

`உங்க பசங்களோட கிளாஸ் நோட்டுப் பார்த்திருப்பீங்க, டெஸ்ட் நோட்டுப் பார்த்திருப்பீங்க. அவங்க மார்க்ஷீட், எக்ஸாம் பேப்பர்னு எல்லாத்தையும் பார்த்திருப்பீங்க. ஆனா, என்னைக்காவது அவங்க ரஃப் நோட்டை எடுத்துப் பார்த்திருக்கீங்களா? ’அதுல ஒளிஞ்சுருக்கு, அவன் திறமை.
அதுல ஒளிஞ்சுருக்கு, அவன் கனவு' என `ஹீரோ' படத்தில் வசனம் பேசியிருப்பார் நடிகர் சிவகார்த்திகேயன். உண்மைதான். அப்படியே, முந்தைய தலைமுறை ரஃப் நோட்டைத் திறந்து கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், அவன் திறமை, கனவு, வாழ்க்கை, குடும்பம், குழந்தை, குட்டி, ரேஷன் கார்டு என எல்லாமே வெறும் ஆறு எழுத்தில் அடங்கியிருக்கும். அதுதான் ஃபிளேம்ஸ் (FLAMES).
ஃபிளேம்ஸ் பசங்க: F - ஃபிரெண்ட்ஷிப், L - லவ், A - அஃபெக்ஷன், M - மேரேஜ், E - எனிமி, S - சிஸ்டர். இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள உறவு என்னவாக இருக்கிறது, என்னவாக மாறப் போகிறது என்பதைக் கண்டறிய முந்தைய தலைமுறை உருவாக்கிய ஒரு வழி. ரஃப் நோட்டுகளின் கடைசிப் பக்கத்தில் ஒரே பெயருக்கு 20 முறையோ, அல்லது 20 பெயர்களுக்கு ஒவ்வொரு முறையோ ஃபிளேம்ஸ் போட்டுப் பார்த்திருப்பார்கள் முந்தையத் தலைமுறை.
அதுவும் `லவ்' என்பதைத் தவிர, `கிரஷ்', `பிரேக்-அப்' என எந்த வார்த்தைகளையுமே அறியாத வயதில், புரியாத மனதில், `அஃபெக்ஷன்' எனும் ஆங்கில வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. அன்பு, ஈர்ப்பு, பாசம், ஆசை எனத் தமிழகத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் அதற்கு ஒவ்வோர் அர்த்தத்தைச் சொல்வார்கள்.
திடீரென இந்தக் கிழிந்த ரஃப் நோட்டுக் கதைகளைக் கிளற காரணம், வேறு ஒன்றுமில்லை. அஃபெக்ஷனுக்கு அர்த்தம் தெரியாத நாமளே FLAMES என ஆறு எழுத்துகள் எழுதி ‘ஓஜா போர்டு’ ஆடியிருக்கிறோமே, இந்த 2கே கிட்ஸுக்கு ஆங்கிலத்தின் 26 எழுத்துகளை எழுதினாலும் பத்தாதே எனக் கண நேரத்தில் கபாலத்தில் உதித்தது சிந்தனை.
‘லவ்’, ‘லிவிங்’ தொடங்கி ‘சிச்சுவேஷன் ஷிப்’, ‘டெக்ஸ்டேஷன் ஷிப்’, ‘கஃபிங்’, ‘ஃபிரெக்லிங்’, ‘கோஸ்டிங்’, ‘ஸோம்பியிங்’ எனப் புழக்கத்துக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் வார்த்தைகளின் பட்டியல் எக்கசக்கமாக நீள்கிறது. அதிலும் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தைத் தேடிப் படித்தால், தலை எக்குத்தப்பாகச் சுற்றுகிறது.
எக்குத்தப்பான அர்த்தங்கள்: இதில், ‘சிச்சுவேஷன் ஷிப்’ என்பதை இப்படிச் சொல்லலாம். இருவருக்கு இடையிலும் காதல் பூத்துக் குலுங்கும். மகரந்தச் சேர்க்கையும் அரங்கேறும். ஆனால், அந்த உறவின் எல்லை எது, பொறுப்பு எது, நிலைப்பாடு எது என எதையுமே திட்டவட்டமாகக் கூறும் நிலையில் இருக்காது.
‘ஃபிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்' எனும் உறவுமுறையைப் பற்றிப் பேசுகையில் நகைச்சுவைக் கலைஞர் ஒருவர் `90'ஸ் கிட்டான எனக்கு என் கேர்ள் ஃபிரெண்டால் கிடைத்த ஒரே பெனிஃபிட், கணித வகுப்புகளில் வட்டம் வரைய வளையல் கொடுத்ததுதான்' என அப்பாவித்தனமாக அடித்த முரட்டு காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ஆனால், இதன் உண்மையான அர்த்தம் அவ்வளவு அப்பாவித்தனமாக எல்லாம் இல்லை.
‘டெக்ஸ்டேஷன் ஷிப்’ என்றால் இருவர் தங்களுக்குள் ஒரு காதல் இணையைப் போலவே இணைய உலகில் எழுத்தின் ஊடாகப் பேசி, காதல் வளர்ப்பார்கள். ஆனால், நேரில் முகம் கொடுத்துகூடப் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதாவது, இணைய உலகில் அதுவும் குறுஞ்செய்தி பெட்டிக்குள் மட்டுமே அவர்கள் காதலர்கள். நிஜ உலகில் செல்லுபடியாகாது.
‘கஃபிங்’ என்றால் குளிர்காலம் மட்டும் காதலித்துவிட்டு, குளிர் முடிந்ததும் ஸ்வெட்டரோடு சேர்த்துக் கழற்றி எறிந்துவிடுவதும், ‘ஃபிரெக்லிங்’ என்றால் கோடைக்காலம் மட்டுமே காதலித்துவிட்டு, பின் காலாவதியாவதும் எனத் தினுசு தினுசாகக் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் இந்த 2கே கிட்ஸ்.
‘கோஸ்டிங்’ என்றால், ஓர் உறவில் எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி ஒருவர் திடீரெனக் கழன்று, கண்ணில் படாத இடத்துக்குள் மறைந்துவிடுவது அல்லது நம்மை மறைத்து வைப்பது. ‘ஸோம்பியிங்’ என்றால், ‘கோஸ்டிங்’ ஆன பார்ட்டி ஒன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுந்து வருவது எனக் காதல் வார்த்தைகள் எல்லாம் கேட்கவே திகிலாக இருக்கின்றன.
எப்படிப் புரிய வைப்பது? - ‘DTR’ என்றால் டிஃபைன் தி ரிலேஷன்ஷிப். அதாவது, இருவருக்கு இடையே உள்ள உறவைத் தெளிவாக விளக்குவதாம். இருவர் உரையாடும் பொழுதுகளிலேயே சரியான தருணத்தில் இதைப் பற்றி பேசி, விளக்கம் பெற்று ஒரு புரிதலுக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு தவறான நபரிடம், தவறான உறவுக்குள் சிக்கிவிடக் கூடாது.
சிக்கிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிவிடக் கூடாதெனத் தெள்ளத்தெளிவாக, தான் இருக்கிற உறவில் தனது நிலைபாட்டை எடுத்துரைக்கவே இத்தனை வார்த்தைகளையும் 2கே கிட்ஸ் கண்டறிந்திருக்கிறார்கள். தாலி கட்டினாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பிய முந்தைய தலைமுறையிடம் இதை எப்படிச் சொல்லிப் புரியவைப்பதோ!
(வருவான்)
- iamsuriyaraj@gmail.com