

நி
லைக்கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெகுளி வெள்ளைச் சாமி. தன்னை எல்லோரும் ‘வெகுளி’ என அழைப்பதை எண்ணிச் சிரித்தானோ என்னவோ. சிரித்தபடியே நின்றுகொண்டிருந்த அவனை அவனுடைய உதவியாளன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். செல்ஃபி பிரியரான வெள்ளைக்கு செல்ஃபி எடுக்க சிரமமாக இருக்கும் என்பதால் அதற்காக ஓர் உதவியாளனை வைத்திருந்தான். அவன்தான் வெள்ளையை விதம்விதமாக செல்ஃபி எடுப்பான்.
செல்ஃபிக்களைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெள்ளை பகிர்ந்து கொள்வான். பகிர்ந்த உடனேயே அது பத்தாயிரம் பேரால் விரும்பப்படும். ஒவ்வொரு ‘கிளிக்’கும் பத்தாயிரமாகப் பெருகச் சில மணித்துளிகளில் லட்சக்கணக்கான பேரால் அது பார்க்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வதில் ஒரு பெருமை வெள்ளைக்கு.
இன்று ஆணவபுரத்தின் நகராட்சித் தலைவராகத் தலைநிமிர்ந்து நடக்கும் வெள்ளைச்சாமி ஒரு காலத்தில் ஆணவபுரத்தின் பஜாரில் எடுபிடியாக இருந்தவன். கடைகளைக் கூட்டிப் பெருக்குவது, டீ வாங்கித் தருவது போன்ற வேலைகளைத்தான் முதன்முதலில் செய்தான். அந்தப் பழக்கம் காரணமாக ஊரில் உள்ள வர்த்தகர்களின் நண்பரானான் வெள்ளை.
அதை வைத்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த நகராட்சிக்கே தலைவராகிவிட்டான். முதன்முதலாக அவன் நகராட்சித் தலைவராக ஆனபோது, நகராட்சித் தலைவர் சீட்டைப் பயபக்தியுடன் விழுந்து கும்பிட்ட காட்சியைப் பார்த்து எல்லோருமே சிலிர்த்துப்போனார்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் வெள்ளைச்சாமியின் பலம்.
ஆனால், ஆணவபுர நகராட்சியின் தலைவராக விரும்பிய பெரியண்ணனை அவன் ஓரங்கட்டியதை எல்லாம் பெரியண்ணனால்கூட நம்ப முடியவில்லை. இவ்வளவுக்கும் டவுசர் போட்டுக்கொண்டு அந்த ஊரின் ‘சேவை மன்ற’த்தில் வெள்ளை எடுபிடியாக இருந்தபோதே பெரியண்ணன் பெரிய தலைவராக இருந்தவர். ஆனாலும் இன்று வெகுளி வெள்ளைச்சாமி ஊர் அறிந்த நகராட்சித் தலைவர். அவனுடைய சுவீட்டர் பக்கம் அந்த ஊரிலேயே அதிகம் பேரால் பின்தொடரப்படுகிறது. அவன் போகாத நகராட்சிகளே நாட்டில் இல்லை. புதிதாக உருவாகும் பக்கத்து மாநில நகராட்சிக்குக்கூட அடுத்த ஆண்டு வரப் போவதாக இப்போதே முன்பதிவு செய்துகொண்டான் வெள்ளை.
மாதந்தோறும் நகராட்சி அலுவலகத்தில் மைக்கைப் பிடித்துப் பேசுவது வெள்ளைச்சாமிக்கு வாடிக்கை. அந்தப் பேச்சைப் பதிவுசெய்து நகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தான் வெள்ளை. எடுபிடியாக இருந்த தன்னாலேயே இந்த அளவு உயர முடியும் என்றால், ஒழுங்காகப் படிக்கும் மாணவர்கள் எந்த அளவு உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அந்தப் பேச்சின் வழியே அளித்தான் வெள்ளை.
தான் மூணாங்கிளாஸ்தான் படித்திருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை வெள்ளைக்குக் கிடையவே கிடையாது. அந்த ஊரிலேயே தான்தான் அறிவாளி என்று காட்டிக்கொள்வான். அவர் மூணாங்கிளாஸ் படித்ததற்குக்கூட ஆதாரம் இல்லை என்று அவரை எதிர்ப்பவர்கள் சொல்வார்கள். ஆனால், அதை எல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டான் வெள்ளை. வெள்ளையின் மூளைதான் காலியாக இருக்குமே தவிர வெள்ளையின் வயிறு எப்போதும் நிறைந்தே இருக்கும். அவரது தொப்பையின் அளவைப் எல்லோரும் கிண்டலடிப்பார்கள். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் இருப்பதைப் போல் இரு மடங்கு அதிகமாகிவிடும் சாப்பிட்ட பின்பு அவரது தொப்பை. 68 அங்குலத் தொப்பைக்காரர் என்று பார்ப்பவர்கள் சொல்வார்கள். வெள்ளைக்கு அதில் பெருமிதமே.
தொப்பைக்காரர் என்று கிண்டல் செய்வோரின் வாயை அடைப்பதற்காக, ஒரு நாள் தான் செய்யும் கடினமான உடற்பயிற்சி வீடியோவைத் தனது சுவீட்டர் பக்கத்தில் வெளி இட்டார் வெள்ளை. அதைப் பார்த்த ஆணவபுரத்துக்காரர்களே அசந்து போனார்கள். அந்த அளவு ஆன்ம சுத்தியுடன் உடற்பயிற்சி செய்தார் வெள்ளை. தரையில் ‘புஷ் அப்’ செய்தபோது அவரது தொந்தி தரையின் மீது மோதியது.
ஆனாலும் அவருடைய தொந்திக்கு எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. அது தரைக்கே சவால்விட்டது. சின்ன வயதில் ‘ சேவை மன்ற’த்தில் உடற்பயிற்சி செய்த காலம் அவர் நினைவில் எழுந்தது. இந்த வீடியோவை சுவீட்டர் பக்கத்தில் பிற நகராட்சித் உள்ளவர்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். சுவீட்டர் தொடங்கிய காலம் முதல் இதுவரை வெளியான அனைத்து வீடியோக்களையும்விட அதிகம் பேரால் பார்க்கப்பட்டது வெள்ளையின் உடற்பயிற்சி வீடியோ.