டு.