“வீட்டையே அலறவிடுவேன்!” - காபி வித் வி.ஜே. பார்வதி
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் நட்சத்திரமாக உயர்ந்தவர், வி.ஜே. பார்வதி. யூடியூப் அலைவரிசையில் பிராங்க் ஷோ நடத்தியும் பெயர் பெற்றவரான அவரை, ஒரு மாலை வேளையில் காபிக் கோப்பையுடன் சந்தித்தபோது நடந்த உரையாடல்.
சூரிய உதயத்தைப் பார்க்கும் பழக்கம் உண்டா? - சூரிய உதயமா? அதெல்லாம் என் டிக்ஷனரியில் கிடையாது.
ஒர்க் அவுட்டா, டயட்டா? - ஒர்க் அவுட்டெல்லாம் ஜிம்முக்கு பணம் கட்டுறதோடு சரி. டயட்தான். காலையில் எழுந்தவுடன் தண்ணீர், நெய்; பிறகு நடைப்பயிற்சி, சாலட், பழங்கள். மதியம் 12 மணிக்கு மேல்தான் வழக்கமான உணவையே கண்ணுல பார்ப்பேன்.
தனித்துவமான பழக்கம்? - வீட்டில் தனியாக இருக்கும்போது மோட்டிவேஷனல் பேச்சு, சுப்ரபாதம், பாடல்கள் என பிளேயரில் அலறவிடுவேன். இப்படி இருந்தால்தான் வீட்டில் ஆள் இருக்குற மாதிரி ஃபீல் இருக்கும்.
இந்த வேலை இல்லையெனில் என்ன செய்திருப்பீர்கள்? - வெளிநாட்டில் கார்ப்பரேட் வேலையில் இருந்திருப்பேன்.
எதிர்காலத் திட்டங்கள்? - டிராவல் பிசினஸ் தொடங்கியிருக்கேன். அதை இன்னும் டெவலப் பண்ணணும். சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - நிறைய புத்தகங்கள் படிக்கும் சீரியஸ் ஆள் நான்.
பொழுதுபோக்கு? - எனக்கு கலரிங் பண்ண ரொம்பப் பிடிக்கும். இது ஒரு மைண்ட் தெரபி மாதிரி. அப்புறம் என்னுடைய வளர்ப்பு நாய்களோடு நேரம் போறதே தெரியாது.
பிடித்த சோஷியல் மீடியா எது? ஏன்? - இன்ஸ்டகிராம்தான். பெண்களின் வளர்ச்சிக்கான பக்கங்களைப் பின்தொடர்ந்து பார்ப்பதில் அலாதிப் பிரியம்.
உறங்கவே விடாத விசயம்? - ஒவ்வொரு முறையும் நம்மை புரூவ் பண்ணணும் என்பதுதான். யூடியூபால் வளர்ந்தேன். ஆனாலும், எப்போதும் ஒரு தனித்துவத்தை மெயின்டெய்ன் பண்ண வேண்டியிருக்கிறது.
மறக்கவே முடியாத நபர்? - சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஹாஸ்டல் அறை கிடைப்பது ரொம்பக் கஷ்டம். என்னுடைய சூழலைப் புரிந்துகொண்டு ஹெச்.ஓ.டி. ரேச்சல் எனக்கு செய்த உதவியை மறக்கவே முடியாது.
மனதில் பதிந்த வாசகம்? - கடல் அலைபோல கீழே விழவும் செய்வேன். மேலே எழவும் செய்வேன்.
மறக்க முடியாத தேதி? - என் அப்பா தவறிய (02-06-13) நாள்.
திரும்பத் திரும்பப் போக விரும்புமிடம்? - எங்கூரு மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சொர்க்கம் கொடைக்கானல்.
