

செ
ன்னையில் அலுவலங்களுக்குச் செல்ல இருசக்கர வாகனங்களையும் கார்களையும் தேடும் இளைஞர்களுக்கு மத்தியில் சைக்கிள் விரும்பிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குத் தினமும் 25 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று வருகிறார் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்ஜி. எப்போதும் சைக்கிள் உடையுடன் செல்லும் அவர், சுற்றுச்சூழலை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களையும் ஒட்டி வாகன ஓட்டிகளைக் கவர்ந்துவருகிறார்.
நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக பெட்ரோல் விலை உயர்ந்துவருகிறது. சமூக ஊடகங்களைத் திறந்தால், பெட்ரோல் விலையேற்றத்தைக் கிண்டலடித்து மீம்களை உலவவிடுகிறார்கள். ஆனால், இவர்களிடமிருந்து மாறுபட்டவராக இருக்கிறார் ராம்ஜி. தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணிபுரியும் இவர், அலுவலகத்துக்கு மட்டுமல்ல, அக்கம் பக்கம் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் சைக்கிளில்தான் சென்றுவருகிறார்.
வீட்டிலிருந்து அலுவலகத்துக்குச் செல்லும்போது சைக்கிளுக்கான உடை அணிந்துகொண்டு பயணிக்கும் இவர், அலுவலகத்துக்குச் சென்றதும் அந்த உடையை மாற்றிகொண்டு ஃபார்மல் உடைக்கு மாறிவிடுகிறார். அந்த அளவுக்கு சைக்கிள் மீது தீராக் காதலில் உள்ளார் இந்த இளைஞர்.
“நம்ம ஊர்ல கார், பைக்கைவிட சைக்கிளில்தான் சீக்கிரம் வேலைக்குப் போக முடியும். எந்த டிராபிக் தொந்தரவும் இருக்காது. அப்படியே டிராஃபிக் இருந்தாலும் நடைமேடையில் சைக்கிளைத் தூக்கிக்கொண்டு போய் விடலாம். சந்து பொந்தில் புகுந்து சுலபமாகச் சென்றுவிடலாம். அதோட பெட்ரொல், டீசலுக்கு செலவு பண்ணும் பணத்தை மிச்சப்படுத்தலாம். உடல்நலத்துக்கும் நன்மை சேர்க்கலாம்” என்று சைக்கிள் புராணம் பாடுகிறார் ராம்ஜி.
ராம்ஜியின் சைக்கிள் பயணத்தைப் பார்த்து இவருடைய நண்பர்கள் பலரும் சைக்கிளுக்கு மாறியிருக்கிறார்கள். மக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை ஒரு விழிப்புணர்வாகவும் பரப்பிவருகிறார் இவர். “என்னிடம் கார், பைக் இண்டுமே இருக்கு. இருந்தாலும் சைக்கிளில் போகத்தான் பிடிக்கும்.
தனியா எங்கே போக வேண்டுமென்றாலும் சைக்கிள்தான் என்னோட ஒரே தேர்வு. சைக்கிளைப் பயன்படுத்தும்படி அடிக்கடி நண்பர்களிடம் வலியுறுத்துவேன். இப்போ என் நண்பர்களும் என்னைப் பின்தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்ம ஊர்ல 2,500 ரூபாய்க்கு நல்ல தரமான சைக்கிள் கிடைக்குது. பராமரிப்புச் செலவும் குறைவு. உடல்நலத்துக்கும் நன்மை தரும் சைக்கிளைப் பயன்படுத்த இனியாவது இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்கிறார் ராம்ஜி.
சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘We are Chennai Cycling Group’ என்ற அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் ராம்ஜி. தொலைதூர சைக்கிள் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். கியர் இல்லாத சைக்கிளில் இவர் 40 மணி நேரத்தில் 600 கிலோ மீட்டர் கடந்தும் சாதனை படைத்திருக்கிறார். தமிழகத்தில் மொத்தம் 8 பேர் மட்டுமே 600 கிலோ மீட்டர் தூரத்தை கியர் இல்லாத சைக்கிளில் கடந்திருக்கிறார்கள். அவர்களில் ராம்ஜியும் ஒருவர்!
- கார்த்திக் சு.தி.