

அரும்பு மீசை, மழலை மாறாத முகம். சிறுவனா, இளைஞரா என அறுதியிட்டுக் கூற முடியாத கல்லூரி மாணவர் ஒருவர், மின்சார ரயிலின் படியில் தொங்கியபடி பயணித்து கொடூரமான விபத்துக்குள்ளான காணொளியைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். சமூக வலைதளங்கள் முதல் தொலைக்காட்சி வரை திரும்பும் திசையிலுள்ள திரைகளில் எல்லாம் அந்தக் காணொளி ஒளிபரப்பானது. அதைப் பார்த்து சிலர் கோபமடைந்தனர். சிலர் வருத்தம் கொண்டனர். சிலர் அச்சமடைந்தனர்.
இது போன்றும் இதைவிட இன்னும் கொடூரமாகவும் இதற்கு முன்பு எத்தனையோ விபத்துகளைச் செவிவழி செய்திகளாகவும் எழுத்துகளாகவும் காணொளிகளாகப் பார்த்த பின்பும், விபத்தில் சிக்கிய பலர் உயிருடன் திரும்பியதில்லை என்பது தெரிந்த பின்பும் ஏன் இவர்கள் பேருந்திலும் ரயிலிலும் தொங்கியபடி பயணிக்கிறார்கள்? அதிலும், அவர்கள் ஏன் பெரும்பாலும் மாணவர்களாக இருக்கிறார்கள்?
அரை டிரவுசர், பேன்ட்டாக வளர்ந்துவிட்ட ஆறாம் வகுப்பு காலம். அப்போது பபிள்கம் வாங்கி மென்று முட்டை ஊதவும் பழகிவிட்டேன். இரண்டு கைகளையும் விட்டு சைக்கிள் ஓட்டிவிட்டேன். கிரிக்கெட் மேட்சில் டைவ் அடித்து கேட்சும் பிடித்துவிட்டேன்.
அன்றைய வயதில் வீரதீர சாகசங்கள் எனக் கருதப்படும் பச்சைக்குதிரை விளையாட்டில் நெட்டுக்குத்தலாக நிமிர்ந்து நிற்பவனையும் தாண்டுவது, பம்பரத்தில் ‘யார்க்கர்’ இறக்குவது, காற்றாடியைக் காற்றில் ஏற்றுவது, பல்டி அடிப்பது என எல்லாம் செய்தாயிற்று. இன்னும் ஒன்று மட்டும் மிச்சம்!
பித்துப் பிடித்தது: என் ஊரில் எவர்சில்வர் பாத்திரங்கள் செய்வதும் விற்பதுமே பிரதான தொழில். ஊரின் முக்கியத் தெருக்களில் வீடுகளைவிடப் பாத்திரக் கடைகளே அதிகமிருக்கும். இந்தப் பாத்திரங்களைப் பெரிய பெரிய மூட்டைகளில் அள்ளிக் கட்டி, வெளி ஊர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில், லோடு ஆட்டோக்கள் நிமிடத்துக்கொன்று தெருவுக்குள் வலம் வந்துக்கொண்டிருக்கும்.
அப்படி ஓடுகிற லோடு ஆட்டோக்களின் பின்னால் ஓடிச்சென்று தொத்திக்கொள்வதும், ஓட்டுநர் சுதாரித்தால் ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே இறங்குவதுமென ஒருவித அற்ப சாகசத்தில் ஊரிலுள்ள துடிப்பான சிறுவர்கள் ஈடுபடுவார்கள். இந்தப் பித்து எனக்கும் பிடித்தது.
ஒருநாள் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் என்னைக் கடந்து சென்ற ஆட்டோவின் பின்னால் விறுவிறுவென ஓடிப்போய் ஏறினேன். உடன் நடந்து வந்துகொண்டிருந்த நண்பர்கள் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தார்கள். அந்த நொடி, உடலில் ஒரு சிலிர்ப்பு. ‘அட்ரீனலின்’ அடித்துத் தூக்கியதில் கபாலம் கிறுகிறுவெனச் சுற்றியது. சில அடி தூரம் சென்றதும் ஆட்டோவின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றேவிட்டது.
இப்போது இறங்கிவிடலாம் என முற்பட்டு ஒற்றைக் காலை, சாலையில் ஊன்றியதுதான் தாமதம். ஓட்டுநர் அவர் காலை ஆக்ஸிலேட்டரில் மிதித்தார். அவ்வளவுதான், இரண்டு முட்டிகளும் தேய, தார்ச் சாலையில் விழுந்து பேன்ட் கிழிந்து தொங்கியது. உள்ளங்கைகள் இரண்டிலும் சிராய்ப்பு. வயிற்றிலும் அடி. நல்லவேளையாகத் தலையைத் தூக்கியதில் முகத்தில் அடி ஏதும் இல்லை.
என்னைப் பார்த்து வாயைப் பிளந்த நண்பர்கள், இப்போது வாய்விட்டுச் சிரித்தார்கள். இந்தச் சம்பவத்திலிருந்து லோடு ஆட்டோக்களைப் பார்த்தாலே லேசான பயம். அதுவும் ஹெட்லைட்டுக்கு மேல் புருவங்கள் வரையப்பட்டிருக்கும் அந்த ஆட்டோக்கள், பல கொடுங்கனவுகளில் என் மீது ஏறி இறங்கியிருக்கின்றன. சில இரவுகளில் ஆட்டோவிலிருந்து விழுவதுபோல் உடல் அதிர்ந்து எழுந்த நிகழ்வுகளும் உண்டு.
அற்ப சாகசங்கள்: கவனித்தீர்களானால், பேருந்திலும் ரயிலிலும் பயணிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை நாம் திரும்பிப் பார்க்க அவர்களிடம் மினுமினுக்கும் ஆடைகளோ ஆபரணங்களோ விலையுயர்ந்த மின்னனு சாதனங்களோ இல்லை. அவர்களிடமிருப்பது வெறும் உடல்.
எனவே, இந்தச் சமூகத்தின் கவனத்தைப் பெற தனது உடலில் துளைகளிட்டு காது, புருவங்களில் தோடு அணிந்துகொள்கிறார்கள். பச்சை குத்திக்கொள்கிறார்கள். தலைமுடியில் வண்ணம் பூசிக்கொள்கிறார்கள். விதவிதமான பாணியில் தாடி, மீசையை மழித்துக்கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகப் படிகளில் தொங்குவதும், ஜன்னல்களில் அமர்வதும், கூரையில் ஏறுவதுமாக அவர்களது உடல் வலிமையையும் ஒத்திசைவையும் நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற அற்ப சாகசங்களைச் செய்வதன் மூலம், இந்தச் சமூகத்தில் வாழத் தேவையான தைரியத்தை அவர்கள் பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள். சுற்றிப் படையெடுத்து நிற்கும் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் செயல்பாடாக இவற்றைச் செய்கிறார்கள். படிப்பு முடித்து ஒரு தொழிலாளியாகவோ முதலாளியாகவோ கலைஞனாகவோ தன்னை நிலைநிறுத்திக்கொண்டு அடையாளப்படுத்தபடுவதற்கு முன்பே அவசரகதியாக இதுபோன்ற சாகசங்களில் இறங்குகிறார்கள். இதில் அவர்களை மட்டும் எப்படிக் குற்றம் சொல்வது?
மாணவர்களே, நீங்கள் செய்ய வேண்டிய சாகசங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அற்ப சாகசங்களில் இறங்கி உங்கள் உடல் எனும் பேராயுதத்தை இழக்காதீர்கள்.
- iamsuriyaraj@gmail.com