கிரிக்கெட்டுக்கு  அப்பால்... | ஈராயிரத்தில் ஒருவன்

கிரிக்கெட்டுக்கு  அப்பால்... | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

‘லப்பர் பந்து' திரைப்படத்தில் வரும் கெத்து பூமாலை 80'ஸ் கிட்ஸ் என்றால், அன்பு 90'ஸ் கிட்ஸ். இருவருக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தாலும் அவர்களை இணைப்பது கிரிக்கெட்தான். ஆனால், இருவரும் கிரிக்கெட்டை பார்த்த விதம் வேறு. திரைப்படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் இதுபோன்ற ஆறு வித்தியாசங்களை நிறையவே கண்டுபிடிக்க முடியும். கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் போலக் கருதப்பட்டாலும், அதைப் பார்க்கும் முறை மாறிவருகிறது. உன்னிப்பாக கவனித்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

மைதானமே கதி: முழு நெல்லிக்காயிலிருந்து முழுப் பூசணிக்காய் வரை கையில் எது உருண்டையாகக் கிடைத்தாலும், 90ஸ் கிட்ஸ் அதைக் கொண்டு அனிச்சையாக பவுலிங் போடும் தலைமுறை. சூப்பர் மார்க்கெட்டுகளில் எதிர்ப்படும் கிரிக்கெட் மட்டையைப் பார்த்ததும் சட்டெனக் கையிலெடுத்து, காற்றிலேயே கவர் டிரைவ் ஆடிவிட்டு வைக்கும் தலைமுறை. தொலைவிலிருந்து கையில் கொடுக்க முடியாமல் தூக்கிப்போடும் சின்னஞ்சிறு பொருளைச் சரியாகப் பிடித்துவிட்டால், அன்றைய நாள் முழுக்கப் பெருமிதமாகச் சுற்றும் தலைமுறை.

சோளக்கதிரை வாங்கித் தின்றுவிட்டு அதன் கட்டையையும், வாட்டர் பாக்கெட் வாங்கி குடித்துவிட்டு அதனுள் பேப்பரையும் திணித்து பந்தாக மாற்றி விளையாடியது முந்தைய தலைமுறை. பள்ளி விட்டு வீடு திரும்பியதும் கொசு எழுந்திருக்கும் பொழுது முதல் சூரியன் உறங்கும் வரை கிரிக்கெட்தான். இருட்டுகிற பொழுதுகளில்கூட விளையாட வேண்டுமென்கிற வெறியில், பச்சை வண்ண பிளாஸ்டிக் பந்துகளைக் கொண்டு விளையாடிய காலமுண்டு.

இப்படி ஆரம்பித்த கிரிக்கெட் வெறியில், எங்கெங்கோ பேட்டைத் தூக்கிக்கொண்டு பயணித்து எத்தனையோ பேர் வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய 2கே தலைமுறையினர் அப்படி இல்லை. இப்போதும் தெருக்களில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கிறேன். மைதானங்கள் நிரம்பி வழிகின்றன. டர்ஃபிலும் வாடகை கொடுத்து விளையாடுகிறார்கள். ஆனால், முன்பிருந்த அளவுக்கு கிரிக்கெட்டின் மீது மூர்க்கத்தனமான ஈடுபாடு இல்லை.

மாறிய பார்வை: விளையாட்டை விளையாட்டாகவே ரசிக்கிறார்கள். என் நாடு, என் அணி என்கிற வெறி குறைந்துவிட்டது. நாடு, தேசம் என்பதைக் கடந்து வீரர்களை, அவர்களின் ஆட்ட நுணுக்கங்களையே முதன்மையாக ரசிக்கிறார்கள். அவர்கள் ஆடுகிற அணி பூலோகத்தில் எங்கு இருந்தாலும், அதை விருப்பமான அணியாகச் சொல்கிறார்கள். முன்புபோல டெஸ்ட் போட்டிகளைக்கூட தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்து நேரலையில் ஐந்து நாள்கள் பார்க்கும் மனநிலை ஈராயிரக் குழவிகளுக்கு இல்லையென்றாலும், போன்களில் எல்லா ஆட்டங்களையும் ஹைலைட்ஸ்களாகப் பார்த்துவிடுகிறார்கள்.

உள்ளூர்ப் போட்டிகளைக்கூடப் பார்த்து, அதில் ஆடும் வீரர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
கிரிக்கெட்டே மூச்சு என்று திரிந்த 90'ஸ் கிட்ஸ்கூட இந்தளவிற்கு உள்ளூர்ப் போட்டிகளைப் பின்தொடர்ந்ததில்லை. முக்கியமாக, இந்த 2கே கிட்ஸ், ஆண்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் முக்கால் பங்காவது பெண்கள் கிரிக்கெட்டுக்கும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்க மாற்றம் இது.

இது எல்லாவற்றையும்விட இந்த ஈராயிரத் தலைமுறையிடம் நடந்திருக்கும் மகிழ்ச்சியான மாற்றம் என்னவெனில், விளையாட்டு என்றால் வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல. அதையும் தாண்டி நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அந்த விளையாட்டுகளையும் பின்தொடர்வதுதான். கால்பந்து தொடங்கி கார் ரேஸ் வரை எல்லாவற்றுக்கும் கணிசமான ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். ‘சினிமா - அரசியல் - கிரிக்கெட்’ என்பதை ‘சினிமா - அரசியல் - விளையாட்டு’ என மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆக ரெடி... ஸ்டெடி... கோ...

(வருவான்)

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in