

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தனது ஆக்டோபஸ் கரங்களை எல்லாத் துறைகளுக்கு உள்ளேயும் சிறிது சிறிதாக நுழைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியர்களுக்கும் டிசைனர்களுக்கும் விழுந்தது முதல் அடி. அடுத்தடுத்து இசை, பாடல், அனிமேஷன் எனத் தொடங்கி ஒட்டுமொத்தக் கலைஞர்களுக்கும் ‘பை பை’ சொல்லக் காத்திருக்கிறது ஏ.ஐ. இந்தச் செயற்கை நுண்ணறிவால் வருங் காலத்தில் வலுவாக அடி வாங்கப்போகும் 2கே கிட்ஸ், இப்போது என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என யோசித்தபோது ஒரு ரீல்ஸ் கண்ணில் சிக்கியது.
இண்டர்வியூ அலப்பறை: வழக்கம்போல் 2கே தம்பி ஒருவர், இன்னொரு தம்பியிடம் மைக்கை நீட்டி, `உன்னோட வாழ்க்கை லட்சியம் என்ன?' எனக் கேட்க, அதற்கு அந்தத் தம்பி `இன்ஸ்டகிராம்ல ஃபேமஸ் ஆகணும்' எனத் தீர்க்கமான உடல்மொழியோடு சொல்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘பெரிய யூடியூபர் ஆகணும், பெரிய டிஜிட்டல் கிரியேட்டர் ஆகணும்' என்பார்கள். இப்போது, சுத்தி வளைத்து ஒரே போடு! `இன்ஸ்டகிராமில் பிரபலம் ஆகவேண்டும்' எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.