

ஈராயிரக் குழவி ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். `உங்க தலைமுறையைப் பத்தி `ஈராயிரத்தில் ஒருவன்’ தொடர் எழுதுகிறேன்'' என்று சொன்னேன். `ஈராயிரத்தில்ன்றது நீங்க பிறந்த ஊரா ப்ரோ?' எனத் திருப்பிக் கேட்டான். தூக்கிவாரிப் போட்டது.
இதேபோல், ஒருமுறை வஞ்சம், வன்மம், பழிக்குப்பழி போன்ற உணர்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக் கையில், `ஆசை வார்த்தை' என்கிற வார்த்தை வாயிலிருந்து விழுந்தது. அதைக் கேட்டதும், `ப்ரோ, இப்போ என்ன சொன்னீங்க?' என 2கே கிட் ஒருவன் பிரகாசமானான். `ஆசைவார்த்தைடா' என்றேன். `சூப்பரா இருக்கு ப்ரோ' என வெட்கப்பட்டுக் கொண்டான். அடுத்த நாள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தன் காதலியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியைப் பதிவிட்டு, `உன்கூட ஆசைவார்த்தைப் பேசணும்' என கேப்ஷன் போட்டு வைத்திருந்தான். `ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர்' என்பது போன்ற செய்திகளை எல்லாம் அவன் படித்ததே இல்லையோ என்று தோன்றியது.
மறந்துபோன அடுக்குமொழி: ஒரு விஷயம் நன்றாக இருக்கிறது என்றால், அதை, நல்லாருக்கு, சூப்பரா இருக்கு, செமையா இருக்கு, கெத்தா இருக்கு, பட்டாசா இருக்கு, அட்டகாசமா இருக்கு, ரகளையா இருக்கு, தரமா இருக்கு, சிறப்பா இருக்கு, ஜம்முனு இருக்கு, பக்காவா இருக்கு, மாஸா இருக்கு, மிரட்டலா இருக்கு, டாப்பா இருக்கு, டக்கரா இருக்கு, அம்சமா இருக்கு, அசத்தலா இருக்கு, நொறுக்கலா இருக்கு, அரட்டலா இருக்கு என 90'ஸ் கிட்ஸ் டி.ராஜேந்தர் துணையோடு வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆனால், இந்த 2கே கிட்ஸ் இத்தனை வார்த்தைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ‘வேற லெவல்ல இருக்கு’ என்கிற வார்த்தையைப் ‘பாகுபலி’யைப் போல் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
‘இந்த ஹோட்டல் பார்க்கவே வேற லெவல்ல இருக்குங்க. சாப்பாடு பத்திச் சொல்லணும்னா, வேற லெவல்ல இருக்கு. அப்புறம் இவங்க கவனிக்குற விதமும் வேற லெவல்ல இருக்கும்’ என ஒரு வீடியோவை முடித்துவிடும் வல்லமை அவர்களுக்கு உண்டு. `வேற லெவல்ன்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லியே வேற லெவல்ல போர் அடிக்குதோ என்னவோ அவர்களுக்கு. இப்போதுதான், `மஜாவா இருக்கு', `மிட்டாவா இருக்கு', `ஸோவா இருக்கு' என வேறு வார்த்தைகளையும் கொஞ்சம் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கிறார்கள். இதோடு, ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ போன்ற ஆதிமனிதர்கள் பயன்படுத்திய ஒலிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கொஞ்சம் படிங்கப்பா... டியூடியூப் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஏதோவொரு ரோட்டு கடையில் சோடா வாங்கிக் குடிக்க, அது நன்றாகவும் இருந்திருக்கிறது. அதை ஒரு காணொளியில் விவரிக்க, `சூப்பரா இருந்துச்சுங்க, நல்லா இருந்துச்சுங்க' என்பதைத் தாண்டி வார்த்தைகள் பெரிதாக அவரிடம் வரவில்லை. வேறு எப்படி விவரிப்பதென நீண்ட நேரம் யோசித்துவிட்டு, அந்த சோடாவில் சேர்க்கபட்டிருந்த பொருள்களைப் பட்டியல் போடத் தொடங்கினார். இந்த சோடால இனிப்பு, உப்பு அப்புறம் ‘பு... பு... புத்து' எனத் தடுமாறிய அவர், `புனிதாலாம் போட்ருக்காங்க' எனக் குபீர் கிளப்பினார். ’புதினா’வைத்தான் அவர் ‘புனிதா’ என்கிறார் எனப் பிறகுதான் புரிந்தது.
ஈராயிரக் குழவிகளுக்கு மொழி வளமை ரொம்பவே குறைவாகத்தான் இருக்கிறது. சமூக வலைதளங்களில் அதிகம் புழங்காத வார்த்தைகள், அவர்களின் அகராதியிலேயே இடம்பெறுவதில்லை. உசிதம், தாத்பர்யம், சாமர்த்தியம், கைங்கர்யம், தெய்வாதீனம் போன்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டாலே திருதிருவென முழிக்கிறார்கள். ஈராயிரக் குழவிகளே, சமூகவலை தளங்களைத் தவிர்த்து புத்தகங்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள் என வெவ்வேறு தளங்களிலும் படிக்கத் தொடங் குங்கள். அப்புறம் பாருங்க, வேற லெவலில் எதையும் பண்ணலாம்.
(வருவான்)
- iamsuriyaraj@gmail.com
வேற லெவல் ப்ரோ