

யூடியூபில் தனி ஆவர்த்தனம் செய்வோர் ஒரு ரகம். இணைந்து அதகளம் செய்வோர் இன்னொரு ரகம். இவர்களைத் தவிர்த்து கணவன் - மனைவியாக இணைந்து யூடியூபில் கெத்துக்காட்டுவோர் தனி ரகம். அந்த வகையில் கணவன் - மனைவியான விவேக்ஜாடு - தீபிகா தம்பதி யூடியூபில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.
பலருக்கும் யூடியூப் பாதை அமைத்துக் கொடுத்த கரோனா காலத்தில்தான் ‘விவேக்ஜாடு-தீபிகா’ என்கிற பெயரில் யூடியூப் அலைவரிசையை இந்தத் தம்பதி தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் பிராங்க் காணொளி வெளியிட்டு வந்த இந்த ஜோடி, பிறகு தங்களுடைய வாழ்க்கைப் பயணம், தங்களைத் தாங்களே கலாய்த்துக்கொள்வது, ஊர் சுற்றுவது, பொருள்கள் தொடர்பான விமர்சனம் எனச் சகலத்தையும் காணொளிகளாக்கி பதிவேற்றி வருகிறது. இவர்களின் ஒவ்வொரு காணொளியும் லட்சக்கணக்கில் பார்வைகளைப் பெறுகிறது.
இதுவரை யூடியூபில் 1,100க்கும் மேற்பட்ட காணொளிகளை இந்த ஜோடி யூடியூபில் பதிவேற்றியுள்ளது. நீளமான காணொளிகளைவிடக் குறுகிய நொடிகளில் வெளியிடப்படும் ‘ஷார்ட்ஸ்’ இந்த ஜோடிக்குப் பார்வையாளர்களை அதிகளவில் பெற்றுக் கொடுத்துள்ளது. ‘ஷார்ட்’ஸில் ஒருவரை இன்னொருவர் கலாய்த்துக்கொள்ளும் காணொளிகளும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு டிப்ஸ்களை வாரிவழங்கும் காணொளிகளும் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளன.
இருவருமே வேலைக்குச் சென்றுகொண்டே யூடியூபில் கோலோச்சி வருகிறார்கள். காணொளிகள் தயாரிப்பதற்காக வார இறுதி நாள்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுடைய யூடியூப் பக்கத்தை 23.5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்களுடைய காணொளிகள் கோடிக்கணக்கில் பார்வைகளைப் பெற்றுள்ளன.