பேட்ட ராப் முதல் எஞ்சாய் என்ஜாமி வரை! | ஈராயிரத்தில் ஒருவன்

பேட்ட ராப் முதல் எஞ்சாய் என்ஜாமி வரை! | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

சாலையில் நடந்துகொண்டிருக்கும் யாரோ ஓர் ஈராயிரக் குழவியிடம், `டேய் யார்றா அந்தப் பையன்?' எனக் கேட்டுப் பாருங்கள். சட்டென, `நாந்தான் அந்தப் பையன்' என்பார். அந்தளவுக்கு இன்ஸ்டா பட்டி, ஃபேஸ்புக் தொட்டி எல்லாம் பிரபலமாகியிருக்கிறது இந்தப் பாடல். ‘ஓ போடு’, ‘அப்படிப் போடு’, ‘மன்மத ராசா’, ‘சீனா தானா’, ‘நாக்க முக்க’ தொடங்கி ‘ஆலுமா டோலுமா’, ‘ரௌடி பேபி’, ‘வாத்தி கம்மிங்’ எனத் திரையிசைப் பாடல்களுக்கே தோள்களைக் குலுக்கிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், சமீபகாலமாகச் சுயாதீன இசை எனப்படும் தனியிசைப் பாடல்களுக்கே ரிப்பீட் பொத்தானை அழுத்திக்கொண்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக ராப் பாடல்களுக்கு.

என்னைப் போன்ற 90'களில் பிறந்தவர்களுக்கு `பேட்ட ராப்' பாடல் மூலமாக `ராப்' என்கிற வார்த்தை அறிமுகமாகியிருந்தாலும், ராப் பாடல்கள் பெரிதாக அறிமுகமாகவில்லை. ‘லவ் பேர்ட்ஸ்’ படத்தில் வரும் `நோ ப்ராப்ளம்' பாடல், ‘பாபா’ படத்தின் தீம் பாடல் என ஆங்காங்கே ஒன்றிரண்டு காதினிலே பாய்ந்திருந்த போதிலும், ‘குணா... அந்த ராஜா சார் சாங் பாடுங்க’ எனத் தொடங்கும் `மடை திறந்து' பாடல்தான் ராப் எனும் காட்டாற்றைத் தமிழ்ச் சமூகத்தினுள் மடை திறந்துவிட்டது.

அந்தப் பாட்டைப் பாடுகிறேன் என்று அவரவர் அவர் பாட்டுக்கு எதையாவது பாடிக்கொண்டிருப்பர் எவருக்கும் சரியான பாடல் வரிகளும் தெரியாது. அதை எப்படிப் பாடுவதென்றும் புரியாது. அதைத்தான் யோகி பி, `எவனுக்குமே தெரியாது. உனக்குச் சொன்னால் புரியாது' எனப் பாட்டாகவே பாடிக்கொண்டிருக்கிறாரோ என்றெல்லாம் தோன்றும். யோகி பி, எம்ஸி ஜெஸ், டாக்டர் பர்ன் கூட்டணிதான் `ராப்' பற்றியும் `ராப்பர்கள்' பற்றியும் பேரறிமுகத்தைத் தந்தது. ஊருக்குள் யாராவது தொளதொளவென டி-ஷர்ட் அணிந்திருந்தால் `யோகி பி டிஷர்ட்' எனக் குறிப்பிடும் அளவுக்கு அவர்கள் பிரபலமாக இருந்தார்கள்.

இதில் துளிர்விட்ட ராப் ஆர்வம்தான், அடுத்தடுத்து எமினம், 50 சென்ட், ஏகான் எனத் தேடித் தேடிக் கேட்க வைத்து, தொடக்கத்தில் 50 சென்ட்டின் `இன் த கிளப்' பாடலின் கெட்ட வார்த்தை வெர்ஷனைத் தமிழில் ரிலீஸ் செய்தார்கள். அதைக் கேட்டு `வெளங்கும்டா' எனத் தலையில் அடித்துக்கொண்ட நேரத்தில்தான் `வாட்டபாட்டில்ஸ்' வந்தார்கள்.

அதிலிருந்து ஹிப்ஹாப் தமிழா ஆதியும் ஜீவாவும் வந்தார்கள். ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் வந்தார். இருவரும் தனியிசைப் பாடல்களில் தங்கள் பயணத்தைத் தொடங்கி அட்டகாசமான பாடல்களைக் கொடுத்திருந்தாலும் எப்பேர்ப்பட்ட காட்டாறும் கடலில் சென்றுதான் முடியும் என்பதுபோல மெயின் ஸ்ட்ரீம் கலைஞர்களாக மாறிப்போனார்கள்.

வெற்றுக்கூச்சல் அல்ல... ஆனால், இணையப்புழக்கமும் அதிகமாகிவிட்ட, இளைஞர்களின் ரசனையும் மாறிவிட்ட சென்ற ஐந்தாண்டுகளில் இவர்களைப் போன்ற தனியிசைக் கலைஞர்கள் தனியிசைப் பாடல்கள் மூலமாகவே பெரும் புகழ் வெளிச்சத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுவருகிறார்கள். இந்தப் போக்கு மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், சிலவற்றை நினைத்து வருத்தபடுவதும் உண்டு. குறிப்பாக, வாழ்வியலைப் பாடுதல், அரசியலைப் பாடுதல், அழகியலைப் பாடுதல் என்பதில்லாமல் மேம்போக்கான, உணர்ச்சிகளற்ற, அரசியலற்ற கூறுகளைப் பாடுவது.

ராப் வெறும் வெற்றுக்கூச்சல் அல்ல. போராட்டங்களில் முழங்கும் முழக்கங் களைக் கூச்சல் என்றா சொல்வோம்? அப்படி ராப் இசையும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான். அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராகத்தான் முதலில் ராப் பாடப்பட்டது. நம் ஊரிலும் `ஆஃப்ரோ அறிவு' இணையின் `கள்ளமௌனி' பாடலில் சமூகத்தை அவ்வளவு நுணுக்கமாக நையாண்டி செய்திருப்பார்கள். ஆனால், அதைக் கேட்டு நாம் ரசித்துக்கொண்டிருப்போம். இது ஒரு கலைஞனால்தானே முடியும்!

தமிழ் ராப்பர்கள்: `நான் ஸ்னோலின் பேசுறேன்...' எனும் பாடலில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலினின் குரலாக ஒலித்திருப்பார் அறிவு. `எஞ்சாய் என்ஜாமி' பாடலைக் கேட்க வேண்டாம், அதன் வரிகளை நினைத்தாலே உடல் சிலிர்க்கும்.

`மதுரை சோல்ஜர்ஸ்' ராப் குழுவின் மொழிவளமை, தமிழ்ப்புலமை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். சென்னை வட்டார வழக்கையும், இளைஞர்களின் வாழ்வியலையும் தனது பாடல்களில் அட்டகாசமாக ஆவணப்படுத்துகிறார் அசல் கோலார். தமிழகம் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, மலேசியா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள் எனத் தமிழ் ராப்பர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நல்ல பாடல்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.வி.டி.பியின் பாடல்கள் மட்டுமல்ல, பாடல்களின் காட்சிகள்கூட அவ்வளவு அடர்த்தியானதாக இருக்கும். ரத்தி ஆதித்தனின் `கந்தர் கூட்டம்' பாடலைக் கேட்டால், நெஞ்சு விசும்பி அடங்கும். காம்ரேட் கேங்ஸ்டா ராப் குழுவினர் பொலிட்டிகல் ராப் எனும் வகைமையைச் சேர்ந்த அரசியல் பாடல்களைத் தொடர்ந்து பாடிவருகிறார்கள். ஒரு பரிபூரண இசைக்கலைஞனின் இசைத்துணுக்கில் வரும் சிறு மௌனம் கூடப் பேரொலியாக வெடிக்கும் வல்லமை கொண்டது. இண்டி (சுயாதீன) இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள். நமக்கும் உணர்த்துவார்கள்.

(வருவான்)

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in