

`வேட்டையன்' படத்துக்காகத் திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் கட்-அவுட்களையும் கடந்து செல்கையில், ஏனோ பழைய நினைவுகள் மனதுக்குள் ‘நெகட்டிவ்' வண்ணத்தில் மின்னலென வெட்டி மறைந்தன. `பாபா' படம் வெளியாகியிருந்த நேரம். ரஜினி தனது கையில் வைத்திருக்கும் கத்தியைப் போன்ற கார்டுபோர்டு அட்டையை அறுத்து செய்து, கத்தியின் கைப்பிடிக்குக் கீழே கண், மூக்கு, வாய் எல்லாம் வரைந்து மிகுந்த பெருமிதத்துடன் பள்ளிக்கு எடுத்துச் சென்றேன்.
‘பாபா' அலப்பறை: காலையில் மைதானத்தில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போதே, நான் கத்தி எடுத்து வந்திருக்கும் செய்தி மாணவர்களிடம் பரவிவிட்டது. முதல் இடைவேளை மணி அடித்ததும், பாதிப் பள்ளிக்கூடம் கத்தியைப் பார்க்கக் கிளம்பி என் வகுப்பறைக்கு வந்துவிட்டது. பில்டப்புக்கு கூடுதல் பில்டப் சேர்ப்பதற்காக, எடுத்து வந்திருந்த குற்றாலத் துண்டை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு, புத்தகப் பைக்குள் இருந்த கத்தியை எடுத்ததுதான் தாமதம், `டேய், இது பில்லி சூனியம் வைக்குற பொம்மைடா' என்றான் ஒருவன்.
வந்திருந்த அத்தனை பேரும் குபீரெனச் சிரித்துவிட்டுப் போனார்கள். அன்று கொட்டிய கண்ணீரில் குற்றாலத் துண்டு காய்வதற்கு ஒருநாள் ஆனது. ஏன், இப்போதும் அவ்வப்போது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து நிம்மதியைச் சீர்குலைப்பதுண்டு.
பரீட்சை எழுதும்போது இடக்கையில் `பாபா' முத்திரை வைத்துக்கொண்டால் நல்ல மதிப்பெண் பெறலாம் என ஏமாந்தது, என்றாவது ஒருநாள் தீப்பொறி பறக்கும் என ஷூவைத் தரையில் தேய்த்தபடியே நடந்து திரிந்தது, மஹாவதார் பாபாஜியின் பையன்தான் ஷீரடி சாய்பாபா என்றும் ஷீரடி சாய்பாபாவின் பையன்தான் புட்டபர்த்தி சாய்பாபா என்றும் நினைத்துக்கொண்டது, தாடியும் சிக்குமுடியுமாகத் திரியும் தெருவோர யாசகர்களுக்கு இமயமலை செல்லும் குறுக்கு வழி தெரியும் எனத் தீர்க்கமாக நம்பியது என ஒரு படத்தையொட்டி எத்தனை எத்தனை நினைவுகள்.
`பாபா' படம் சரியாகப் போகவில்லை என்பதை என்னால் அப்போது நம்பவே முடியவில்லை. `ஏழாவது மந்திரத்தைச் சொல்லி இதே மாதிரி எனக்கு இன்னும் நூறு மந்திரம் வேணும்னு கேட்டிருக்கலாம்ல! அதான் படம் ஓடல' எனச் சித்தப்பா சொன்னபோதுதான் மனசு ஒப்புக்கொண்டது.
திருவிழா காலம்: அடுத்ததாக, `சந்திரமுகி' திரைப்படம். அதன் ஸ்டிக்கர்களுக்காகவே வாங்கித் தின்ற பிஸ்கெட்டுகள். `லகலகலக' என வசனம் பேசிக்கொண்டும், ஒரு காலைத் தூக்கி அந்தரத்தில் நிப்பாட்டி ஐந்து நிமிடங்கள் நிற்பதும் எனக் கலகலப்பாகக் கடந்தது காலம்.
செல்போன்கள் நடுத்தர வர்க்கத்தினர் கைகளுக்கு வந்து சேர்ந்திருந்த நேரம். `ஹலோ, எப்படி இருக்கீங்க, வீட்ல எப்படி இருக்காங்க, சாப்டீங்களா' என்பது போன்ற கேள்விகளுக்குப் பிறகு ‘சிவாஜி' படம் பார்த்துட்டீங்களா?' என்பார்கள். ரஜினி படங்களைத் திரையில் பார்ப்பது மட்டுமல்ல, பார்ப்பதற்காகக் காத்திருப்பதுகூட அவ்வளவு மகிழ்ச்சி தரும் விஷயம்.
அதோடு போஸ்டர்களை வெட்டி பத்திரப்படுவது, செய்தித்தாள் போஸ்டர்களைச் சேகரிப்பது, பாட்டுப் புத்தகங்கள் வாங்குவது, கட்-அவுட்டை அண்ணாந்து பார்ப்பது, கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் எடுப்பது, வாழ்க கோஷம் போடுவது, படம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், அதைப் பற்றிப் பேசித் தீர்ப்பது என சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் என்பது எனக்குத் திருவிழா.
ரீல்ஸ் ரசிகர்கள்: இப்படியான அனுபவம், இந்த 2கே தலைமுறை யினருக்குக் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால், இனி இவர்கள் சினிமாவில் சூப்பர் ஸ்டார்களையே உருவாக்கப் போவதில்லை. புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே, சினிமாவில் இருந்த சூப்பர் ஸ்டார்கள், சின்னத்திரைக்கு வந்து, அதனினும் சிறிய செல்போன் திரைக்கு வந்துவிட்டார்கள்.
ஜாலியான யூ-டியூப் வீடியோ செய்பவர்கள், ரீல்ஸுக்கு டான்ஸ் ஆடுபவர்கள், இன்ஃபுளூயன்ஸர்கள், சோடா விற்கும் தாத்தா, வெற்றிலை குதப்பும் பாட்டி, மழலை பேச்சு மாறாத சிறுவன், தோசைக்கரண்டியால் அடிக்கும் அம்மா என இப்போது யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆகலாம். அதுவும் ஓரிரு நாள்களுக்கு மட்டும். இப்போது ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே சினிமா நடிகர்கள் இந்தக் குறுந்திரை பிரபலங்களிடம் தஞ்சமடைவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா?
திடீரென கும்பலாக ரசிகர்களாவது, அவர்களுக்காக ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது, போற்றுவது, தூற்றுவது, விருது வழங்குவது, கூட்டம் கூடுவதென ஓர் உச்ச நடிகருக்கு நடக்கும் அவ்வளவும் இவர்களுக்கும் நடக்கும். எல்லாம் அது வைரலாகும் காலத்தில் மட்டுமே. தன்னுடன் தொடர்புப்படுத்திக்கொள்ளக் கூடிய, உரையாடுகிற தொலைவில் இருக்கிற, தன்னைப் போன்ற இன்னொருவரையே இனி சூப்பர் ஸ்டார்களாக இந்தத் தலைமுறை கொண்டாடும்.
அப்போதுதான், வரிசையில் நிற்கிற தனக்கும் ஒரு 15 நிமிடப் புகழாவது வந்து சேரும் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். பாலிவுட்டின் கடைசி சூப்பர் ஸ்டார் ஷாருக்தான் என முடிவுரை எழுதிவிட்டார்கள். கோலிவுட்டில் யாரென நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
- iamsuriyaraj@gmail.com