2கே கிட்ஸ்களுக்குப் பூங்காற்று திரும்புமா? | ஈராயிரத்தில் ஒருவன்

2கே கிட்ஸ்களுக்குப் பூங்காற்று திரும்புமா? | ஈராயிரத்தில் ஒருவன்
Updated on
2 min read

வெளியை அலங்கரித்தால் ஓவியம், நேரத்தை அலங்கரித்தால் இசை என்பார்கள். உங்கள் ஹெட்போனில் பக்கத்து வீட்டு டிவியில், திருமண மண்டபத்தின் ஸ்பீக்கரில், எவரோ ஒருவரின் முணுமுணுப்பில், ஏதோவொரு மூலையில் எங்கிருந்தோ நம் காதுகளைத் தொடுகிற இசை, சடாரென நம்மை வேறொரு காலத்துக்கு, வேறொரு தருணத்துக்குத் தூக்கி வீசுவதை உணர்ந்திருக்கிறீர்களா? நேரம், காலம் மட்டுமல்லாமல் ஓர் இடம், அந்த இடத்தின் வெப்பம், குளிர், மழை, வாசம், வண்ணம் எல்லாவற்றையும்கூட அள்ளிவந்து தந்துவிட்டுப் போகும் வல்லமை கொண்டதுதான் இசை.

தூள் கேக்: எங்கள் ஊரில் பிரிட்டோ பேக்கரி இருந்தது. அங்கே கேக்கைவிட கேக் தூள் வாங்குவதற்குக் கூட்டம் அள்ளும். கேக் தூள் என்றால், கேக் தயாரிப்பில் மீதமாகும் மிச்ச சொச்சத்தை, வெட்டி எறியும் பகுதிகளை ஒரு பாக்கெட்டில் அடைத்து விற்பார்கள். அதுதான் கேக் தூள் அல்லது தூள் கேக். அப்படி ஒருநாள் மாலை கேக் தூள் வாங்க பேக்கரிக்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல் கூட்டம். கடைசி ஆளாகக் காசை நீட்டியபோது கேக் தூள் பாக்கெட் காலியாகியிருந்தது. ஏமாற்றம்.

அங்கிருந்த பிரிட்டோ அண்ணன், “டேய் தம்பி... வா” என்று ஸ்பிளென்டர் பைக்கில் ஏறி அமரச் சொன்னார். அமர்ந்தேன், வண்டி நேராக போகன்வில்லா பூக்கள் பூத்துக் குலுங்குகிற ஒரு வெள்ளைக் கட்டிடத்தின் முன்பாக நின்றது. அந்த வீட்டின் அருகே நுழையும்போதே கேக்கின் நறுமணம். வாசனையிலேயே வயிறு நிரம்பிவிட்டது. வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சிலர் கேக்குகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். பைனாப்பிள் கேக் துண்டை நீட்டிச் சுவைத்துப் பார்க்கச் சொன்னார் பிரிட்டோ அண்ணன். இளஞ்சூட்டிலிருந்த கேக்கின் கிரீம் நாக்கில் கரைந்தது. அந்த ருசியில் மயங்கி, உடலை அறையின் சன்னலோரச் சுவரில் சாய்த்தேன்.

உணர்வுகளைக் கிளறும் பாடல்கள்: அப்போது பக்கத்து வீட்டு ஹோம் தியேட்டரிலிருந்து ஒலித்தது அந்த இசை. ‘ஜூன் போனால் ஜூலை காற்றே' பாடலின் ஆரம்ப இசை. ப்பா! இப்போதும் அந்தப் பாடலைக் கேட்டால், கேக் வாசனையும் பைனாப்பிள் கிரீமின் சுவையும் காற்றில் உதிர்ந்துக்கொண்டிருந்த போகன் வில்லா பூக்களும் வெள்ளைக் கட்டிடமும் என்னைச் சட்டென சூழ்ந்துகொள்ளும். உடல் லேசாகி, வயது குறைந்து, பதின்வயது சிறுவனாகச் சிரித்தபடி நான் நின்றுகொண்டிருப்பேன்.

`உன் அருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்' எனக் `கல்லூரி' படத்தின் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இப்போதும் அழுதுவிடுகிறேன். ‘அ முதல் ஃ தானடா' பாடலை எப்போது கேட்டாலும் திருமண மண்டபத்தில் போட்ட குத்தாட்டத்தை நினைத்து தன்னையறியாமல் உதடு புன்னகைக்கிறது. கோயிலில் மட்டுமே சந்திக்க முடிகிற காதலியின் நினைவாக, பக்திப் பாடலைக் காதல் கீதமாகக் கொண்டிருக்கும் நண்பன் ஒருவன் இருக்கிறான்.

`உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே' பாடலை எப்போது கேட்டாலும் கண்ணீர் விடுவார் அப்பா. கருக்கலைந்து மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த மனைவிக்காக, `உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது' எனப் பெருங்குரலெடுத்துப் பாடிய கணவனை நான் அறிவேன். அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சு லேசாக விம்மி அடங்குகிறது. இப்படி ஏதோவொரு காலத்துக்கு நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிற கடந்த காலத்துப் பாடல்கள் இன்றுவரை காலாவதியாகாமலே இருக்கின்றன.

2கே கிட்ஸுக்கு என்ன கிடைக்கும்? - ஆனால், சமீபமாக வரும் திரையிசைப் பாடல்கள் எல்லாம் 30 நாள்களில் மங்கிவிடுகின்றன. அதுவும் 30 நொடி ரீல்ஸ்களுக்காகவே பாடல்கள் உருவாக்கப்படுகிற இந்தக் காலத்தில், பெரும்பாலும் பழைய பாடல்களே நேரடியாகவும் ரீமிக்ஸ்களாகவும் கவர் வெர்ஷன்களாகவும் மீண்டும் மீண்டும் அந்த வெறுமையை நிரப்புகின்றன. எனில், இந்தத் தலைமுறையினருக்கு நாளை அவர்களது நினைவுகளை அள்ளிவந்து தந்து விட்டுப் போக இசையென ஒன்று இருக்காதோ என வருத்தமே மேலிடுகிறது.

பிறகுதான் ஒன்று புரிந்தது. நம் அப்பாக்கள் இளையராஜாவோடு தேங்கிவிட்டுப் பிறகு மீண்டும் மீண்டும் அதே பாடல்களைக் கேட்டு நாஸ்டால்ஜியாவில் மூழ்கியிருப்பதைப் போல, நாமும் இப்போது தேங்கிவிட்டோம். நாஸ்டாலஜியாவை நோக்கித் திரும்பிவிட்டோம். அதனால்தான் `கோல்டன் ஸ்பாரோ' நமக்கு எரிச்சலூட்டுகிறது. தற்போது வெளியாகிற நல்ல பாடல்கள்கூட வெறும் பாடல்கள் என்பதைத் தாண்டி வேறு உணர்வுகளைத் தருவதில்லை.

ஆனால், பிற்காலத்தில் இதே பாடல்கள், 2கே கிட்ஸ்களுக்குப் பழைய அற்புதமான நினைவுகளைக் கிளறிவிடலாம். `காத்து மேல காத்து கீழ' பாடல் திருமண மண்டப குத்தாட்டங்களையும், `கட்சி சேர', `ஆச கூட' பாடல்கள் பழைய காதலையும் நினைவுபடுத்தலாம். காலத்தின் விளையாட்டு, யாரோ ஒரு 2கே கிட்ஸ்க்கு `கர்ன கர்ன கபாலம்'கூட காதல்கீதமாக அமையலாம். பதறாதீர்கள்!

- iamsuriyaraj@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in