

‘தீபாவளி என்னைக்கு ப்ரோ?' என்கிற கேள்வியைக் கேட்டு முடித்ததும் ஒன்று தோன்றியது. அப்போதெல்லாம் ஒரு தீபாவளி முடிந்த அடுத்த நாளிலிருந்தே அடுத்த தீபாவளியின் நாள், கிழமையறிந்து காத்திருக்கத் தொடங்கிவிடுவோம். அந்த நாள்களில் எதிரே தென்படும் ஆடைகளை எல்லாம் மனம் மேட்சிங் கலரில் பேன்ட், ஷூ, பெல்ட்டோடு கணக்கு போட்டு, தீபாவளிக்கு எடுக்க திட்டமிடத் தொடங்கிவிடும்.
அப்படி ஒருமுறை என் தங்கை, தீபாவளிக்கு அணியவிருக்கும் ஆடையைத் தேர்வு செய்துவிட்டார். பச்சை பூப்போட்ட கவுன். உடனே, ‘ஒழுங்கு மரியாதையாக வந்து வாங்கிக் கொடு’ என மிரட்டாத குறையாக என்னையும் என் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி, கடை வாசலில் இறக்கிவிட்டார்.
ஆட்டோவிலிருந்து இறங்குவதற்கு முன்பே, `அதோ தொங்குதுல அந்த டிரெஸ்தான்' எனக் கையை நீட்டி உற்சாகமானார் தங்கை. கடை வாசலில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆடையை என் அம்மா பார்த்ததுதான் தாமதம், `சொத்' என பிடரியிலேயே ஓர் அடியைப் போட்டு, ஆட்டோவை யூ-டர்ன் அடிக்கச் சொல்லிவிட்டார். அப்போதுதான் நானும் பார்த்தேன், தொங்கிக்கொண்டிருந்தது பச்சை பூப்போட்ட நைட்டி!
அது ஒரு கனாக்காலம்: தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பிருந்தே முறுக்கு பிழிவது, அதிரசத்துக்கு மாவரைக்க அம்மாவுடன் ரைஸ்மில் செல்வது, மருதாணி பறித்து வருவது, வெடிக்கவிருக்கும் பட்டாசுகளை வெயிலில் காயப்போட்டு எடுப்பது, கூலிங்கிளாஸ், தொப்பி, செயின், மோதிரம், பிரேஸ்லெட் இத்யாதிகளை வாங்கப் புறப்படுவது, பொட்டு வெடிகள் வெடிக்கும் சின்னஞ்சிறு பிளாஸ்டிக் ஏவுகணைகளைத் தூக்கிப்போட்டு வெடிப்பது, அதுவும் கிடைக்கவில்லை எனில் நட்டு, போல்ட், வாசருக்கு இடையே பொட்டு வெடியைக் கிள்ளி வைத்து வெடிப்பது எனப் பரபரப்பாக இருக்கும்.
முதல் நாள் இரவு வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு முடிக்கும் அம்மா, ’ஹேப்பி தீபாவளி’ என ஆங்கிலத்தில் எழுத மட்டும் என்னை அழைப்பார். அப்படி ஒருநாள் கூட்டெழுத்தில் எழுதிக் கொடுத்து நானும் பிடரியில் அடி வாங்கியிருக்கிறேன்.
ஒரு மாதத் தீபாவளி: தெருவில் முதல் ஆளாக வெடித்தேன் எனும் பெருமையடிக்கும் நபர், அதிகாலையிலேயே அணுகுண்டைக் கொளுத்திப்போட்டு தெருவையே எழுப்பி விடுவார். எழுந்து பல்லைத் துலக்கியதும், அண்டாவைக் கவிழ்த்துப் போட்டு அமரச் சொல்லி மூன்று கரண்டி எண்ணெய் எடுத்துத் தலையில் அம்மா தேய்த்துவிடுவார். கண் எல்லாம் எரியும். கூடவே, நீவி விடும் பெயரில் கைகளைப் பிடித்து இழுப்பார்.
எங்கே நம் கை அவர்களின் கையோடு கழன்று போய்விடுமோ எனப் பீதியாக இருக்கும். கண் எல்லாம் கலங்கி, எண்ணெய் முகத்தின் மேல் முத்து முத்தாகக் கண்ணீர் பூத்து நிற்கும். அப்படியே சுடுதண்ணீரில் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்துவிட்டு, வாழை இலையின் முன் அமர்ந்தால் இட்லியும் குடல் குழம்பும் ஆவி பறக்க இறக்குவார்கள். குடல் குழம்பு பிடிக்குதோ இல்லையோ அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு, வெடியைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டால் மாலை வரை போர்ச் சூழல்தான்.
அணுகுண்டுகள், ராக்கெட்கள், பிஜிலி வெடிகள் இடையிடையே பயோ வெப்பன் பாம்பு மாத்திரைகளும் என நேரம் நகர்ந்து முடியும். பிறகு, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாகத் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படத்தை ஒளிபரப்புவார்கள். அதை வெடி சத்தத்தின் இடையே அரைகுறையாகப் பார்த்து முடித்துவிட்டு, சில கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி முடித்தால் தீபாவளி முடிந்துவிடும் என்று நினைப்போம்.
அதுதான் இல்லை. அடுத்த நாள் பள்ளிக்கு மீண்டும் தீபாவளி ஆடைகளைப் போட்டுச் செல்வது, தாத்தா பாட்டி கொடுத்த காசில் மீண்டும் வெடியை வாங்கி வெடித்துத் தள்ளுவது, அடுத்த ஒரு மாதத்துக்கு தீபாவளி முறுக்கையே சைடிஷ்ஷாக வைத்து மதிய உணவை முடித்துக்கொள்வது எனப் படிப்படியாகத்தான் தீபாவளி முடிவுக்கு வரும்.
சினிமா, ரீல்ஸ்: இன்றைய தலைமுறையினர் நாம் பட்டாசு வெடிப்பதைப் பார்த்தாலே, `என்ன அண்ணே சின்ன புள்ள மாதிரி பட்டாசு வெடிச்சுக்கிட்டு இருக்குறீங்க?' என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். பட்டாசுகளையும் கொண்டாட்டங்களையும் மாதம் இருமுறை ஏதோவொரு வடிவில் கண்டு களித்துவிடுகிற, வாழ்கிற ஒவ்வொரு நாளையும் கொண்டாட்டமானதாக மாற்றிவிட முயல்கிற இந்தத் தலைமுறைக்குப் பண்டிகை நாள் என்பது மற்றுமொரு நாளாகக் கடந்துபோவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
புதிதாக ரிலீஸான திரைப்படத்தைப் பார்த்து வீடு திரும்பிவிட்டு, புத்தாடை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவேற்றிவிட்டு, மொட்டைமாடியில் கலர் வெடிகளை கொளுத்திவிட்டு, உறங்கச் சென்று விடுகிறார்கள். `தீபாவளி என்னைக்கு ப்ரோ?' என முப்பதாவது வயதில் நான் வந்தடைந்த மனநிலைக்கு 2கே கிட்கள் பதினைந்து வயதிலேயே வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம் முதிர்ச்சி என்றால் முதிர்ச்சி, அயர்ச்சி என்றால் அயர்ச்சி!
(வருவான்)
- iamsuriyaraj@gmail.com