

கதைகளிலும் திரைப்படங்களிலும் அட்ராசிட்டி செய்யும் பேய்கள் கண் முன்னே பாட்டுப் பாடி, நடனம் ஆடினால் எப்படி இருக்கும்! இந்தக் காட்சிளே ‘ஹாலோவீன்’ நாளில் விதவிதமாக அரங்கேறும்.
அகால மரணத்தைத் தழுவியவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் தங்களுக்கு நெருக்கமானவர்களைச் சுற்றியே திரியும் என்கிற நம்பிக்கை வெளிநாடுகளிலும் உண்டு. இந்த நம்பிக்கையின் பின்னணியில் உருவானதுதான் ஹாலோவீன் நாள். நம்மூரில் மயானக் கொள்ளை திருவிழாவில் காளி வேடம் தரித்தவர்கள், ஆக்ரோஷமான உடல்மொழியை வெளிப்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்துவார்கள் அல்லவா? இதே திகல் அனுபவத்துடன் கொஞ்சம் கேளிக்கையையும் கலந்து கொடுப்பதுதான் ஹாலோவீன்.
ஆண்டுதோறும் அக்டோபர் 31இல் பேய்களை விரட்ட கடைபிடிக்கப்பட்ட ஹாலோவீன் நாள், காலப்போக்கில் பேய்களை, ''I am your best friend?” என அன்புடன் ஆராதிக்கும் நாளாக மாறிவிட்டது. மர்மம், பயம், பதற்றம் என அச்சமூட்டும் அனைத்து அனுபவங்களையும் தரும் ஹாலோவீன் நாள் அயல்நாடுகளைப் போல் சமீப ஆண்டுகளாக இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களிலுள்ள இளைஞர்கள் ஹாலோவீனைத் தத்து எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அந்த அளவு ஹாலோவீன் இன்றைய இளைஞர்களிடம் நெருக்கமாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளியும் ஹாலோவீன் நாளும் இணைந்தே வருவதால், பலருக்கும் உற்சாகம் இரட்டிப்பாகியுள்ளது.
குழந்தைகளைப் போல்: அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஹாலோவீன் வாரத்தில் இரவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். அப்போது எலும்புக்கூடு, சூனியக்காரி, ஓநாய் வேடங்கள் அணிந்த இளைஞர்களும் இளம்பெண்களும் குழந்தை மனநிலையில் சாலையெங்கும் உலா வருவர். சென்னையிலும் கல்லூரிகள், நட்சத்திர ஓட்டல்கள், சில தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள், மால்கள், கிளப்களில் ஹாலோவீன் கொண்டாட்டங்களைக் காண முடிகிறது.
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட விரும்புவோர் ஹாரி பாட்டர், சூப்பர் ஹீரோக்கள், ரத்தக் காட்டேரிகள், பூச்சாண்டிகள் போல் வேடமணிந்து பாடல்களுக்கு நடனமாடி அன்றைய நாளைக் கழிக்கின்றனர். ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் ஹாலோவீன் நாளில் வித்தியாசமான முக அலங்காரத்துடன் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் துள்ளல் மனநிலையில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மிளிரும் பரங்கிக்காய்கள்: ஹாலோவீன் நாளில் வீடுகளில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் அலங்காரங்களாக தொங்கவிடப்படும். சிவப்பு ஒளியைப் படரச் செய்து அச்சுறுத்தும் ஒலிகளை ஒலிபரப்புவார்கள். பரங்கிக்காய்களுக்குள் மிளிரும் விளக்குகளும் காய்ந்த இலைகளும் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்குள் ஒரு படபடப்பை உண்டாக்கும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நடத்தப்படும் ஹாலோவீன் கொண்டாட்டங்களில் கூம்பு வடிவ கறுப்புத் தொப்பி, கறுப்பு கோட் என வித்தியாசமான வேடத்துடன் குட்டிக் குழந்தைகளும் வட்டமிடுவார்கள். அங்கு குழந்தைகளின் கற்பனைத் திறன்களை வளர்க்கும் விதமாக ஓவியப் போட்டிகள், சிலை வடித்தல் போன்றவையும் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து நெருக்கடியில் இருப்பவர்கள், மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் தங்கள் சுய அடையாளத்தை விடுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை ஹாலோவீன் வழங்குவதாகச் சொல்கிறார்கள்.