Published : 15 Jun 2018 11:02 AM
Last Updated : 15 Jun 2018 11:02 AM

அனுபவம் புதுமை 09: வாங்க பழகலாம்!

 

“ஐ

ந்து வருட பழக்கம். ஆனால், நேரில் பார்த்ததில்லை" - இப்படி விநோதமாகப் பெருமையடித்துக்கொள்வது இணைய யுகத்தில் சாதாரணமாகிவிட்டது. நட்பையும் உறவையும் வளர்ப்பதற்கு செல்போனும் ஃபேஸ்புக்கும் நிச்சயம் போதாது. எப்போதும் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் சந்தித்துப் பேசி மகிழ்வதில் கிடைக்கும் சுகத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

ஆனால், இந்தக் காலத்தில் உறவினர்களையோ நண்பர்களையோ சந்தித்துப் பேச இளைஞர்களுக்கு நேரமே இருப்பதில்லை. தனி அறையில் வாட்ஸ்அப்பில் குழுவாக அரட்டையடித்துவிட்டு அதிலேயே நட்பை வளர்க்கிறார்கள். வீட்டுக்குப் பெரியவர்கள் யாராவது வந்தாலும்கூட அவர்களிடம் நலம் விசாரிக்கவோ பேசவோ விரும்புவதில்லை. அவர்களுடைய உலகத்தில் பெரியவர்களுக்குப் பெரிதாக இடம் இருப்பதில்லை.

என்றாலும் எப்போதும் நட்புகள், உறவுகள் வட்டத்தைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. ஒரு பேராசிரியராக மாணவர்களிடமும் அதை அடிக்கடி வலியுறுத்துவேன். அதன் காரணமாகவே மாதத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை பிரியமானவர்களை வீட்டுக்கு அழைப்பது அல்லது என் குடும்பத்தோடு அவர்கள் வீட்டுக்குச் செல்வது என் வழக்கம். அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னைக்கு பயணமானேன். அங்கே பார்க்கச் சென்றது என்னுடைய பள்ளிக் கால நண்பர் ராமனை.

வீடு என்று சொல்லக் கூடாது, பங்களாதான். புல்வெளி, போர்டிகோ, காரை கடந்து போய் காலிங் பெல்லை அழுத்தினேன். காலிங் பெல் சத்தத்தில் வீட்டிலிருந்த நாய் வாசலுக்கு வந்து குரைத்தது. ஆனால், வாலை ஆட்டியபடியே அது குரைத்தது வரவேற்பதைப் போன்று இருந்தது. நாயின் சத்தம் கேட்டும்கூட போர்டிகோவில் உட்கார்ந்திருந்த ராமனின் பையன் என்னவென்றுகூட கேட்கவில்லை. ‘அப்பாவை பார்க்கணுமா, வருவார்’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு கண்டுக்காமல் இருந்தான்.

"வாடா வாடா.. என்று உற்சாக குரலை எழுப்பியவாறு ராமன் என்னை வரவேற்றார். "உன் பையன்தானா" என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளக் கேட்டேன்.

"ஆமாம்பா, நீ சின்ன வயசில பார்த்திருப்ப, ஸ்கூல்ல படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்தான். இப்போ பி.காம். படிக்கிறான்" என்றவர், உடனே மகனை அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார். "ஹலோ அங்கிள்" என்று சொல்லிவிட்டு காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கையில் இருந்த செல்போனில் மூழ்கினான்,

"இவன் எப்போவுமே இப்படித்தான். யாரிடமும் இயல்பாகப் பேசுறதேயில்லை. எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். வீட்டுக்கு வர்ற உறவினர், நண்பர்கள், பெரியவங்ககிட்ட மரியாதையா, அன்பா பேசுன்னு சொன்னா, என்னவோ நேரம் இல்லாத மாதிரி நடந்துக்கிறான்" என்றார்.

இது நண்பரின் பையனிடம் உள்ள பிரச்சினை மட்டும் இல்லை. இந்தக் காலத்து யுவன் யுவதிகளிடம் உள்ள பிரச்சினையும்கூட. சில பசங்களுக்கு யாரைப் பார்த்தாலும், "ஹாய், ஹலோ" தவிர வேற எதுவும் தெரியாது. "வணக்கம், எப்படி இருக்கீங்க?" என உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை இளைஞர்களிடம் கேட்பதே அரிதாகிவிட்டது.

ராமனோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த தன் மகனிடம், "அடுத்த வாரம் பெரியப்பா பையன் கல்யாணம் இருக்கு. அடுத்த வாரம் ஊருக்குப் போகத் தயாரா இரு" என்று சொன்னதும், பையன் திருப்பிக் கேட்ட கேள்வி, "எந்த அங்கிள் வீட்டு கல்யாணம்!". அதைக் கேட்டதும் எனக்குள் நமட்டுச் சிரிப்பு எட்டிப் பார்த்தது. இந்தக் காலத்து இளைஞர்கள் உறவு முறையை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிட்டார்களே என்று தோன்றியது. தன்னைவிட சற்று அதிகமாக வயதிருந்தால் அண்ணா, அக்கான்னு சொல்கிறார்கள். 30 வயதைக் கடந்திருந்தால் அங்கிள் - ஆன்ட்டி என்று கூப்பிடுகிறார்கள். 60 வயதை கடந்திருந்தால் தாத்தா - பாட்டி என்று அழைக்கிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். வரும் வழியில் நண்பனின் மகனைப் பற்றி நினைத்துகொண்டே வந்தேன். பெரு நகரங்களில் இந்தப் போக்கு அதிகரித்துவருகிறது. அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில், இந்தச் சூழல் அதிகரித்திருக்கிறது. எப்போதும் வீட்டுக் கதவை இழுத்து பூட்டியிருப்பது, அக்கம்பக்கத்தில் சாவு விழுந்தால்கூட கதவை இழுத்து மூடிக்கொண்டிருக்கும் இந்தச் சமூக சூழலில் வளரும் பிள்ளைகளிடம் அந்தப் போக்குக் கூடிக்கொண்டிருக்கிறது. எதையும் சமூக ஊடங்களில் பகிரும் அவர்கள், மனிதர்களிடம் பகிரும் அன்பு குறைந்திருக்கிறது.

படிப்பு, மதிப்பெண், கல்வி அறிவு இவற்றையெல்லாம்விட நம் முன்னால் நிற்கிற முக்கியமான விஷயம் பழக்க வழக்கமும் பண்பாடும்தான். அதைப் பெற்றோர்தான் இளைஞர்களுக்குக் கற்றுத் தர முடியும். எவ்வளவுதான் அவர்கள் வளர்ந்திருந்தாலும் அவர்களுடன் வீட்டில் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருப்பதன் மூலமே இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும். உறவுகளிடமும் நண்பர்களிடமும் பழகுவதில் உள்ள மகத்துவத்தையும் அவர்களுடன் அடிக்கடிப் பகிருங்கள். அதற்குப் பெற்றோர்களின் பங்கு கொஞ்சம் அதிகமாகவே தேவை என்பதையும் உணருங்கள்.

கட்டுரையாளர்: பேராசிரியர், தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x